ஒழுக்காற்று நடவடிக்கை : ஓய்வு பெற்ற நீதிபதி அவசியமா..? - Sri Lanka Muslim

ஒழுக்காற்று நடவடிக்கை : ஓய்வு பெற்ற நீதிபதி அவசியமா..?

Contributors

கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு கொண்டிருந்தன. முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாஸாக்களை எரித்த ஆட்சியாளர்களின் கால்களில் அடிமைப்பட்டு கிடந்தனர். இவர்கள் மீதான மக்கள் எதிர்ப்பு வலுவாகியது. வேறு வழியின்றி முஸ்லிம் கட்சிகள், தங்களது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தன. ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்துள்ளன. இந்த ஒழுக்காற்று நடவடிக்கை மக்களை ஏமாற்றும் நாடகமா என பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

தற்போதைய மு.காவின் செயற்பாடுகளை நோக்கும் போது இது மக்களை ஏமாற்றும் ஒன்று என்பதை எம்மால் உறுதி செய்துகொள்ள முடியும். இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் மு.காவின் தலைவரும், குறித்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகவே இணைந்து செயற்பட்டுள்ளனர். மக்களிடம் செல்லும் போது மாத்திரம் மு.காவின் தலைவர் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களை, தன்னோடு அழைத்து செல்வதில்லை. அழைத்து செல்லும் நிலை ஏற்படும் வரை அழைத்து செல்ல மாட்டார். அவ்வளவு தான்….அவர்கள் மக்களை ஏமாற்றும் தந்திரங்களைத்தையும் கற்றுத் தேறியவர்கள்.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பிறகு அ.இ.ம.கா, தனது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் எந்த உறவையும் பேணவில்லை என்பதை உறுதிபட சொல்ல முடியும். மு.காவானது ஜனாதிபதியை சந்தித்த குறித்த நாளில் அ.இ.ம.காவும் ஜனாதிபதியை சந்தித்திருந்தது. அ.இ.ம.கா, தனது கட்சியின் முக்கியஸ்தர்களுடனேயே சென்றிருந்தது. இந்த விடயத்தை ஒப்பீடு செய்து பார்த்தால் அ.இ.ம.காவின் நேர்மை, பலம் ஆகியவற்றை அறிய இயலும். ஒரு கட்சியின் பலம் கொள்கையே! மாறாக பாராளுமன்ற உறுப்பினர்களல்ல. பாராளுமன்ற உறுப்பினர்களை காட்டி கௌரவத்தை பேணும் நிலையில் தான் மிக நீண்ட வரலாறு கொண்ட மு.கா உள்ளதா என்ற வினா எழுவது நியாயமானதல்லவா?

ஒரு கட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விட கொள்கையே அவசியம். மு.காவின் தலைவர் கட்சியின் கொள்கையை மதிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து செல்வதன் மூலம், மு.காவுக்கு கொள்கையை விட பாராளுமன்ற உறுப்பினர்களே ( இன்னுமொரு வகையில் சொல்வதானால் தனிப்பட்ட நபர்கள் ) அவசியம் எனும் செய்தியை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி நலிவான கட்சி சமூகத்துக்கு அவசியமா? மு.காவின் தலைவராக அஷ்ரப் இருந்த போது, மு.காவின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறான தவறை இழைத்திருந்தால், இவ்வாறு தான் செயற்பட்டிருப்பாரா?

ஒரு கட்சியின் அடித்தளம் பலமாக இருந்தால், ஒரு கட்சி தனி நபருக்கு அஞ்ச தேவையில்லை. அஷ்ரப் தலைமையிலான மு.கா தனி நபர்களில் தங்கியிருக்கவில்லை. அவ்வாறான நிலையிலேயே மு.காவானது ஹக்கீமிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவ் விடயமானது தற்போதைய மு.காவின் அடித்தளம் பலமாக இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை நீக்கும் போது கட்சி அழியும் என நினைக்கலாம். பிழையானவர்களை வைத்தே கட்சியை பாதுகாக்க வேண்டும் என்றால் அப்படி ஒரு கட்சி அவசியமா? அந்த கட்சியின் எதிர்கால பாதையை எவ்வாறு நேரியதாக எதிர்பார்க்க முடியும். இவர்களை வைத்துக்கொண்டு ” ஒரே நாடு, ஒரே நீதி ” செயலணி பற்றி ரணிலிடம் பேசினாராம் ஹக்கீம். இது பெரும் ஊடக செய்தியாக இன்று வெளி வந்திருந்தது. ஹக்கீம் அழைத்துச்சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்த அரசல்லவா இதனை செய்திருந்தது. இதனை ஹக்கீம் ரணிலிடம் சொல்லும் போது ரணில் மனதுக்குள் சிரித்திருப்பார் ( சிறிய வெட்கமும் இல்லாமல் இது பற்றி தன்னிடம் பேசுகிறார்கள் என நினைத்து ).

மு.கா தலைவர், தனது பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு அழைத்து சென்றது தவறல்ல. ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டிருப்பதாக கூறிக்கொண்டு, அவர்களை அழைத்து சென்றதே தவறாகும். இங்கு தான் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். மக்களை அடி முட்டாள்களாக நினைத்து, ஏமாற்றி அரசியல் செய்ய முனைவதே மாபெரும் தவறாகும்.

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team