ஓரினச்சேர்க்கை குற்றம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது – ப.சிதம்பரம் - Sri Lanka Muslim

ஓரினச்சேர்க்கை குற்றம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது – ப.சிதம்பரம்

Contributors

ஓரினச்சேர்க்கை குற்றமல்ல’ என்று டெல்லி ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த தீர்ப்பினை ரத்து செய்தது. ‘

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377-ன்கீழ் ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்தான், அந்த சட்டப்பிரிவு இருக்கிறவரை ஓரினச்சேர்க்கையை குற்றம் அல்ல என்று கோர்ட்டு கூற முடியாது’ என சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளது. இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் இது தொடர்பாக நேற்று கூறியதாவது;

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தவறானது. ஏமாற்றம் அளிக்கிறது. இதை சரி செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் ஆராயப்படும். இந்த தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யுமாறு சீராய்வு மனு அல்லது நிவாரண மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், தற்போதைய சமூக, நல்லொழுக்க மதிப்பீடுகளை சுப்ரீம் கோர்ட்டு கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவு 377 என்பது 1860-ம் ஆண்டு வந்ததாகும். இது அந்தக்காலத்திய சமூக, நல்லொழுக்க மதிப்பீடுகள், உளவியல், உடற்கூறு, மரபணுவியல் சார்ந்ததாக, மிக மோசமானதாக அமைந்தது.

இப்போது மனித உளவியல், மனித உடற்கூறு, மனித மரபணுக்கூறு ஆகியவை பற்றிய அறிவு வளர்ந்திருக்கிறது. இதுதான் இன்றைய சமூக, நல்லொழுக்க மதிப்பீடு ஆகும். எனவே இதுதான் இன்றைய சட்ட மதிப்பீடும் ஆகும். எனவே சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு காலாவதியான ஒன்று. அதை முழுமையாக திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

“டெல்லி மாணவியை ஒரு காமுக கும்பல் கற்பழித்து கொன்றபோது, கற்பழிப்பு சட்டங்கள் திருத்தப்பட்டன. அப்போது அரசு ஏன் இந்திய தண்டனைச்சட்டத்தின் 377-வது பிரிவை திருத்தவில்லை?” என்று ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் விரிவான பதில் அளித்து கூறியதாவது:

ஐகோர்ட்டு தீர்ப்பு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ஐ ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கொண்டுவந்திருந்தது. இரு நபர்களின் சம்மத ஓரினச்சேர்க்கை, அந்தரங்கமாக மேற்கொள்கிற ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்றுதான் கூறப்பட்டிருந்தது. எனவே 377-வது இந்திய தண்டனை சட்டப்பிரிவை திருத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377 தொடரலாம். ஏனெனில், சம்மதமில்லாமல் இரு நபர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது என்பது இப்போதும் குற்றம்தான். எனவே அந்த சட்டப்பிரிவில் திருத்தம் செய்யும் நிலை நேரிடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில், பாராளுமன்றம் உரிய முடிவை எடுக்கும் என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கமல்நாத் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோன்று, ‘டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை மீண்டும் திரும்பக்கொண்டு வரும் வகையில் எல்லா வாய்ப்புகளையும் அரசு பரிசீலித்து வருகிறது. இரு நபர்களின் சம்மத ஓரினச்சேர்க்கையை கிரிமினல் குற்றம் அல்ல என்ற நிலையை ஏற்படுத்துவோம்’ என்று மத்திய சட்ட மந்திரி கபில்சிபல் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team