"ஐ.ம.ச சமர்ப்பித்துள்ள 21ஆவது திருத்தத்தை ஒதுக்குவதற்கு அரசாங்கம் முயற்சி" - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்! - Sri Lanka Muslim

“ஐ.ம.ச சமர்ப்பித்துள்ள 21ஆவது திருத்தத்தை ஒதுக்குவதற்கு அரசாங்கம் முயற்சி” – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்!

Contributors

மக்களை ஏமாற்றாது ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 21 ஆவது திருத்தத்தை முன்னெடுக்க அரசாங்கம் முன்வரவேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டை கட்டியெழுப்புவதற்காக சம்பிரதாய போக்கு மற்றும் நிலைப்பாடுகளிலிருந்து ஒதுங்கி ஒன்று பட்டு செயற்பட பிரதமர் அழைப்பு விடுத்தார். சகல கட்சிகளுடன் இணைந்து செயற்படும் நோக்கம் அவருக்கு இருப்பதாக காண்பித்தாலும் அது செயலிலும் நடத்தையிலும் இருக்க வேண்டும். சுதந்திரக் கட்சி உட்பட எதிரணியில் உள்ள சகல கட்சிகளும் நாட்டுக்காக ஒத்துழைப்புடன் செயற்படுவதாக அறிவித்துள்ளன. பணம் மற்றும் பதவிக்காக எதிரணி எம்பிக்களை தம் பக்கம் இழுக்கக் கூடாது. இதனை நிறுத்துமாறு சு.க தலைவர் மைத்திரிபால சிறிசேன வெளிப்படையாக கோரியிருந்தார். பேச்சில் ஒற்றுமை பற்றி பேசினாலும் செயலில் மாற்றமாகவே அரசு நடந்தது. தவறான கொள்கை மற்றும் தன்னிச்சையான செயற்பாட்டை முன்னெடுப்பதோடு போராட்டம் நடத்தும் மக்களுக்கு சிறிய ஓய்வை வழங்கும் வகையிலே அரசு செயற்படுகிறது. இந்த நெருக்கடிக்கு பொறுப்பானவர்களை பாதுகாக்கப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது.

தோல்வியடைந்த ஜனாதிபதியாக ஓய்வு பெறப்போவதில்லை எனவும் பதவிக்காலம் முழுவதும் ஆட்சியில் இருக்கப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது மக்களின் எதிர்பார்ப்புக்கு மாற்றமானது.

கடந்த காலங்களில் நாடு பல்வேறு மோதல்கள்,நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தாலும் இன்று போல் பெரும் நெருக்கடி ஒருபோதும் ஏற்படவில்லை.

பொருளாதார நெருக்கடிக்கும் அரசியல் நெருக்கடிக்கும் தீர்வாக 21 ஆவது திருத்தத்தை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. அதனை பாராளுமன்றம் ஏற்றுள்ளது.இது தொடர்பில் உச்ச நீதிமன்ற முடிவும் கிடைத்துள்ளது. ஆனால் அரசாங்கம் அதனை ஓதுக்குவதற்காக வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மக்களை ஏமாற்றாது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தத்தை முன்னெடுக்க முன்வரவேண்டும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team