ஓட்டமாவடி மஜ்மா நகரில் இன்னும் 700 உடல்களை நல்லடக்கம் செய்யலாம் - முடியாது என்ற வதந்திகளை நம்பாதீர்கள்..! - Sri Lanka Muslim

ஓட்டமாவடி மஜ்மா நகரில் இன்னும் 700 உடல்களை நல்லடக்கம் செய்யலாம் – முடியாது என்ற வதந்திகளை நம்பாதீர்கள்..!

Contributors

– எஸ்.எம்.எம்.முர்ஷித் –

ஓட்டமாவடி சூடுபத்தினைசேனை பகுதியில் வெள்ளிக்கிழமை வரை 301 உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மேலும் 700 மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்ய முடியும் என ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எம்.எஸ்.சிஹாப்தீன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சூடுபத்தினைசேனை பகுதியில் கொரோனாவினால் அடக்கம் செய்யப்படும் நிலைமைகள் தொடர்பில் பிரதேச மட்ட கலந்துரையாடல் சபை மண்டபத்தில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஓட்டமாவடி சூடுபத்தினைசேனை பகுதியில் கொரோனாவினால் அடக்கம் செய்யப்படும் இடத்தில் உடல்களை அடக்க செய்ய முடியாது என்று சிலர் போலியான பதிவுகளை இட்டு வருகின்றனர். இங்கு நாங்கள் அவ்வாறு அடக்கம் செய்ய முடியாது என்று கூறவில்லை. இதனால் ஓட்டமாவடி பிரதேசத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் குழப்பத்தினை உண்டு பண்ணும் செயலாக அமைகின்றது.

குறித்த சூடுபத்தினசேனை பகுதியில் வெள்ளிக்கிழமை வரை 301 உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மேலும் 700 மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்ய முடியும். குறித்த பகுதியில் மூன்று ஏக்கர் பரப்பளவு காணி உள்ளது. இதில் ஆயிரத்திற்கு மேல் அடக்க முடியும் என்று பாதுகாப்பு தரப்பினரின் கணிப்பில் காட்டப்படுகின்றது. 

எனவே சூடுபத்தினசேனை பகுதியில் இன்று எழுநூற்றி ஐம்பது உடல்களை அடக்கம் செய்ய முடியும் என்பதை இலங்கை வாழ் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு அரசாங்கம் மேலும் உடல்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான இடங்களை அடையாளப்படுத்த வேண்டும்.

ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் உடல்களை அடக்குவதற்கு சிலர் சபையின் பெயரினை பயன்படுத்தி பணம் அறிவிடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. சபையின் மூலம் பணம் அறிவிடுவதற்கு எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை. எனவே பணம் அறவிடுபவர்களுக்கு எதிராக சபை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்.

அத்தோடு உடல்கள் அடக்கம் செய்யப்படும் பகுதியினை அண்டி விவசாயம் செய்ய பதினைந்து நபர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு மாற்றுக் காணி வழங்குவதற்கு அரசாங்க அதிபர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் பிரதி தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை, சபையின் நிருவாக உத்தியோகத்தர் ஏ.அக்பர், சபை உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team