கம்பன்பிலவை அமைச்சுப் பதவியை விட்டு விலகச் செல்லும் பின்னணியில் மஹிந்தவும் பசிலும்..! - Sri Lanka Muslim

கம்பன்பிலவை அமைச்சுப் பதவியை விட்டு விலகச் செல்லும் பின்னணியில் மஹிந்தவும் பசிலும்..!

Contributors

அரசாங்கத்திலுள்ள பிரபல அமைச்சரொருவரை பதவி விலகுமாறு பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு சாகரகாரியவசம் அதிகாரம் மிக்கவர் அல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

அரசாங்கத்தில் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல அமைச்சரொருவரை பதவி விகுமாறு பகிரங்கமாக அறிவிக்குமளவிற்கு பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் அதிகாரம் மிக்கவர் அல்ல.

பொதுஜன பெரமுனவின் தலைவராகவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தேவைக்காகவே அவரால் இவ்வாறானதொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டு போலியான நாடகங்களை அரங்கேற்றி இதிலிருந்து தப்பிக்க முயற்சிக்காது, எரிபொருட்களை விலையைக் குறைப்பதற்கு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கத்தின் பங்காளிகளான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் என சகலரும் தனித்து செயற்படுகின்றமையே இதற்கான காரணமாகும். எரிபொருள் விவகாரத்தில் அமைச்சர் கம்மன்பிலவை மாத்திரம் சிக்கவைத்து ஏனையோர் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

எனவே அவர் மாத்திமின்றி முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டும். மஹிந்தானந்த அலுத்கமகே போன்றோர் எதிர்க்கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் காணப்படுவதாகக் கூறினார். ஆனால் அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் எந்தளவிற்கு பூதாகரமாகியுள்ளது என்பதை தற்போது மக்கள் உணர்ந்திருப்பார்கள்.

எனவே இவ்வாறான நாடகங்களை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். அமைச்சர்களை பதவி விலகச் சொல்வதை நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும்.

அரசாங்கம் தற்போது எரிமலை மீது நின்று கொண்டிருக்கிறது. தற்போது எழுந்துள்ள முரண்பாடுகளால் அந்த எரிமலை வெடித்து சிதறும் காலம் வெகுதொலைவில் இல்லை.

அதே போன்று அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் எதிர்வரும் சில வாரங்களுக்கு தொடருமாயின் கொவிட் நிலைமையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வீதிக்கு இறங்கும் காலமும் தொலைவில் இல்லை என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team