கசினோ சூதாட்டம் உட்பட ஆடம்பர ஹோட்டல் நிர்மாணிப்புக்கான உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்து- சூதாட்ட நிலையம் மீண்டும் திறப்பு? - Sri Lanka Muslim

கசினோ சூதாட்டம் உட்பட ஆடம்பர ஹோட்டல் நிர்மாணிப்புக்கான உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்து- சூதாட்ட நிலையம் மீண்டும் திறப்பு?

Contributors

கொழும்பில் நிர்மாணிக்கப்பட உள்ள உத்தேச கசினோ சூதாட்ட நிலையம் அடங்கிய ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் கலப்பு வர்த்தக ஸ்தாபனங்கள் அடங்கிய முதலீட்டு திட்டங்களுக்கான உடன்படிக்கைகள் இன்று கையெழுத்திடப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின் புரோப்பட்டி எலியன்ஸ் கெப்பிட்டல் நிறுவனத்துடன் கொழும்பு ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் ஆடம்பர ஹோட்டலை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.

அத்துடன் ஹொங்கொங்கின் ஹெவிக் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் நைஸ் விவ் இன்வஸ்மென்ட் நிறுவனங்கள் இணைந்து ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையில் நிர்மாணிக்க உள்ள 250 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிலான அபிவிருத்திட்டம் உட்பட மேலும் ஒரு அபிவிருத்தித் திட்டத்திற்கான உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட உள்ளன.

அதேவேளை சைனா கோமியூனிகேஷன் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் 1300 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேற்கொள்ள உள்ள கோட்டை அபிவிருத்தித் திட்டத்திற்கான உடன்படிக்கையும் இன்று கையெழுத்திடப்படுகிறது.

23 பொலிஸாரை இடமாற்றம் செய்ய காரணமான கசினோ சூதாட்ட நிலையம் மீண்டும் திறப்பு

பொலிஸ் திணைக்களத்தின் திட்டமிட்ட குற்றச் செயல்களை விசாரணை செய்யும் பிரிவினரால் கடந்த 4 ஆம் திகதி சுற்றிவளைக்கப்பட்ட கொழும்பு யூனியன் பிரதேசத்தில் உள்ள கசினோ சூதாட்ட நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சூதாட்ட நிலையம் கடந்த 11 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டதுடன் 12 ஆம் திகதி மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்று அந்த சூதாட்ட நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.

மேற்படி கசினோ சூதாட்ட நிலையம் அடிக்கடி பொலிஸாரினால் சுற்றிவளைப்பட்டதுடன் அவ்வப்போது மூடப்பட்டது.

இந்த கசினோ நிலையம் காலஞ்சென்ற பிரபல வர்த்தகரான லக்கி நெத்திகுமார என்பவரின் மனைவிக்கு சொந்தமானது என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லக்கி நெத்திகுமாரவின் இரண்டு புதல்விகளில் ஒருவர் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் மகனை மணமுடித்துள்ளதுடன் மற்றைய மகள் பிரதியமைச்சர் நியோமால் பெரேராவை மணமுடித்துள்ளார்.

அத்துடன் பொலிஸார் அடிக்கடி சுற்றிவளைப்பை மேற்கொண்டாலும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய நபரின் ஆதரவு இருப்பதாலேயே இந்த நிலையம் மீண்டும் மீண்டும் திறக்கப்படுகிறது என்றும் அந்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

பொலிஸார் அண்மையில் இந்த கசினோ சூதாட்ட நிலையத்தை சுற்றிவளைத்த போது அங்கு இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட 43 பேர் இருந்ததுடன் அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட 23 பொலிஸ் அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அரசாங்கத்தில் உள்ள முக்கிய அதிகாரி ஒருவரின் அழுத்தம் காரணமாகவே இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.(lw)

Web Design by Srilanka Muslims Web Team