கல்முனை ஆணையாளரின் செய்தி உண்மைக்கு புறம்பானது - பொதுச் சந்தைக்கு அருகில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள நீர்; சீர் செய்யுமாறு கோரும் பொதுமக்கள்..! - Sri Lanka Muslim

கல்முனை ஆணையாளரின் செய்தி உண்மைக்கு புறம்பானது – பொதுச் சந்தைக்கு அருகில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள நீர்; சீர் செய்யுமாறு கோரும் பொதுமக்கள்..!

Contributors
author image

Editorial Team

சுகாதார நிலைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்ற போது திண்மக்கழிவகற்றல் தொடர்பிலும், வடிகான்களின் முறையற்ற பராமரிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற தன்மையினாலும், அசமந்த போக்கினாலும் மாநகர மக்கள் எதிர்நோக்கும் நோய் நிலைகள், தொற்றா நோய் ஆபத்துக்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு அது தொடர்பில். நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராயப்பட்டது. எல்லா திணைக்களங்களுடனும் புரிந்துணர்வுடனும், நட்புடனும் ஒன்றிணைந்து செயற்பட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதனால் கல்முனை மாநகர சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்காமல் புரிந்துணர்வுடன் பணியாற்ற தயாராக இருக்கின்றோம். ஆனால் அவர்களின் பாராமுகம் தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு தேவை ஏற்பட்டால் அதையும் செய்ய தயாராக இருக்கின்றோம். மக்களின் சுகாதாரம் மீது எப்போதும் கரிசனை செலுத்த வேண்டும் என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் இங்கு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் ஊடகங்களூடாக பதிலளித்த கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை மற்றும் வடிகான் பராமரிப்பு தொடர்பாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்த கருத்துகளில் எவ்வித உண்மையுமில்லை. எரிபொருள் தட்டுப்பாடுஇ நிதிப்பற்றாக்குறை என்பவற்றுக்கு மத்தியிலும் இச்சேவைகளை முன்னெடுப்பதில் கல்முனை மாநகர சபையானது மிகவும் வினைத்திறனுடன் செயற்படுகிறது என்று தெரிவித்திருந்தார். இக்கருத்துடன் மேலும் பல கருத்துக்களையும் வெளியிட்டிருந்த நிலையில் கல்முனை மாநகர பொதுச் சந்தைக்கு அருகில் உள்ள வடிகான் துப்புரவு இன்றியும் வடிகானின் ஒரு பகுதி உடைந்தும், வடிகானின் இடைநடுவே பாரியளவிலான சுவர் துண்டு உள்ளதுடன் நீண்ட நாட்களாக நீர் ஓடாமல் தேங்கி காணப்படுகின்றமையினால் இடைக்கிடையே துர்நாற்றம் வீசுவதுடன் பல மாதங்களாக இந்நிலை தொடர்கிறது. இதனால் வீதியினால் பயணிப்போர், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சந்தைக்கு வருகின்ற பொதுமக்கள் இதனால் சிரமத்தை எதிர்நோக்குவதாக அங்கிருக்கும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .

நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பாடசாலை மாணவர்கள், குறித்த வீதியை பயன்படுத்தும் நிலையில் வடிகானுக்கு முறையாக மூடியின்றியும் வடிகானுக்கு அருகில் புற்கள் வளர்ந்து பற்றையாக காட்சியளிப்பதுடன் வடிகானுக்கு அருகில் உள்ள சாந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தின் எல்லை சுவரின் ஒரு பகுதி பல மாதங்களுக்கு முன்னர் சுவர் துண்டு உடைந்து வடிகானின் கீழே விழுந்து இருப்பதுடன் வடிகானின் நடுவே பாரிய தடையாக காணப்படுவதுடன் குறித்த வடிகான் பகுதியில் நீர் ஒடாமல் நீர் தேங்கி நிற்பதுடன், நீண்ட நாட்களாக கவனிப்பாரற்று உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் இதனுள் உடைந்த நிலையில் கூரை ஓட்டுத்துண்டுகள், கற்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், தகர டீன்கள், பொலித்தீன் பைகள் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றது. இதனால் சுகாதார சீர் கெடு ஏற்பட வாய்ப்புள்ளது. கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் தின்மக்கழிவகற்றல், வடிகன் முகாமைத்துவம் சிறப்பாக இயங்குவதாக ஆணையாளர் தரப்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு முழுப்பூசணிக்காயை ஒருபிடி சோற்றில் மறைக்க எத்தனித்திருக்கும் இந்நிலையில் இதுபோன்று சுகாதரத்திற்கு அச்சுறுத்தலாக பல இடங்கள் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் காணப்படுகின்றது துரதிஷ்டமாக உள்ளது.
கல்முனை மாநகர சபை முதல்வர், ஆணையாளர் ஆகியோர் உரிய வசதிகளை ஏற்படுத்தி தந்தால் இந்த பிரச்சினைகளை தீர்க்க தயாராக இருக்கிறோம். மாநகர ஊழியர்கள் வேறு பணிக்கு அமர்த்தப்படுவதனாலும் வாகன வசதிகளில் உள்ள முரண்பாடுகள் காரணமாக மாநகர சபை வேலைகளை சீராக செய்ய முடியாதுள்ளது. மாநகர சபையில் நிர்வாக பிரச்சினைகள் மலிந்து காணப்படுவதனால் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலை உள்ளது. வடிகான் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. அது ஆணையாளர், பிரதி ஆணையாளரின் பொறுப்பில் உள்ளதாக அறிகிறேன். அவர்களிடம் இது தொடர்பில் அறிவிக்க வேண்டும் என்று இந்த பிரச்சினைகள் தொடர்பில் கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பகுதியை அண்மித்த பகுதியில் பொதுச் சந்தைக்கு வரும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெரிசலை எதிர் நோக்குவதை அவதானிக்க முடிகின்றது. இது தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர்இ சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் கவனம் எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team