கல்முனை பிரதி மேயர் பதவி என்பது சாய்ந்தமருது மக்களுக்கு தங்கத் தட்டில் வைத்துக் கொடுக்கப்பட்ட ஓட்டைப் பாத்திரம்! - Sri Lanka Muslim

கல்முனை பிரதி மேயர் பதவி என்பது சாய்ந்தமருது மக்களுக்கு தங்கத் தட்டில் வைத்துக் கொடுக்கப்பட்ட ஓட்டைப் பாத்திரம்!

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

சாய்ந்தமருது தோணாவை துப்புரவு செய்யும் பணிகள் தொடர்பில் காணப்படும் தடைகள், பிரச்சினைகள் அந்த தோணாவிலிருந்து வரும் நாற்றத்தையும் விட சற்று அதிகமான நாற்றமாகவே உள்ளது. கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கல்முனை மேயர் நிசாம் காரியப்பரின் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பருமான ஜெமீல் இந்த தோணா விடயத்தில் களத்தில் நின்று காரியமாற்றுவது போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படங்கள் காட்டப்பட்டன. ஆனால், இன்று அனைத்து அமர்ந்து அனாதையான நிலையில் நாற்றம் மட்டும் மூக்கைப் பொத்த வைக்கிறது.

 

சின்னதொரு தோணாவைச் சுத்தப்படுத்தி விடுவது கல்முனை மாநகர சபையைப் பொறுத்த வரையில் பெரிய காரியம் அல்ல. இதற்கான நிதி உதவிகள் கூட பிற நிறுவனங்களால் வழங்கப்பட்டவைதான். எனவே, வேலைகளை முன்னெடுப்பது மட்டும்தான் கல்முனை மாநகர சபைக்கு உரிய வேலை. ஆனால், அதிலும் வேலை இல்லாத நிலை.

 

இந்தத் தோணா அபிவிருத்திப் பணிகளில் நிறைய கொந்தராத்து விடயங்களும் உள்ளன. அதனால்தான் இந்தச் சீரழிவு. இந்த விடயத்தை தட்டிக் கேட்கவும் ஆட்கள் இல்லை. காரணம், இதற்கான நிதி ஒதுக்கீடான 13 இலட்சம் ரூபாவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகளில் சில செல்வாக்குமிக்கவர்களின் கறைபடிந்த கரங்களும் உள்ளன.
சின்னச் சின்ன நகர சபைகளே பெரிய, பெரிய பணிகளை எல்லாம் செய்யும் போது கல்முனை மாநகர சபை இன்று இந்த விடயத்தில் அக்கறை காட்டுவதாகவும் இல்லை. என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரிப்பதாகவும் இல்லை.

 

இது ஒரு புறமிருக்க, சாய்ந்தமருதுவில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு வளைவுக்கு பெயின்ட் பண்ணி பெயர் வைப்பதற்கு மேயர் நிசாம் காரியப்பர் இணக்கம் தெரிவித்து எவ்வளவோ காலமாகியும் இன்னும் ஒன்றும் நடந்தபாடில்லை. பத்திரிகைகளின் செய்தி பிரபலத்துடன் எல்லாம் கோவையாக, அறிக்கையாக அடங்கி, முடங்கிப் போய்விட்டன.

 

எது எப்படியிருப்பினும் சாய்ந்தமருது பிரதேசம் தொடர்பான பாரா முகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த ஊர் மக்களைத் திருப்திப்படுத்தி அவர்கள் மனதை வெல்லலாம் என்பதற்காக முழக்கம் மஜீதுக்கு பிரதி மேயர் பதவியாம். சாய்ந்தமருது மக்களை என்ன இவர்கள் கேணிப் பயல்கள் என்று நினைத்து விட்டார்களா? அந்த மக்களை பேய் காட்டி ஏமாற்றும் காலம் மலையேறி விட்டது.

 

சிராஸ் மீராசாகிப் கல்முனை மேயராக இருந்த போது நிசாம் காரியப்பர் பிரதி மேயராக இருந்தார். ஆனால், அவருக்கு ஒரு குண்டூசியைக் கூட தூக்கக் கூட அதிகாரம் இல்லை. அதேபோன்று நிசாம் காரியப்பர் மேயரான போது கொஞ்ச நாட்கள் சிராஸ் மீராசாகிப் பிரதி மேயராக இருந்தார். அவருக்குத்தான் அதிகாரம் கொடுக்கப்பட்டதா.? இல்லையே கல்முனை நகர சபை அலுவலகத்தில் அவரது அறைக்குள் பாய் போட்டு உட்கார வேண்டிய நிலையே அவர் காணப்பட்டார்.

 

எனவே, பிரதி மேயர் என்பது எந்த அதிகாரமும் இல்லாத ஒன்று. அதுவே இன்று தங்கத் தட்டில் வைத்து சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓட்டைப் பாத்திரம் கொண்ட வெகுமதி. அந்தளவு ஏமாந்து போக சாய்ந்தமருது மக்கள் மடையர்கள் அல்லர்.

 

சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளுராட்சி கட்டமைப்பு தேவை என கேட்கப்பட்ட போது அதனை சிராஸ் மீராசாகிப் என்ற தனி மனிதர் அல்லது அரசியல் விவகாரம் என்று பார்க்காமல் ஊர் விடயமாக நோக்கி ஜெமீல் அந்தக் கோரிக்கைக்கு வலு சேரத்திருக்க முடியும். மாறாக ஊர் மகக்களை ஏமாற்றும் முயற்சியில்தான் அவரும் இறங்கியிருந்தார்.

 

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைச்சர் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் இந்த விடயம் பேசப்பட்ட போது, கல்முனை மாநகர சபையின் கிளை ஒன்றைச் சாய்ந்தமருதுவில் திறந்தால் எல்லாம் சரியாகி விடும் என்ற அடிப்படையில் ஜெமீல் தலைவருக்குப் புத்தி சொல்லியிருந்தார்.
எனவே ஊர் பெரியவர்களே இப்படி இருக்கும் போது அடுத்த வீட்டுக்காரனைக் குற்றஞ் சொல்வதும் தப்புத்தான்.

 

யார் குற்றினாலும் அரிசியானால் சரி என்பார்கள். அதே போன்று யார் என்ன செய்தாலும் பிரதேசத்துக்கு அபிவிருத்தி வந்தால் சரி என்று சிந்திக்க இன்று கல்முனை தொகுதிக்கு யாருமில்லை. ஏதாவது ஒன்றை ஒருவர் செய்ய முயற்சித்தால் ஏன் செய்வதற்கு மனதளவில் நினைத்தால் கூட அதற்கு அரசியல் சாயம் பூசப்பட்டு தடங்கல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதுதான் இன்றைய கல்முனை அரசியல் களமாகும். புனிதமான பணிகள், எண்ணங்கள் அனைத்துமே மர்ஹும் மாமனிதர் அஷ்ரஃப், முன்னாள் அமைச்சர் மன்சூர் ஆகியோர் காலத்துடன் மடிந்து போயின. இன்று குறுகிய சிந்தனைகள்தான் கல்முனையை கோலோச்சுகிறது. இந்த நிலை அங்கும தொடரும் வரை சாபக் கேடுதான்.

 

கல்முனை சாஹிப் வீதி புனரமைப்பு பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேற்கொள்ள முயற்சித்த போது அதற்கே தடைகளை ஏற்படுத்தியவர்கள். அடுத்த ஊரின் அபிவிருத்தி தொடர்பில் அக்கறையா கொள்ளப் போகிறார்கள்?

Web Design by Srilanka Muslims Web Team