கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான தென்னிலங்கை ஊடகவியலாளர்- மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு..! - Sri Lanka Muslim

கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான தென்னிலங்கை ஊடகவியலாளர்- மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

Contributors
author image

Editorial Team

தென்னிலங்கையில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகிய சிங்கள ஊடகவியலாளர் சுஜீவ கமகே இன்று ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை செய்துள்ளார்.

தமக்கு ஏற்பட்ட நிலைமைக்கு காவல்துறையினரும் பொறுப்புகூற வேண்டுமென தெரிவித்து அவர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சியரட்ட சிங்கள இணையத்தளத்தின் ஊடகவியலாளரான சுஜீவ கமகே, கொழும்பின் புறநகரான மீரிகம பகுதியில் வைத்து அண்மையில் கடத்தப்பட்டு கொழும்பு தெமட்டகொட பகுதியிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தார்.

தாம் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு காவல்துறையினரும் பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்து இன்று கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவர் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவின் ஊடாக அவர் இந்த முறைப்பாட்டை வழங்கினார். ஊடகங்களுக்கு முன்பாக எந்த கருத்தையும் வெளியிட வேண்டாம் என காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைய ஊடகவியலாளர் சுஜீவ கமகே ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதை தவிர்த்துக் கொண்டார்.

இது தொடர்பில் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில்,

ஊடகவியலாளர் சுஜீவ கமகேவின் மீது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அழுத்தம் பிரயோகித்து அவரது வாக்குமூலங்களை காவல்துறைக்கு ஏற்ற வகையில் பதிவுசெய்து அவற்றை நீதிமன்றத்திலும் சமர்பித்தது. மார்ச் 10ஆம் திகதி வேலைக்கு சென்றபோது மீரிகம பகுதியில் வைத்து கடத்தப்பட்டு கொழும்பு தெமட்டகொட பகுதியில் வீசப்பட்டிருந்தார்.

காயங்களுடன் அவர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடலில் உள்ள காயங்கள் அனைத்தும் தாக்குதல் மற்றும் எரியூட்டப்பட்டதாக உள்ளதென மருத்துவ அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் ஊடக சந்திப்பை நடத்திய காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண, சீமெந்து கரண்டி ஒன்றை காண்பித்து அதனை வைத்தே குறித்த ஊடகவியலாளர் உடலில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டதாக தெரிவித்திருந்தார்.

அது முற்றிலும் தவறாகும். வழக்கிற்கு தேவையான பொருட்களை நீதிமன்றத்தில் சமர்பிக்காமல் ஊடகங்களுக்கு முன்னால் காவற்துறையினர் காண்பித்திருப்பது சட்டவிரோதமாகும். தற்போதைய அரசாங்கம் ஊடகங்கள் மனிதர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கப்பார்க்கின்றது. இதற்கெதிராகவே இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை வழங்கினோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team