கடினமான தீர்மானங்களை செயற்படுத்த நேரிடும் - எச்சரிக்கும் சரத் வீரசேகர..! - Sri Lanka Muslim

கடினமான தீர்மானங்களை செயற்படுத்த நேரிடும் – எச்சரிக்கும் சரத் வீரசேகர..!

Contributors

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் கடினமான தீர்மானங்களை செயற்படுத்த நேரிடும். ஆகவே பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பயணத்தடை மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இாஷதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பொது மக்களை பாதுகாக்கவும் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.

பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினரது ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வது இன்றியமையாததாக காணப்படுகிறது.

கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வீதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள். அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினர் அதனையும் முறையற்ற வகையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

வீதியில் கடமையில் ஈடுப்படும் பொலிஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஒரு சில பிரதேசங்களில் இடம் பெற்றுள்ளன. பொது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் கடமையில் ஈடுபட வேண்டாம் எனவும் கடினமான முறையில் செயற்பட வேண்டாம் எனவும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையிலும் பொது மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே பொலிஸாரும், இராணுவத்தினரும் வீதியில் கடமையில் ஈடுப்படுகிறார்கள்.

பொது மக்களும் அவர்களின் மனநிலையினை புரிந்துக் கொண்டு செயற்பட வேண்டும். இரு தரப்பினரும் அனுசரித்து செயற்பட்டால் பிரச்சினைகள் தோற்றம் பெறாது. பொது மக்களை காட்டிலும் பொலிஸாரும், இராணுவத்தினரும் மிகவும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team