ஐ.நா மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தின் பின், கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் என்ன..? - Sri Lanka Muslim

ஐ.நா மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தின் பின், கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் என்ன..?

Contributors

– Naushad Mohideenm-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு முந்திய நிலை பற்றிய எனது கருத்தை எனது கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தீர்மானத்தால் இலங்கைக்கு பாதிப்புக்கள் ஏற்படுமா அவ்வாறு ஏற்பட்டால் எந்த விதமான பாதிப்புக்கள் ஏற்படும் என்பன பற்றி பல்வேறு மட்டங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

ஆனால் எதுவுமே இன்றோ அல்லது நாளையோ ஏன் அடுத்த வருடமோ கூட நடக்கப் போகின்ற விடயங்கள் அல்ல. அவை நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். அதற்கிடையில் இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுகின்ற போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் அமுலாக்கத்திலும் தளம்பல் நிலை ஏற்பட வாய்ப்புண்டு.

இன்று முக்கியமாகப் பேசப்படுவது இந்தத் தீர்மானம் தொடர்பான விடயத்தில் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் கிடைத்துள்ள ஆதரவு எத்தகையது என்பது தான். அது தீர்மானத்தின் மீதான வாக்களிப்பின் அடிப்படையிலேயே முற்றிலும் தங்கி உள்ளது. இந்த வாக்களிப்பு மூன்று வகை கொண்டதாக அமைந்துள்ளது. ஒன்று தீர்மானத்துக்கு ஆதரவு (Yes) அதாவது இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு. இரண்டாவது தீர்மானத்துக்கு எதிரானது (No) அதாவது இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு. மூன்றாவது நடுநிலை (Abstain). இதில் முதல் இரண்டு நிலைப்பாடுகளும் சகலரும் அறிந்ததே. 

மூன்றாவது நிலைப்பாட்டை வைத்து தான் அரச பண்டிதர்களான அமைச்சர்களும் அவர்களின் அல்லக்கைகளும் வழமையாக தாம் செய்யும் உஷார் மடையர்களை குஷிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தீர்மானம் முடிவுற்ற கையோடு வெளியான அறிவிப்பில் 11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 22 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 14 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்துள்ளன என்று குறிப்பிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளியான அடுத்த அறிவிப்பில் 11 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று குறிப்பிடப்பட்டது. 

எந்தவொரு தீர்மானத்தின் மீதும் எந்தவொரு அமைப்பிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஆம் அல்லது இல்லை என்ற நிலைப்பாடுகளை வைத்து, அதன் பெரும்பான்மை நிலையைக் கருத்தில் கொண்டு தான் முடிவு எடுக்கப்படும். Abstain அல்லது நடுநிலை அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது வாக்களிப்பு முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. அது வெறும் கணக்கு சமப்படுத்தல் மட்டுமே. 

எனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது எமக்கு எதிரான எம்மீது நெருக்குதல் பிரயோகிக்கக் கூடிய பல பிரேரணைகளைக் கொண்டுள்ளது. எமக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் அவரது அலுலகத்தின் கரங்களையும் கண்கானிப்பையும் விசாலமாக்கி உள்ளது என்ற யதார்த்தத்தை விரும்பியோ விரும்பாமலோ மனக் கசப்புடன் ஏற்றுத் தான் ஆக வேண்டும். இந்தத் தீர்மானத்தால் வரப்போகும் விளைவுகள் காலம் எடுக்கும் என்பது ஒரு புறம் இருக்க சர்வதேச அரங்கில் எமது தேசம் இப்போது தலைகுணிந்து நிற்கின்றது என்ற யதார்த்த நிலையையும் நாம் ஜீரணித்தே ஆக வேண்டும். 

அடுத்ததாக ஏன் இந்த நிலை ஏற்பட்டது? ஜனாதிபதியும் பிரதமரும் கடைசி நேரத்தில் நேரடியாக களம் இறங்கி ராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டும் கூட அவர்கள் பேசிய நாடுகள் மற்றும் அமைப்புக்களைச் சார்ந்துள்ள நாடுகள் ஏன் இந்த விடயத்தில் அமைதி காத்தன?  இதில் இருந்து இனி எவ்வாறு மீண்டு வருவது? என்பது தான் ஒரு தேசம் என்ற வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டிய விடயமே தவிர தொடர்ந்தும் உஷார் மடையர்களை குஷிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது விவேகமானது அல்ல.

இந்தத் தீர்மானத்தில் முன்னரைப் போலன்றி முஸ்லிம்கள் தொடர்பான விடயங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. கடந்த காலங்களில் இவ்வாறான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட போது இலங்கைக்கு தமது ஆதரவை வெளிப்படையாக வழங்கிய பல முஸ்லிம் நாடுகள் அல்லது தமது சனத்தொகையில் பெரும்பான்மையான அல்லது கணிசமான அளவு முஸ்லிம்களைக் கொண்ட ஆசிய மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகள் இப்போது மௌனம் சாதித்துள்ளன. இந்த நாடுகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர ரீதியான பிரசாரங்கள் அணைத்தும் தோல்வி கண்டதே இதற்கு முக்கிய காரணம். அனுபவம் மிக்க ராஜதந்திரிகளை வைத்துக் கையாள வேண்டிய இந்த விடயத்தை அரசாங்கம் இம்முறை முதிர்ச்சியற்ற, போதிய அனுபவமற்ற புதியவர்களைக் கொண்டு கையாண்டுள்ளதாக பிரதான பிரிவு ஆங்கில ஊடகங்களில் பகிரங்கமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் நாடுகளினதும் அல்லது முஸ்லிம்களைக் கணிசமாகக் கொண்ட நாடுகளினதும் ஆதவைப் பெற்றுக் கொள்ள அரசாங்கத்துக்கு அருமையானதோர் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் இம்ரான் கானின் வருகை. அவர் ஒரு சீன முகவராக இங்கு வந்தாலும் கூட சீனா மூலம் அவருக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய பொறுப்பு முஸ்லிம் உலகில் இலங்கைக்கு ஆதரவை திரட்டி இந்தத் தீர்மானத்தின் கெடுபிடிகளில் இருந்து இலங்கையை விடுவிப்பதாகும். 

இப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இம்ரானின் முயற்சிகளும் தோற்றுப் போய் உள்ளன. ஆனால் அதற்கு எந்த வகையிலும் அவர் பொறுப்பல்ல. அவருடைய வருகைக்குப் பின், ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஒரு தீர்மானம் உள்ளது. அது எமக்கு எதிராக நிறைவேற்றப்பட்டால் சர்வதேச மட்டத்தில் நமக்கு தலைகுணிவு ஏற்படும். அந்தத் தீர்மானத்தில் இருந்து விடுபட முஸ்லிம் உலகின் ஆதரவு எமக்குத் தேவை என்பதை உணராமல் அல்லது வேண்டுமென்றே அதை பொருட்படுத்தாமல் இலங்கையில் முஸ்லிம்கள் விடயத்தில் வெளியான சில அறிவிப்புக்கள் (புர்கா தடை பற்றிய பேச்சுக்கள், இஸ்லாமிய நூல்கள் பற்றிய அறிவிப்பு, மதரஸாக்கள் தடை பற்றிய பேச்சு, சிலரின் கைதுகள்) என்பன இந்தத் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இதற்கு மேல் தன்னாலும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் இம்ரானும் மௌனம் காக்க நேரிட்டது.

இன்றைய நிலையில் சீனாவின் பொறியில் சிக்கி இருக்காவிட்டால் நிச்சயம் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

அரசாங்கம் ராஜதந்திர ரீதியான தனது நகர்வுகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. உள்ளுரில் அதன் கொள்கைகளை மீளாய்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சில பதவி நிலை நியமனங்களிலும் கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்துள்ளது. இவற்றை செய்வது ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் ஒரு பெரிய விடயமே அல்ல. மாறாக எமக்கு எதிராக 14 நாடுகளின் ஆதரவை ஏகாதிபத்தியவாத சக்திகளால் பெற முடியாமல் போனது என பொரலுகொட சிங்கத்தின் வாரிசும் அரசின் ஏனைய ஊது குழல்களும் உளரிக் கொண்டு இருப்பது கோமாளித்தனமாகும்.

Web Design by Srilanka Muslims Web Team