ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைய வாய்ப்பில்லை - பிரான்ஸ் » Sri Lanka Muslim

ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைய வாய்ப்பில்லை – பிரான்ஸ்

turkey

Contributors
author image

Editorial Team

(BBC)


ஐரோப்பிய நாடுகள் ஒன்றியத்தில் தற்போது துருக்கி இணைவதற்கான வாய்ப்பில், எந்த முன்னேற்றமும் இல்லை என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங், துருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்துவானிடம் தெரிவித்தார்.

பாரிசில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் மக்ரோங் பேசுகையில், 2016ஆம் ஆண்டு துருக்கியில் ஆட்சி கவிழ்க்கும் முயற்சி தோல்வியடைந்ததில் இருந்து ஏற்பட்ட சில சம்பவங்களால், மனித உரிமை விவகாரங்களில் வேறுபாடு ஏற்பட்டதாக கூறினார்.

இந்நிலையில், ஐரேப்பிய ஒன்றியத்தில் சேர தொடர்ந்து முயற்சி செய்து சலிப்படைந்து விட்டதாக, துருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்துவான் தெரிவித்தார்.

சிரியாவுக்கு துருக்கி ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான செய்தியைக் குறித்து, செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் கோபமடைந்த எர்துவான், 2016ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்குக் காரணமான குல்லனிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினர் போல கேள்வி கேட்பதாக செய்தியாளரை சாடினார்.

“கேள்விகளை கேட்கும்போது கவனமாக இருக்க வேண்டும். யாரோ ஒருவரின் வார்த்தைகளைக் கொண்டு பேசக்கூடாது” என்றும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இருப்பதாக காட்டிக் கொள்ளும் பாசாங்கிற்க்கு முடிவுகட்டும் நேரமிது என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோங் கூறினார்.

“ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை பார்க்கும் போது, சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் தேர்வுகள் நாங்கள் ஈடுபட்டுள்ள செயல்முறைகளில் எந்த முன்னேற்றத்தையும் அனுமதிக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனாலும், துருக்கியுடன் இணக்கமான உறவை வைத்திருப்பது அவசியம் என்றும் உறுப்பினர் நிலைக்குக் குறைவான உறவுக்கான சாத்தியங்களை ஆராயும் தருணம் இது என்றும் மக்ரோங் தெரிவித்தார்.

துருக்கிக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறை வெறுப்பளிப்பதாகவும், துருக்கியின் நேரத்தை வீணடிப்பதாகவும் துருக்கி அதிபர் குற்றஞ்சாட்டினார். பெரும்பாலான துருக்கியர்கள், “இனியும் ஐரோப்பிய ஒன்றியத்தை விரும்பவில்லை” என்றும் எர்துவான் கூறினார்.

எனினும், ஐ.எஸ். அமைப்புக்கு எதிராகப் போராடுவதில் நிலவும் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் பாராட்டுத் தெரிவித்தனர்.

Web Design by The Design Lanka