கஞ்சா குற்றச்சாட்டில் கைதான வார உரைகல் ஆசிரியர் புவி நிரபராதி-நீதிமன்று தள்ளுபடி - Sri Lanka Muslim

கஞ்சா குற்றச்சாட்டில் கைதான வார உரைகல் ஆசிரியர் புவி நிரபராதி–நீதிமன்று தள்ளுபடி

Contributors

கடந்த மாதம் கஞ்சா குற்றச்சாட்டில் கைதான கத்தான்குடி வார உரைகல் ஆசிரியர் புவி றஃமத்துள்ளா நிரபராதி என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி புவி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாவது.
கடந்த மாதம் 31ம் திகதி எனது வீட்டிலிருந்து கஞ்சா பார்சல் ஒன்றைக் கைப்பற்றியதாக அபாண்டமானதொரு குற்றச்சாட்டைச் சுமத்தி மட்டக்களப்பு மாவட்ட நீதவான் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, நேற்றைய தினம் (26.11.2013) அந்நீதிமன்றத்தில் நீதிவான் நீதிபதி ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் அவர்களின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

எனது சார்பில் சட்டத்தரணிகளான F.X.S. விஜயகுமார், S.H.M. ரிஸ்வி, M. சன்முகம், A.M. றூபி, A.M.M. உவைஸ், M.I.M. நூர்தீன் ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.

வழக்கு அழைக்கப்பட்டதும் நான் குற்றவாளிக் கூண்டில் சென்று நின்றேன். சட்டத்தரணிகள் சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் மன்றில் கூறினர். என்னிடம் எதுவும் மன்றினால் வினவப்படவில்லை.

இந்நிலையில், ‘நீங்கள் போகலாம். நீதிமன்ற அழைப்பாணை கிடைத்தால் மாத்திரமே நீங்கள் சமூகமளிக்க வேண்டும்’ என நீதிமன்ற முதலியார் தெரிவித்தார். அதற்கமைய நான் மன்றிலிருந்து வெளியேறி வந்தேன்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காத்தான்குடி பொலீசாரைப் பயன்படுத்தி எனது வீட்டில் கஞ்சா இருப்பதாகத் 119 பொலீசாருக்குத் தகவல் கிடைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு வந்து, தேடுதல் நடாத்தி, அவ்வாறே கஞ்சாவும் இருந்ததாக கைப்பற்றியதாகக் கூறிய காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னவினால் அபாண்டமாகத் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில் குற்றமிழைக்காத எனக்காகவும், சத்தியத்திற்காகவும் பிரார்த்திக்குமாறு அன்பு நண்பர்களைக் கேட்டிருந்தேன்.

அதற்கமைய எனக்காகவும், உண்மை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் பிரார்த்தித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team