கரவாகுச் சந்தியின் மூன்றாம் சந்திப்பு முத்தாய்ப்பு...! » Sri Lanka Muslim

கரவாகுச் சந்தியின் மூன்றாம் சந்திப்பு முத்தாய்ப்பு…!

karavaku8

Contributors
author image

P.M.M.A.காதர்

கரவாகு சந்தியின் மூன்றாம் சந்திப்பு மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிமை(30.10.2016) சோலைக் கிளி தலைமையில்சிறப்பாய் நடைபெற்றது. கவிஞர்கள்,புத்திஜீவிகள்,பிரமுகர்கள் என பெருமளவான கலை இலக்கிய ஆர்வலர்கள் வருகை தந்திருந்தனர். அண்மையில் காலமான கலைக்குரல் அமீர் அவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மௌனப் பிரார்த்தனை முதலில் நடைபெற்றது. அதனைத் தொடந்து கலைக் குரல் அமீர் அவர்களுக்கான நினைவேந்தல் உரையை கலை இலக்கிய ஆர்வலர் இறக்காமம் ஏ.எம். றியாஸ் நிகழ்த்தினார்.

கரவாகு சந்தியின் முதல் அமர்வு ‘சோலைக்கிளியுடன் பேசுவோம்’ எனும் தொனியில் ஆரம்பமானது. சோலைக் கிளியின் உரையாடல், கேள்வி பதில் மற்றும் கவிதை வாசிப்பும் இடம்பெற்றன. ஆரோக்கியமான உரையாடல் பொதுவெளி பல்வேறு கருத்துகளையும்,புரிந்துணர்வையும் விதைத்தன.

தென் கிழக்கின் புலமைச் சொத்துக்களான பேராசியர் ரமீஸ் அப்துல்லாஹ், கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ், கவிஞர் மன்சூர் ஏ. காதிர்,இப்ராஹிம் சாலி ஆகியோர் இன்றைய தினம் கரவாகுச் சந்தியில் பங்கேற்று அலங்கரித்தனர்.

மேலும், இன்றைய சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பிரதம அதிதியாய் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாய் பிரபல தொழிலதிபர்,சமூக சிந்தனையாளர் முஹம்மத் இப்ராஹிம் வருகை தந்து விசேட உரையாற்றி சபையோரை கவர்ந்தார்.

விசேட விருந்தினராய் கவிஞர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத். மருதமுனை கலை இலக்கியப்பேரவையின் தலைவர் ஏ.ஆர் .எம்.சாலிஹ். சபையில் சங்கமித்தார். மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானாவும் நிகழ்வை சிறப்பித்தார்.வட புலத்தில் இருந்து இலக்கிய உறவுப் பாலமாய் மன்னார் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் கவிஞர் மன்னார் அமுதன் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

கவிஞர் சோலைக்கிளியுடனான கேள்வி நேரம் கலகலப்பாக சுவாரஷ்யமாக் அமைந்தது. சோலைக்கிளி தனது இலக்கிய அனுபவங்களை தனக்கே உரித்தான பாணியில் அழகாக ஆழமாக விபரித்தார். சோலைக்கிளியிடம் முதல் கேள்வியை சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தொடுத்தார். பின்னராக கவிஞர்களான முபாரக் அப்துல் மஜீத்,விஜலி,சாஜித்,அமீர், சாஹிர் கரீம் ஆகியோர் கேள்விகளை கேட்டனர்.

இன்னும் இலக்கிய அதிதிகளாக கவிஞர்களான மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், ஆசுகவி அன்புடீன், ரவூப் ஹசீர், றியாஸ் குரானா, பொத்துவில் பைசல், முபாரக், மருதமுனை விஜிலி,கிண்ணியா நஸ்புல்லாஹ், பெரோஸ்கான், காத்தான்குடி எம்.ரீ.எம்.யூனூஸ்,முஹைதீன் சாலி, அமீர் முஹம்மத், பாலமுனை முஹா, முபீத், அக்கரைப்பற்று நாளீர், முஹம்மத் சாஜித், சம்மாந்துறை ரஹ்மத்துல்லாஹ், அஷ்ரி, கல்முனை சாஹிர் கரீம், சாய்ந்தமருதுது நளீம் லத்தீப், ஹப்ராத் ஆகியோர் கரவாகு சந்திக்கு வந்து மகிழ்ச்சி ஊட்டினர்.

மேலும் முதல் அமர்வின் நிறைவில் கவிஞர் சோலைக்கிளி தனது 274 கவிதைகள் அடங்கிய ‘அவணம்’ கவிதை நூலை கரவாகின் நிறுவுனர் எஸ்.ஜனூஸ்க்கு கையளித்தார்.
இத்துடன் Bright Future அமைப்பின் தலைவர், சிரேஷ்ட வைத்திய அதிகாரி,கவிஞர் Dr.நாஹூர் ஆரிப் அவர்கள் கிழக்கு மாகாண அரச இளம் கலைஞர் விருது பெற்ற சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்ட எஸ்.ஜனூஸ், நளீம் லத்தீப் ஆகியோரை அமைப்பின் சார்பாக விருது வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இன்றைய கரவாகு சந்தியின் இரண்டாம் அமர்வில் பாவேந்தல் பாலமுனை பாரூக் தலைமையில் சிறப்புக் கவியரங்கம் களை கட்டியது. அரங்கில் கவிஞர்களான கே.எம்.ஏ. அஸீஸ்,அபூ அப்கான்,எழு கவி ஜெலில், மருதமுனை ஜமீல், சுல்பிகா ஷெரிப், மன்னார் அமுதன், பஷீல் இஸ்மாயில், பர்ஸானா றியாஸ் ஆகியோர் ஆழமான கவிதைகள் பாடி அவையை மகிழ்வித்தனர்.

மூத்த ஊடகவியலாளர்,கவிஞர் மருதமுனை பீ.எம்.எம்.ஏ. காதர், இ.ஒ.கூ.அறிவிப்பாளர்கள் ஏ.எல்.நயீம், ரோஷன் அஷ்ரப் ஆகியோர் ஊடக அதிதிளாக கலந்து சிறப்பித்தனர்.
கரவாகுச் சந்தியில் மன்னார் அமுதனின் ‘அன்ன யாவினும்’ கவிதை நூல் அறிமுகம் செய்யப்பட்டு வருகையாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

கரவாகு சந்தியின் நிகழ்வுகளை அறிவிப்பாளர்கள் ஏ.எல்.நயீம், சிரோ சிராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சி ஒலிப்பதிவை அறிவிப்பாளர் றின்ஸான் கவனித்தார். இன்றைய கரவாகுச் சந்தியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் முக நூலில் நேரலையாக ஒளிபரப்பாகியதுடன், ஊவா சமூக வானொலிக்காக ஒலிப்பதிவும் செய்யப்பட்டது.
கரவாகு சந்தியின் நான்காவது சந்திப்பு பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

karavaku karavaku-jpg2-jpg3 karavaku-jpg2-jpg3-jpg4 karavaku-jpg2-jpg3-jpg4-jpg5

Web Design by The Design Lanka