கல்முனை சந்தாங்கேணி மைதான உள்ளக விளையாட்டு தொகுதி நிர்மாணம் ஆரம்பிப்பு ! - Sri Lanka Muslim

கல்முனை சந்தாங்கேணி மைதான உள்ளக விளையாட்டு தொகுதி நிர்மாணம் ஆரம்பிப்பு !

Contributors

அபு ஹின்சா

170 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் கல்முனை மாநகர சந்தாங்கேணி விளையாட்டு மைதான பாரிய அளவிலான உள்ளக விளையாட்டு தொகுதி அமைப்பதற்கான வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் விளையாட்டு அமைச்சின் பொறியியல் பிரிவின் பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாடி இந்த வேலைத்திட்டத்தின் இறுதிக்கட்ட தீர்மானத்தை எட்டினார்.

இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுக்க கட்டிட நிர்மாண வேலைகளை செய்யும் ஒப்பந்த நிறுவனத்திற்கு அதற்கான பணிப்புக்களையும், ஆவணங்களையும் விளையாட்டு அமைச்சு வழங்கியுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த நிறுவனம் இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட நகர்வாக setting out செய்யும் பணிகளை முன்னெடுக்க உள்ளது. இதன் அடுத்த கட்டமாக இன்னும் சில தினங்களில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், அரச உயரதிகாரிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு கட்டுமானவேலைகளை ஆரம்பித்து வைக்க உள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கடந்த காலங்களில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சராக இருந்த போது இந்த சந்தாங்கேணி மைதானத்தை தேசிய மைதானமாக மாற்றுதல் மற்றும் கல்முனை மாநகர சந்தாங்கேணி விளையாட்டு மைதான பாரிய அளவிலான உள்ளக விளையாட்டு தொகுதியமைத்தல் போன்றவற்றை முன்னெடுத்து வந்திருந்தார். இதன் வெளிப்பாடாகவே இந்த அபிவிருத்திப்பணிகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team