எதிரணி, அரசு தரப்பு என்று இரண்டு தரப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது-மனோ! - Sri Lanka Muslim

எதிரணி, அரசு தரப்பு என்று இரண்டு தரப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது-மனோ!

Contributors
author image

Editorial Team

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், எதிர்கட்சிதலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, ஊவா மாகாணசபைக்கான   ஐதேக தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும்,  பதுளை மாவட்டத்தில் எதிரணிக்கு ஆதரவாக சுதந்திர மேடை அமைப்பு ஏற்பாடு செய்துவரும் கூட்டங்களிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

 

இவ்வரிசையில் முதற்கூட்டமாக சுதந்திர மேடை அமைப்பு, பௌர்ணமி விடுமுறை தினமான 8ம் திகதி காலை, பதுளை பஸ் நிலையத்துக்கு எதிரில் தபால் நிலைய மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் மனோ உரையாற்றவுள்ளார்.

 

இன்று காலை ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜமமு தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில், ரணில் விக்கிரமசிங்கவின் ஐந்தாம் ஒழுங்கை பிரத்தியேக இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்த மனோ கணேசன்  கூறியதாவது,

 

ஊவா மாகாணசபை தேர்தலில், தமது கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தலைமைத்துவ  சபை தலைவர் கரு ஜயசூரிய ஆகியோர் எமக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்புகளை ஏற்றுக்கொண்டு ஆளும் அரசுக்கு எதிராக தமிழ் மக்களின் வாக்குகளை அணிதிரட்டும் முயற்சியில் நாம் ஈடுபட விரும்புகின்றோம்.

 

தமிழ் வாக்குகளை சிதறடிக்ககூடாது என்ற அடிப்படையில் நாம் இந்த தேர்தலில் நேரடியாக போட்டியிடுவதை தவிர்த்துக்கொண்டோம். கடந்த காலங்களில் எதிரணி, அரசுதரப்பு என்ற வித்தியாசங்களையும்  மறந்து, தமிழ் பிரதிநிதித்துவம் என்ற நல்லெண்ண நோக்கில் நாம் சப்ரகமுவ மாகாணசபை  தேர்தலின் போது அரசில் அங்கத்துவம் கொண்டுள்ள கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டோம்.

 

எனினும் எமது நல்லெண்ண நோக்கை முன்னெடுத்து செல்ல இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவறிவிட்டது. அத்துடன், அக்கட்சியினர், கொழும்பு மாவட்டத்தில் பொறுப்பில்லாமல் போட்டியிட்டு, தமிழ் பிரதிநிதித்துவத்துக்கு ஊறு விளைவித்தார்கள். தமிழ் பிரதிநிதித்துவம் என்ற நல்லெண்ண நோக்கில் தமிழ் கட்சிகள் இன்று இணைந்து செயல்பட முடியாமைக்கு இதொகா முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

எனவே தமிழ் மக்கள் மத்தியில், எதிரணி,  அரசு தரப்பு என்று இரண்டு தரப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாத ஒரு நிலைமை  இன்று உருவாகிவிட்டது. இந்த அராஜக இனவாத, மதவாத அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களிக்க தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எந்த ஒரு காரணமும் கிடையாது. இந்த அரசுக்கு எதிராக ஊவா தமிழ் மக்கள்  வாக்களிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

 

இது தொடர்பாக நமது கட்சியின் அரசியல்குழு எதிர்வரும் வியாழக்கிழமை நான்காம் திகதி மாலை கொழும்பில் கூடி உரிய முடிவுகளை எடுக்கவுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team