ஐக்கிய தேசிய கட்சி உறுதி மொழியை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது கண்டனத்திற்குரியது - ஐக்கிய மக்கள் சக்தி - Sri Lanka Muslim

ஐக்கிய தேசிய கட்சி உறுதி மொழியை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது கண்டனத்திற்குரியது – ஐக்கிய மக்கள் சக்தி

Contributors

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட விரும்பும் உள்ளுராட்சி உறுப்பினர்களிடம் ஐக்கிய தேசிய கட்சி உறுதி மொழியை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதை கண்டிக்கின்றோம். இது குறித்த உறுப்பினர்களின் அடிப்பமை உரிமையை மீறும் செயலாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு கடிதமொன்றை அனுப்பி அவர்களிடம் உறுதி மொழியை பெற்றுக் கொள்ள முன்னெடுக்கப்படும் முயற்சியானது குறித்த உறுப்பினர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயற்பாடாகும்.

இரு தசாப்தங்களுக்கும் அதிக காலம் ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலைக்கு கட்சியை பலவீனப்படுத்திய தலைமைத்துவம் தொடர்பில் சோர்வடைந்த ஆதரவாளர்கள் கட்சி முழுமையாக மாற்றமடைய வேண்டும் என்பதையே எதிர்பார்த்தனர்.

எனினும் அதற்கு வாய்ப்பளிக்காமல் ராஜபக்ஷாக்களுடன் இரகசிய கூட்டணியமைத்து கட்சியையும் ஆதரவாளர்களையும் ஏமாற்றியமைக்கான பிரதிபலன் பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கப் பெற்றது.

முதலாவது பாராளுமன்றத்திலிருந்து உறுப்பினர்களைக் கொண்டிருந்த கட்சி தற்போதைய பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக் கொள்ளவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்க்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி குறுகிய காலத்திற்குள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகியுள்ளது.

இந்த வெற்றியின் காரணமாக எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக உள்ளுராட்சி உறுப்பினர்கள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர். இதனை தடுப்பதற்காக உறுதி மொழி எடுக்க முற்படல் போன்ற மேலாதிக்கமான ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடும் ஐக்கிய தேசிய கட்சி இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.

உறுப்பினர் பதவி நீக்கப்படும் அல்லது கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என்ற அச்சுறுத்தல்களுக்கு அடி பணியாத உள்ளுராட்சி உறுப்பினர்களிடம் உறுதி மொழி எடுத்து அவர்களை அச்சப்படுத்தும் செயற்பாட்டை நாம் கண்டிக்கின்றோம்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுகின்ற சகல உறுப்பினர்களுக்காகவும் எமது கட்சி முன்னிலை வகித்து செயற்படும்.

கேசரி

Web Design by Srilanka Muslims Web Team