“கரவாகு இலக்கியச் சந்தி”யின் இலக்கியச் சாரல் (photo) » Sri Lanka Muslim

“கரவாகு இலக்கியச் சந்தி”யின் இலக்கியச் சாரல் (photo)

karavaku98

Contributors
author image

M.S.M.ஸாகிர்

கரவாகு கலை இலக்கியச் சந்தியின் நான்காம் சிறப்புச் சந்திப்புடன் கூடிய முப்பெரும் விழா கடந்த (16) வெள்ளிக்கிழமை மாலை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த கலை இலக்கியவாதிகளின் சந்திப்பு, புலமைப் பூக்களுக்கு புகழாரம், மாணவர் பரிசளிப்பு, சிறப்புக் கவியரங்கம் என்பன முப்பெரும் விழாவை அலங்கரித்தன.

பாவேந்தல் பாலமுனை பாறுக் தலைமையில் நடைபெற்ற கரவாகின் முப்பெரும் விழாவில், பிரதம விருந்தினர்களாக தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த அதிதிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். கௌரவ அதிதிகளாக உலமாக் கட்சியின் தலைவர்,கவிஞர்.முபாரக் அப்துல் மஜீத், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர், கலை இலக்கிய ஆர்வலர் ஸ்ரீ.பாஸ்கரா உள்ளிட்ட மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர். மேலும், கரவாகின் முப்பெரும் விழாவில் கல்விமான்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், கலை இலக்கியவாதிகள் என பெரும் திரளானோர் சபையை அலங்கரித்தனர்.

தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த அதிதிகள் நிகழ்வின் ஆரம்பத்தில் தங்களை ஒரு நிமிடத்தில் அறிமுகம் செய்து கொண்டனர். கரவாகு கலை இலக்கியச் சந்தியின் நான்காம் சிறப்புச் சந்திப்புடன் கூடிய முப்பெரும் விழாவின் மற்றுமொரு மகத்தான தருணமாக ‘புலமைப் பூக்களுக்கு புகழாரம்’ மாணவர் பரிசளிப்பு இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு சிரேஷ்ட வைத்தியர். கவிஞர்.எஸ்.நஜிமுதீன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில், சாய்ந்தமருது கல்வி வலயத்தில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 36 மாணவச் செல்வங்களுக்கு பெறுமதியான School bag மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. பரிசில்களை கரவாகுச் சந்திக்கு வருகை தந்த தென் இந்திய கலை இலக்கிய அதிதிகள் மற்றும் எமது மூத்த கவிஞர்கள் பிள்ளைகளுக்கு வழங்கி வைத்தமை நிகழ்வின் முத்தாய்ப்பாய் அமைந்தது. இந்த பரிசில்களை மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் மேடைக்கு வந்து பெற்றுக் கொண்டது இன்னும் சிறப்பு.

கரவாகு கலை இலக்கியச் சந்தியின் முப்பெரும் விழாவில் தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் சிறப்பாய் நடைபெற்ற தென்னிந்திய மற்றும் நமது நாட்டுக் கவிஞர்கள் பங்கு கொண்ட கவியரங்கு பார்வையாளர்கள், கவிதைப் பிரியர்களின் அமோக வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கவியரங்கில கவிஞர்களான முனைவர் கிருஷ்ணமூர்த்தி, நிர்மலா அவ்வை, தாழை மதியவன், தங்க ஆரோக்கியதாஸ், தமிழ் மணவாளன் , ஜலால்தீன் ஹனீபா, கவிமதி, தங்க ஆரோக்கியதாஸ்,சேக் முஹம்மது, முஹம்மது அலி, மேமன் கவி, கிண்ணியா அமீரலி, தீரன், ஆர்.எம். நௌஷாத், ரவூப் ஹசீர், எழுகவி ஜெலில், முகைதீன் சாலி, பாயிஸா நௌபல், பர்ஸானா ரியாஸ் ஆகியோர் பங்கு கொண்டு சபையில் கவிமழை பொழிந்தனர்.

கவியரங்கின் பின்னராக தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த அத்தனை கலை இலக்கிய உறவுகளுக்கும் ‘கரவாகு கௌரவ நினைவுச் சின்னம்’ வழங்கி வைக்கப்பட்டமை மகிழ்ச்சியான தருணங்களாக அமைந்தன.

கரவாகு கலை இலக்கியச் சந்திப்பின் முப்பெரும் விழாவில் மற்றுமொரு முத்தாய்ப்பாய் தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் மண்டல இயக்குனர் ஐ.சதக்கத்துல்லாஹ், கவிஞர்.சொற்பொழிவாளர் ஏர்வாடி.எஸ்.ராதாகிருஷ்ணன், கவிஞர்.நிலா கலை இலக்கிய வட்டத்தின் நிறுவுனர். ஜலாலுதீன் உள்ளிட்ட இதர இந்திய இலக்கிய அதிதிகள் முன்னிலையில் இம்முறை புதிதாக அறிமுகப்படுத்தபடும் கரவாகு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன. ஆசுகவி அன்புடீன் (கவிதை,சிறுகதை,இலக்கியம்), டாக்டர்.கவிஞர்.எஸ்.நஜிமுதீன்- (வைத்தியம்,சுகாதாரம்,இலக்கியம்) .தமிழ்த் தென்றல் அலி அக்பர் (கவிதை

இலக்கியம், கவியரங்கு), முபாரக் அப்துல் மஜீத் (சமூகம்,அரசியல்,இலக்கியம்). எம்.ஏ.சி.ஷர்மில் (சினிமா,குறும்படம்,தொலைக்காட்சி நாடகம்), எம்.,வை.அமீர் (பத்திரிகை,ஊடகம்,சமூகம்), எல்.நயீம்(வானொலி,தொலைக்காட்சி,மேடை அறிவிப்பு) ஆகியோருக்கு அவர்கள் துறை சார்ந்து வெளிப்படுத்திய அடையாளங்களுக்காய் இவ்விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், விழாவின் இறுதி அம்சமாக நிகழ்வில் கலந்து சிறப்பித்த கொழும்பு மாநகர சபையின்முன்னாள் உறுப்பினர், கலை இலக்கிய ஆர்வலர் ஸ்ரீ.பாஸ்கரா, பாவேந்தல் பாலமுனை பாறுக், கவிஞர் மேமன் கவி, சந்தக்கவிமணி கிண்ணியா அமீரலி, சமூக சிந்தனையாளர்.எம்.ஐ.எம்.இப்ராஹிம் ஆகியோருக்கு ‘கரவாகு கௌரவ நினைவுச் சின்னம்’ வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டு மொத்தத்தில், கரவாகு கலை இலக்கிய சந்தியின் நான்காவது அமர்வு ஆரோக்கியமான கலை,இலக்கிய,சமூக வெளிப்பாடுகளை பொதுத் தளத்தில் வெளிப்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். இதற்கென உழைத்த கரவாகு சந்தியின் நிறுவுனர், கவிஞர்.எஸ்.ஜனூஸ் மற்றும் கரவாகு சந்தியின் செயற்பாட்டளர்கள், அனுசரணை வழங்கிய பெருந்தகைகள், பங்களித்த கலை இலக்கியவாதிகள் அனைவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் என்பதில் ஐயமில்லை.

karavaku karavaku-jpg2 karavaku-jpg2-jpg3 karavaku-jpg2-jpg3-jpg4-jpg5 karavaku-jpg2-jpg3-jpg4-jpg7 karavaku-jpg2-jpg3-jpg6

Web Design by The Design Lanka