கதவுகள் திறந்தே உள்ளன எவரும் வெளியேறலாம் - மஹிந்த கடும் எச்சரிக்கை..! - Sri Lanka Muslim

கதவுகள் திறந்தே உள்ளன எவரும் வெளியேறலாம் – மஹிந்த கடும் எச்சரிக்கை..!

Contributors
author image

Editorial Team

மக்களின் நம்பிக்கை எம்மீது உள்ளது. எனவே எமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத எவரும் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் கதவுகள் திறந்தே உள்ளன என கடும் தொனியில் தெரிவித்துள்ளார் பிரதமர் மகிந்த ராஜபக்ச.

கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

நாங்கள் எவரையும் பலவந்தமாக வைத்திருக்கவில்லை. அரசியல்கூட்டணியொன்றில் மாறுபட்ட கொள்கைகள் காணப்படுவது வழமை. இன்றைய அரசியலில் உள்ள வேறு பலர் போல இல்லாமல் நாங்கள் உள்ளக ஜனநாயகத்தை பேணுகின்றோம். எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தபடி நாங்கள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்றோம்,அதற்காகவே மக்கள் எங்களுக்கு பெரும் ஆணையை வழங்கியுள்ளனர்.

சில அரசியல்வாதிகள் ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கின்றனர் அதனை பெரிதுபடுத்தக்கூடாது. எனினும் அரசாங்கத்தை நாங்கள் முன்னெடுக்கும் விதம் குறித்து எவராவது உண்மையிலேயே அதிருப்தியடைந்திருந்தால் அவர்கள் வெளியேறுவதற்காக எங்கள் கதவுகள் எப்போதும் அகலத்திறந்திருக்கின்றன.

அதேபோன்று நாங்கள் ஆட்சி செய்யும் விதம் பொருத்தமானது என கருதி எவராவது எங்களுடன் இணைய விரும்பினால் எங்கள் கதவுகள் அவர்களுக்காகவும் திறந்திருக்கின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team