கடதாசி மகுட மதிலுடு » Sri Lanka Muslim

கடதாசி மகுட மதிலுடு

baseer

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

பஷீர் சேகுதாவுத்


2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசின் 100 நாள் பாராளுமன்றத்தில் றவூப் ஹக்கீம் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டு ஓரிரு மாதங்களில் அவருக்கு தம்புள்ளைப் பள்ளிக் காணி விவகாரத்தைத் தீர்த்து வைக்குமாறு கோரி நான் எழுதிய கடிதத்தை நினைவூட்டுவதற்காக இதனைப் பதிவிடுகிறேன்.

பௌத்த அடிப்படைவாதிகளின் அன்றைய இலக்காக இருந்த இவ்விவகாரத்தைத் தீர்த்து வைப்பதற்கான வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸ் தலைவராகவும் நகர அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்த ஹக்கீமுக்கு கிடைத்தமை ஒரு வரப்பிரசாதமாகும்.

இப்பள்ளிவாயிலுக்கான காணிப் பிரச்சினையை அன்றே தீர்த்து வைத்தால் கட்சிக்கும், தலைமைக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவும், பெருமதிப்பும் கிடைப்பதோடு பெருமத நிந்தனைகளில் இருந்து இஸ்லாமியர்களைப் பாதுகாக்கும் ஒரு உறுதியான தேசிய அரசியல் முன்னெடுப்பாக இது அமையும் என்றும் நம்பினேன். எனவே,மக்களுக்குத் தெரியத்தக்கதாக அவரை அறிவுறுத்த வேண்டும் என்பதற்காக கடிதம் எழுதி அக்கடிதத்தை ஊடகங்களுக்கும் விநியோகித்தேன்.

18 ஜூன் 2015 தொடக்கம் வீரகேசரி, தினக்குரல், சுடரொளி, விடிவெள்ளி, நவமணி ஆகிய தமிழ்த் தினசரிகளில் முக்கிய செய்தியாக எனது கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.

100 நாள் அமைச்சரவையில் இவரின் அமைச்சுக்கு உரித்துடையதாகவே அந்தப் பள்ளிக் காணி விவகாரம் இருந்தது. பின்னர்தான் இது சம்பிக்க ரணவக்கவிற்கு வழங்கப்பட்டது.

எனது கடிதத்தில், இந்தப் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நமது கட்சிக்கும், உங்களுக்கும் கிடைத்த அரிய வாய்ப்பு இது, எனவே உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று ஆலோசனை கூறியிருந்தேன்.இப்போது இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீங்கள் தவறினால் பெரும் வரலாற்றுப் பழியை நமது கட்சியும், நீங்களும் சுமக்கவேண்டிவரும் என்பதையும் சுட்டிக் காட்டினேன். அடுத்து அமையும் அமைச்சரவையில் இதே அமைச்சோ அல்லது தம்புள்ளை பள்ளிவாயில் பிரச்சினையைத் தீர்க்கத்தக்கவாறான திணைக்களமோ கிடைக்காமல் போகலாம் என்ற ஆபத்தையும் சுட்டியிருந்தேன்.

குறிப்பிட்டவாறு இந்த ஆபத்து நடந்தேறியது.

இப்பள்ளிவாயிலின் காணிப் பிரச்சினையை இந்த அரசின் காலத்துக்குள் தீர்க்க முடியாதபடிக்கு சம்மந்தப்பட்ட திணைக்களம் பெருந்தேசியத் தீவிரவாதியான சம்பிக்கவைச் சென்றடைந்தது.

“பெருந்தேசியத்” தலைவர் ஹக்கீம் சமூகத்தின் பாதுகாப்பையோ, கட்சி நலனையோ கணக்கில் எடுக்காது கண்டி மாவட்டத்தில் தனது பாராளுமன்றத் தேர்தல் வெற்றியை சிங்கள வாக்குகளைக் கொண்டு உத்தரவாதப்படுத்துவதில் மட்டுமே கரிசனையாக இருந்தார்.

தம்புள்ளைப் பள்ளிவாயில் காணிப் பிரச்சியைத் தீர்த்து வைப்பதற்கு மஹிந்த ராஜபக்ச தயங்கியதற்குப் பிரதான காரணம் தனது சிங்கள வாக்குகளில் சரிவு ஏற்படும் என்பதேயாகும்.
ஹக்கீம் தயங்கியதற்கு பிரதான காரணமும் கண்டியில் சிங்கள வாக்குகள் கிடைக்காது என்பதேயாகும்.

எனவே மஹிந்தவின் அரசியலுக்கும் றவூபின் அரசியலுக்குமிடையிலான வேறுபாடுதான் என்ன?
அன்று நான் சொன்னவாறு செய்திருந்தால் கட்சியின் நற் பெயர் உச்சம் தொட்டிருக்கும், முஸ்லிம் சமூகப் பாதுகாப்பு உத்தரவாதப்பட்டிருக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான முஸ்லிம் அரசியல் கீரைக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.

இப்படி நிகழ்ந்திருந்தால், தலைவர் ஹக்கீம் கண்டியைத் துறந்துவிட்டு 2015 ஆம் ஆண்டைய நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கில் குதிக்கவேண்டி இருந்திருக்கும் அவ்வளவுதான். அதனாலென்ன? எங்களின் விடுதலை விருட்சமாக நினைத்து கடந்த தேர்தல்களில் அம்பாறையிலும், திருமலையிலும் உங்களை முதலிடத்தில் நாங்கள் வெல்லவைக்கவில்லையா? 20015 நாடாளுமன்றத் தேர்தலிலும் நிச்சயமாக வெல்ல வைத்திருப்பபோம்!

விடுதலை விருட்சமாக இருப்பதில் உங்களுக்கு இருக்கும் விருப்பமின்மை காரணமாக நீங்கள் எங்களின் விடுதலையை சிங்களப் பெருமதவாதத்திற்குக் காட்டிக்கொடுத்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பட்ட வெற்றியை ஈட்டிக் கொண்டீர்கள்.

காகிதமகுடமதிலுடு – காகிதம் + மகுடம் + அதில் + உடு (நட்சத்திரம்)
இந்தப் பதிவு முஸ்லிம் காங்கிரசின் கொள்கை “பறப்பு” செயலாளர் முபீனுக்கு சமர்ப்’பணம்’ .

கடந்த வெள்ளியன்று விடிவெள்ளியிலும், நவமணியிலும் “கூண்டமைப்பில்’ இருந்து கொண்டு அவர் முஸ்லிம் கூட்டமைப்பு பற்றி எழுதியிருந்த கட்டு(ரை)க்கதையில் என்னைப்பற்றிக் குறிப்பிட்ட பந்திகளுக்கு விரைவில் ஆதாரங்களோடு விரிவான பதிலளிப்பேன்.

Web Design by The Design Lanka