ஐயா ஆசிரியரே (கவிதை) » Sri Lanka Muslim

ஐயா ஆசிரியரே (கவிதை)

teacher

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


ஐயா ஆசிரியரே
மெய்யாகச் சொல்கின்றேன்
படிப்பிக்கும் உங்கள் சேவை
அடிப்படையில் மிக உயர்வு

கண் கட்டி வித்தைபோல
வெண்கட்டி வித்தை காட்டி
சீர் திருத்தம் செய்யும் ஆட்கள்
யார் இருக்கார் உங்களைப் போல.

இப்படி ஏற்றிப் புகழ்ந்தும்
அப்பப்ப சில ஆசான்கள்
போடுகின்ற கூத்துக்களினால்
நாடே நாறுதையா

மனைவியுடன் பழகுவது போல
மாணவியுடன் பழகும் ஆளை
நினைக்கின்ற போதே மனதில்
நெருப்பா எரியுதையா

அசிங்கமான வார்த்தைகளினால்
பசங்களைத் திட்டும் போது
கசங்குது எதிர் காலங்கள்
பொசுங்குது பிஞ்சின் மனங்கள்

பின்னேர டியுசன் வகுப்பு
என்னிடம் வராது போனால்
உன்னிலை மோசமாகும்
உரைக்கையில் உறைக்குதையா

இப்படி ஆட்களைத் தேடி
அப்படியே விரட்டிப் போட்டால்
ஆசிரிய சேவை என்பது
பேசரிய சேவையாகும்

இன்னொரு பக்கமும் ஐயா
இங்கே நான் சொல்ல வேண்டும்
தன்னையே உருக்கி அவர்கள்
என்னையும் உன்னையும் நன்றாய்
வளர்க்கிறார் ஆனால் வாழ்வில்
வளப் பற்றாக் குறைகளினால்
மாட்டி நிற்கின்றார்கள்
காட்டிக் கொள்ள மாட்டார்.

கொடுக்கிற வேதனத் தொகைகள்
அடுப்படித் தேவைக்கான
அடிப்படைச் செலவுகளுக்கே
அளவானதாய்ப் போக
மீதமுள்ள செலவுகளுக்கு
மாதா மாதம் தேதி வரை
திட்டமிட்டு வாழுகின்றார்
கட்டுப்பாட்டு வாழ்க்கை அவர்கள்

ஆனாலும் யாரிடமும்
கூனிக் குறுகாமல்
சமுகத்தில் மதிப்போடு
சுமுகமாய் இருக்கின்றார்கள்

அகரமும் அறியாதோரை
சிகரத்தை எட்ட வைத்தார்.
பகரமாய் சமூக உதவி
நகரனும் அவரை நோக்கி.

இன்னும் படித்துத் தந்த
என்னுடைய சேரைக் கண்டால்
உள்ளுக்குள் ஓர் மரியாதை
சொல்லாமல் ஊற்றெடுக்கும்

குறைவான வசதி கொண்டு
நிறைவான சேவை செய்யும்
அறிவான ஆசிரியர்களுக்கு
இறைவன் அருள் புரிவானாக.

Web Design by The Design Lanka