கல்முனை சாஹிரா ஒழுக்கத்துக்கு முன்னுதாரணமாகத் திகழுகின்றது - கல்லூரி அதிபர் முஹம்மத் » Sri Lanka Muslim

கல்முனை சாஹிரா ஒழுக்கத்துக்கு முன்னுதாரணமாகத் திகழுகின்றது – கல்லூரி அதிபர் முஹம்மத்

zakira kalmunai pri mohamed

Contributors
author image

M.S.M.ஸாகிர்

கிழக்கு மாகாணத்தின் கல்முனை தொகுதியில் அமையப்பெற்றுள்ள கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை ஒழுக்க விடயத்தில் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது என அதிபர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.

கல்முனை சாஹிராவில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுக்க விதிமுறைகள் பற்றி மாணவத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கல்முனை சாஹிராகல்லூரியின் முக்கிய இடங்களில் சீ.சீ.ரீ.வீ. கமெரா பொருத்தப்பட்டு எப்போதும் கல்லூரி நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதனால் பாடம் நடைபெறாத வேளையில் சுற்றித் திரிதல், வீண் விளையாட்டுக்களில் ஈடுபடுதல், பாடசாலையை விட்டு வெளியே செல்லுதல், வீண் பிரச்சினைகளில் ஈடுபடுதல் என்பன முற்று முழுதாக தடுக்கப்பட்டு, கல்லூரி ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

பாடங்கள் நடைபெறாத வேளைகளில் மாணவர்கள் மீட்டல் பாடங்களை மீட்டிப் பார்க்கக் கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. உரிய வேலைகள் உரிய நேரத்தில் தவறாமல் நடைபெறுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

அது மட்டுமல்லாது பெருவிரல் அடையாள இயந்திரம் பாடசாலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் எந்த வித தொந்தரவுகளும் இன்றி பாடசாலையின் அனைத்து செயற்பாடுகளும் உரிய நேரத்திற்கு நடைபெறுவதும் குறிப்பிடத்தக்க விடயம்.
இது குறித்து அதிபர் முஹம்மத் மேலும் கூறியதாவது,

ஒரு மாணவன் ஒழுக்கத்தை முற்று முழுதாக கற்கக்கூடிய ஓர் இடமாக பாடசாலை சூழல் காணப்படுகின்றது. எனவே இங்கிருந்தே நாம் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க கொடுக்க வேண்டும். ஒழுக்கம் தான் ஒரு மாணவனுக்கு அடிப்படையான ஒரு விடயமாக இருக்கின்றது. ஒழுக்கத்தை சரியாக நடைமுறை வாழ்வில் கடைப்பிடிக்காமல் ஒருவர் உயர் கல்வி கற்று, உயர் தொழிலுக்குச் சென்றாலும் ஒழுக்கம் இல்லை என்றால் அவரால் எங்கு சென்றாலும் மிளிர முடியாது.

எனவே அதற்கான ஒரு வழிமுறையாகத்தான் கடந்த 1ஆம் தவணை இறுதியில் சாஹிராக் கல்லூரியில் சீ.சீ.ரீ.வீ. கமரா தொகுதி ஒன்று பொருத்தப்பட்டது. கல்லூரியின் பல்வேறு பகுதிகளையும் அதிபர் காரியாலயத்திலிருந்து பார்வையிடுவதற்கு வசதியாக 10 கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பாடசாலை மேற்பார்வை இலகுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கு எமது கல்லூரியின் எஸ்.ரீ.சீ அமைப்பு மிக்க ஒத்துழைப்பாக இருந்தது. வெகுவிரைவில் மேலும் 6 கமெராக்களைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. பாடசாலை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பெற்றோர் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. என்று தெரிவித்தார்.

அத்தோடு, இதற்காக ஒத்துழைப்பு வழங்குகின்ற ஆசிரியர்கள், கல்வி சார ஊழியர்கள், பெற்றோர்கள் விசேடமாக மாணவர்கள் அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

சாஹிரா மாணவர்களின் ஒழுக்க விடயங்களைப் பார்வையிடுவதற்கு ஏனைய பாடசாலை மாணவர்கள் வருகை தரவுள்ளதாகவும் கல்முனை சாஹிரா பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றது.

Web Design by The Design Lanka