கட்டார் நாட்டின் இரண்டு விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்கவில் தரை இறங்கியது..! - Sri Lanka Muslim

கட்டார் நாட்டின் இரண்டு விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்கவில் தரை இறங்கியது..!

Contributors

இலங்கையில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கட்டாரிலிருந்து இரு விமானங்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை தரையிறங்கியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று அதிகாலை 02.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த விமானத்தில் வெளிநாட்டு பயணிகள் உட்பட மொத்தம் 53 பேர் வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

அதேபோன்று, டோஹாவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் – 216 என்ற விமானம் அதிகாலை 04.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்த விமானத்தில் 116 பயணிகள் வந்திருந்ததாகவும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் மூன்றாவது கொரோனா அலை உருவான நிலையில், இலங்கைக்கான அனைத்து பயணிகள் விமான சேவைகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டது.

கொவிட் -19 வைரஸ் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாட்டு தேசிய மையத்தின் யோசனைக்கு அமைய இத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்தநிலையில் சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கமைய நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் இன்று செவ்வாய்கிழமை திறக்க கொவிட் கட்டுப்பாட்டு தேசிய மையம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team