கருணாவின் வஞ்சகத்தனம் » Sri Lanka Muslim

கருணாவின் வஞ்சகத்தனம்

KARUNA

Contributors
author image

A.S.M. Javid

இலங்கைவாழ் மக்கள் யுத்தம் என்ற போர்வையில் கடந்த மூன்று தஸாப்த காலமாக பட்ட துன்பங்களும், துயரங்களும் சொல்லிடங்காது. அதிலும் குறிப்பாக வடகிழக்கு மக்கள் இந்த கோர யுத்தத் தாண்டவங்களுக்கு நேரடியாகவே முகங்கொடுத்தவர்கள் என்றால் அதனை மறந்துவிட முடியாது.

இந்தக் கொடிய யுத்தம் பல ஆயிரக்கணக்கான உயிர்களையும், விலை மதிக்க முடியாதளவு உடமைகளையும் இழக்கவும் வைத்ததுடன் மக்கள் நிம்மதியற்று ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் தமது உயிருக்கே உத்தரவாதமற்ற ஒரு பயங்கரமான இருண்ட யுகத்திற்குள் சிக்குண்டு சின்னா பின்னப்பட்டு ஏதோ ஒரு வகையில் மஹிந்த ராஜபக்ஷவின் யுத்த தந்திரோபாயத்தின் ஒரு அங்கமாக அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான கொடி ஆயுதப் போராட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியளவில் முடிவிற்கு கொண்டு வந்தார் என்ற விடயத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.
வடகிழக்கு மக்களின் துன்பியல் நிலைமைகளுக்கு வித்திட்டவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்த கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனும் ஒருவர்தான்.

கிழக்கில் பல ஆயிரக்கணக்கான மூவினக் கொலைகளுக்கு மூல காரணமானவரும் இவர்தான். இவரின் அறிவித்தல்கள் இன்றி கிழக்கில் அப்போது கொலைகளோ அல்லது தாக்குதல்களோ அல்லது கடத்தல்களோ அல்லது களவுகளோ இடம் பெறுவதில்லை. அந்தளவிற்கு மிகவும் மூர்க்கத்தனமாக செயற்பட்ட ஒருவர்தான் இந்தக் கருணாவாகும்.

கிழக்கில் முஸ்லிம் பள்ளிவாசல்களுக்குள் ஆயுத முனையில் நுழைந்து அல்லாஹ்வை துதி செய்து கொண்டிருந்த அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி ஒரு வணக்கஸ்தளம் என்று கூடப்பாராது தனது அடாவடித்தனங்களை மேற்கொண்ட இந்த நபர் பின்னடி காலத்தில் பணத்திற்காகவும், அரசியல் ஆசைகளுக்காகவும் விடுதலைப் புலிகளையே காட்டிக் கொடுக்கவும், பிரபாகரனின் ஆட்களை கொலை செய்யவும் முற்பட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவர் என்பது உலகறிந்த உண்மை.

விடுதலைப் புலிகளின் அழிவிற்கு வித்திட்ட இந்த மகான் கடந்த மஹிந்த அரசில் மிகவும் நல்ல மனிதர்போல் அவர்களுக்கு தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்து தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி அரச படைகளுடன் இணைந்து விடுதலைப்புலிகளை அழித்த ஒருவரான இவரை பிரபாகரனின் மரணத் தீர்ப்பில் இருந்து காப்பாற்றி இன்று வரை உயிர் வாழ வைத்தவரும் ஒரு முஸ்லிம் என்பதனை மறந்து விட்டு இன்று முஸ்லிம்களை அழிப்பதற்கு துரோகத்தனமான செயற்பாட்டிற்கு வித்திடுவது அவரின் இனவாத சுயரூபத்தை வெளிக்காட்டி விட்டது.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பிரதி அமைச்சர் பதவிகளை வகித்துக் கொண்டும் கிழக்கில் மட்டுமல்லாது வடக்கிலும் தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்த இவர் இன்று இருக்க வேண்டிய இடம் சிறைக்கூடமே என தமிழ் மக்களே தெரிவிக்கின்றனர். இவர் இயக்கத்தில் இருந்த காலங்களில் இலங்கையில் படைத்தரப்பினர், உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், அரச ஊழியர்கள். தனியார் துறை ஊழியர்கள். மதப் போதகர்கள், பொது மக்கள் என பலரைக் கொலை செய்த ஒரு குற்றவாளியாக இவர் உள்ளார் என்றும் இவரை மஹிந்த அரசே காப்பாற்றி வந்ததாகவும் அவருக்கு அரசியல் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டதாகவும். இவரைப்பற்றி அரசியல் வாதிகளின் மட்டத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் திருப்தியற்ற கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இன்று தனக்கு ஒரு அரசியல் அந்தஸ்து இல்லை என்ற வேதனையிலும், மன உழைச்சல்களிலும் மீண்டும் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு அவர் தமிழ் மக்களை நாட வேண்டிய திட்டத்தை தீட்டி இன்று கிழக்கு முஸ்லிம்களுக்கு எதிராக தனது இனவாத கருத்தை பகிரங்கமாக ஊடகங்கள் மூலம் கக்கியுள்ளமை இந்த தேசிய நல்லிணக்க அரசில் பாரிய கேள்விக் குறியை ஏற்படுத்தியிருக்கின்றது.

கருணா முஸ்லிம் சமுகத்திற்கு செய்த துரோகத்தனங்களை அந்த மக்கள் என்றும் மறந்துவிட முடியாது. அந்தளவிற்கு ஆயுதத்தின் மூலம் முஸ்லிம் மக்களை அச்சுறுத்தி அவர்களின் உடமைகளைப் பறித்தும், அவர்களை அச்சுறத்தியும் காட்டுத்தர்பார் காட்டிய இவருக்கு முஸ்லிம் சமுகத்தின் ஆதரவு என்பது எந்த ஜென்மத்திலும் கிடைக்காது என்று தெரிந்து இன்று அமைதியாக ஒன்றினைந்து கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடன் விரிசல்களை ஏற்படுத்தி தனது அரசியல் இலாபத்தை பெற இவர் கிழக்கில் முஸ்லிம்களின் ஆதிக்கம் கூடிவிட்டது என்ற பொய்யான நாடகத்தை அறங்கேற்ற முனைகின்றார் என்பதும் இவரின் தழிழ் மக்களுக்கான அழைப்பில் இருந்து அறிய முடிகின்றது.

ஆடு நனைகின்றது என ஓநாய் அழுத கதையாக இன்று கருணா விடுதலைப் புலிகளின் போராட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவரின் நீலிக்கண்ணீர் வார்த்தைகள் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அவர் கடந்த 25ஆம் திகதி ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தில் ‘அன்றிருந்த இளைஞர்கள் இயக்க வேறுபாடின்றி தமிழ் மக்களுக்கு ஆயுதப் போராட்டம்தான் விடிவைத் தரும் என்று நம்பிப் புறப்பட்டார்கள் பின்பு பல இழப்புக்கள், சூழ்ச்சிகள், தலைமைப் போட்டிகள், சகோதரப் படுகொலைகள் என்றெல்லாம் எமது போராட்டம் சிக்குண்டு முள்ளி வாய்க்காலுடன் முடிவிற்கு வந்து நிற்கின்றது என்றும் வேட்டி கேட்டுப்போய் கோவணமும் இல்லாமல் வந்த கதையாகவே தமிழர்களின் தலைவிதி மாறியுள்ளது’ என்று கூறியுள்ள கருத்து உண்மையான எந்தவொரு தமிழனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத வஞ்சகக் கருத்து என்றே கூற முடியும்.

காரணம் தமிழ் மக்களின் போராட்டத் தோல்விக்கு முதல் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து அந்த இயக்கத்தை அரசுக்கும், இராணுவத்திற்கும் காட்டிக் கொடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிவிற்கு இட்டுச் சென்றவர் இந்த கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன்தான். இவர் கிழக்கில் தளபதியாக இருந்து பிரபாகரனை விட தான்தான் முதன்மை பெறவேண்டும் என்ற கொள்கையில் செயற்பட்டவர். இவரின் சூழ்ச்சியின் விபரீதமே விடுதலைப் புலிகளின் அழிவாகும் என ஆணித்தரமாக குறிப்பிடலாம்.

இவ்வாறான ஒருவர் இன்று கிழக்கில் முஸ்லிம் சமுகத்தின் ஆதிக்கத்தில் இருந்து கிழக்கை தமிழ் மக்கள் காப்பாற்ற வேண்டும் பழமைவாத அரசியல் வாதிகளை தூக்கி எறிந்து விட்டு துணிச்சல் மிக்க புதிய அரசியல் வாதிகளை எமது சமுகம் உருவாக்க வேண்டும் என்று கூறுவதில் இருந்து இவரின் செயற்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்து விட்டது. ஒரு பலமான ஆயுதக் குழுவில் இருந்து அந்த தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியாத அந்த இயக்கத்தையே காட்டிக் கொடுத்த கருணா அரசியலில் வந்து என்னத்தை வெட்டிக் கிளிக்கப்போகின்றார்? என்று தமிழ் புத்தி ஜீவிகளே கேள்வி கேட்கின்றனர்.

இவ்வாறான நிலையில் வடகிழக்கில் தமிழ் மக்களாக இருக்கட்டும் அல்லது முஸ்லிம் மக்களாக இருக்கட்டும் இவர் தேர்தல் கேட்டால் விளக்குமாத்து அடியைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்காது அந்தளவிற்கு மக்களால் வெறுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட ஒரு மனிதரே கருணாவாகும் என தமிழ் மற்றும் முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதிகள் கூச்சலிடுகின்றனர்.

இந்த தேசிய நல்லிணக்க அரசு இனவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் இவ்வேளையில் பயங்கரவாதத்திற்கு தலைமைதாங்கிய ஒரு நபர் அமைதியாக இருக்கின்ற இக்காலத்தில் தமது சொந்த அரசியல் இலாபங்களுக்காக சமுகங்களைக் கூறுபோடும் வகையில் பகிரங்கமாக கருத்துக்களை தெரிவிக்கும் விடயத்தில் கடுமையான கவனத்தைச் அரசு செலுத்தி இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதை தடை செய்யா விட்டால் இந்த நாட்டில் எந்தக் காலத்திலும் இன ஒற்றுமையோ அல்லது சமாதானமோ ஏற்படாது என சமயத் தலைவர்கள் தமது ஆதங்கத்தை வெளியிடுவதுடன் இச்செயற்பாடுகள் இந்த அரசின் நல்ல முயற்சிகளுக்கும்கூட ஆபத்தான ஒரு விடயம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ள10ராட்சி மற்றும் மாகாண சபைகளின் தேர்தல் நெருங்குகின்ற நிலையில் தானும் ஒரு அரசியல் வாதி என்ற பொய்யான விலாசத்தை காட்ட இவர் இப்போதே இனவாத கருத்துக்களை கக்கி அமைதியைக் குழப்ப முனைகின்றார் என்பது மட்டும் உறுதியாக இருப்பதால் இவர்கள் போன்றவர்கள் விடயத்தில் மக்கள் அவதானமாக இருப்பதுடன் துரோகத்தனமான சிந்தனையுடைய இவ்வாறானவர்களை ஓரங்கட்டுவதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

எனவே எதிர்கால இன ஒற்றுமையை மேம்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமானால் ஒரு இனத்துடன் இன்னொரு இனத்தை மோதவிட்டும், குழப்பங்களை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியலுக்குள் குறுக்கு வழியில் நுழைய முயலும் பூதங்கள் நடாத்தும் ஊடகச் சந்திப்புக்களை தடை செய்து சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் அரசியல் இலாபத்திற்காக கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவை கூறுபோட முனையும் கருணா போன்றவர்களின் வஞ்சகத்தனம் ஈற்றில் பாரிய இன விரிசல்களை ஏற்படுத்தி மீண்டுமொரு இருண்ட யுகத்திற்கு அமைதியான இந்த இலங்கையை இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை எனலாம்.

Web Design by The Design Lanka