'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்பது பெரும்பான்மை இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்கான ஒரே சட்டம் என்பதை, தலைவர் ரிஷாட்டின் கைது முயற்சிகளின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது" - முஷாரப் எம்.பி! » Sri Lanka Muslim

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பது பெரும்பான்மை இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்கான ஒரே சட்டம் என்பதை, தலைவர் ரிஷாட்டின் கைது முயற்சிகளின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது” – முஷாரப் எம்.பி!

FB_IMG_1602750050837

Contributors
author image

ஊடகப்பிரிவு

“ஒரே நாடு ஒரே சட்டம்” என ஜனாதிபதி, தனது பாராளுமன்ற அக்கிராசன உரையில் கூறிய வாசகம் பற்றி இதுவரையில் தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை. ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைது முயற்சிகளை பார்க்கின்றபோது, ஒரே நாடு ஒரே சட்டம் என்பது, இலங்கை நாட்டில் இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்கான ஒரே சட்டம் என புரிந்துகொள்ள முடிகின்றது. இது சட்ட ஆட்சி, நல்லாட்சி போன்ற நல்ல விழுமியங்களற்ற, ஒரு ஏகாதிபத்திய வல்லாட்சியை நோக்கி, அபாயகரமான சூழலுக்குள் இந்த நாடு தள்ளப்படுவதையே காட்டுகிறது என மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளதாவது,

“மக்கள் சமூகமொன்றின் தலைவர் அல்லது பிரதிநிதி என்ற வகையில், மன்னாரிலிருந்து புத்தளத்திற்கு அகதிகளாக வெளியேறிய மக்களுக்கு அவர்களின் அடிப்படை வாக்குரிமையை பதிவு செய்ய போக்குவரத்து வசதிகள் செய்தமை, ஒரு பெரும் குற்றச்சாட்டு என சித்தரித்து அரசியல் செய்யும் அரசாங்கத்தின் அரசியல் வறுமையை நினைத்து வெட்கப்படுகிறேன்.

இனவாதத்தை மூலதனமாக வைத்து ஆட்சியை பிடித்த இந்த அரசாங்கம், சரிந்து போகும் தம் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை தொடர்ச்சியாக தக்க வைக்க இப்படியான கைங்கரியத்தை கட்டவிழ்த்துள்ளனர்.

பெரும் பெரும் சர்ச்சைக்குரிய கொலைக்குற்ற வழக்குகளை எதிர்கொண்டு பின்னர், அதிகாரம் கிடைத்தவுடன் அவற்றை மூடிமறைத்து, இப்போது சொகுசாக வாழும் ஆட்சியாளர்கள், நேர்மையான மக்கள் தலைவன் ரிஷாட் பதியுதீனை அற்ப காரணங்களைக் காட்டி, கைது செய்ய முயல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

முன்பதாக, அரசாங்கத்தின் நிர்வாகப் போக்குகள் உள்ளிட்ட விவகாரங்களில் சற்றளவு திருப்தியோடு இருந்த நாம், அரசாங்கத்தின் தற்கால தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரல்களைப் பார்க்கின்ற போது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.

நீதிக்கு புறம்பாக, வெறும் அரசியல் பழிவாங்கல்களுக்காக எம் தலைவர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் முயற்சிகளை உடனடியாக இந்த அரசாங்கம் கைவிடுவதன் மூலம், சிறுபான்மை மக்கள் சமூகத்தை அரவணைத்து செல்லும் நம்பிக்கை எம் மக்களுக்கு ஏற்படும். இல்லாத பட்சத்தில், தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களை இந்நாட்டிலிருந்து துருவப்படுத்தும் இத்தகைய செயற்பாடுகளால், இந்நாடு மீண்டும் அதளபாதாளத்திற்கு செல்லும் என்பதில் எந்த ஐயமுமில்லை” என்றார்.

Web Design by The Design Lanka