கல்முனை புதிய முதல்வர் நீதி, நேர்மையான ஆட்சியை நடத்துவார் என நம்புகின்றோம் : ஜெமீல் - Sri Lanka Muslim

கல்முனை புதிய முதல்வர் நீதி, நேர்மையான ஆட்சியை நடத்துவார் என நம்புகின்றோம் : ஜெமீல்

Contributors

-அஸ்லம் எஸ்.மௌலானா-

கல்முனை மாநகரின் புதிய முதல்வர் நிசாம் காரியப்பர் இன, மத, பிரதேச வாதங்களுக்கு அப்பால் நீதி, நேர்மையான ஆட்சியை நடத்துவார் என திடமாக நம்புகின்றோம் என கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர புதிய முதல்வர் நிசாம் காரியப்பருக்கு கல்முனையில் அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகைலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் உச்ச பீட உறுப்பினர் ஏ.சி.சத்தார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதீதியாக கலந்து கொண்டார்.

அங்கு ஜெமீல் மேலும் பேசுகையில் கூறியதாவது;

“முஸ்லிம் சமூகத்தினதும் கிழக்கு மாகாணத்தினதும் முக வெற்றிலையான கல்முனை மாநகருக்கு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பேரியக்கமான முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப கால போராளியும் மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் உறவினரும் இந்த இயக்கத்தின் பிரதிச் செயலாளர் நாயகமுமான நிசாம் காரியப்பர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டிருப்பதானது இன்றைய சூழ்நிலையில் ஒரு முக்கிய மைல் கல்லாக கருதப்பட வேண்டியுள்ளது.

இதனால் அவர் மீதான பார்வையும் எதிர்பார்ப்பும் மக்களிடம் மிகைத்துக் காணப்படுகிறது. அதற்கேற்ப அவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. அந்த வகையில் ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்காமல்- இனவாதம் பிரதேச வாதங்களுக்கு அப்பால் நின்று- தூய்மையான எண்ணத்துடன் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு பாடுபடுவார் என எதிர்பார்க்கின்றேன்.

முஸ்லிம் காங்கிரசின் அதிகாரத்தில் உள்ள ஓரே ஒரு மாநகர சபை இந்த கல்முனை மாநகர சபையாகும்.முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அடையாளத்தை உறுதிப்படுத்தி- ஒரு முன்மாதிரியான ஆட்சியை இந்த மண்ணில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதே மறைந்த தலைவரின் கனவாக இருந்தது. இதனை அவரது அரசியல் பாரம்பரியத்தில் வளர்ந்து வந்த சட்டத்தரணி நிசாம் காரியப்பர் திறம்பட நிறைவேற்றுவார் என்று நம்புகின்றோம்.

கடந்த 2011 ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபைத் தேர்தல் இடம்பெற்ற போது நானும் இந்த முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டேன். ஆனால் கட்சித் தலைமைத்துவம் விடுத்த கட்டளையின் பேரில் கட்சியினதும் சமூகத்தினதும் நலன் கருதி நான் எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். மட்டுமல்லாது கல்முனை முதல்வராக சட்டத்தரணி நிசாம் காரியப்பரை வெற்றி பெறச் செய்வதற்கு உழைக்குமாறு கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி எம்.பி. அவர்கள் என்னைப் பணித்ததற்கு இணங்கவே அவரது வெற்றிக்காக நான் அர்ப்பணிப்புடன் செயலாற்றினேன். இதுதான் அன்றைய எனது நிலைப்பாட்டுக்கு காரணமாக அமைந்தது.

இதற்காக அன்று நான் பல சோதனைகளையும் வேதனைகளையும் நஷ்டங்களையும் எதிர்கொண்டு புண்பட்டுப் போன போதிலும் மனம் தளராமல் எனது சமூகப் பணியை மேற்கொண்டு வருகின்றேன்.

அத்தகைய ஒரு சூழ்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது என்னைத் தோற்கடித்து பழி தீர்ப்பதற்கு கட்சிக்குள்ளேயே சிலர் பாரிய திட்டமிடலுடன் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் இறைவனின் உதவியால் சாய்ந்தமருதில் இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் எமது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தனது உரையில் எனக்கு வழங்கிய அங்கீகாரமும் சான்றிதழும் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் நான் முதன்மை உறுப்பினராக மீண்டும்  தெரிவானேன்.

இந்நிலையில் கல்முனை மாநகர முதல்வராக சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பதவியேற்றுள்ளதால் அவருடன் நானும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களும் ஒன்றிணைந்து கல்முனையில் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.

அந்த வகையில் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பதவியேற்ற கையேடு சில முக்கிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்னேற்பாடுகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம் என்பதை சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் முழுமையான அனுசரணையுடன் அந்த மாகாண சபையின் ஒத்துழைப்பை கல்முனை மாநகர சபைக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அத்துடன் ஆசிய பவுண்டேஷன் மற்றும் கொய்கா திட்ட நிதி நிறுவனம் போன்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைமைப் பீடங்களை முதலமைச்சருடன் நானும் முதல்வரும் கொழும்பு சென்று சந்தித்து- பேச்சுவார்த்தை நடத்தி சில அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதிகளை உத்தரவாதப்படுத்தியுள்ளோம்.

இவை தவிர வெளிநாடுகளில் உள்ள சில முக்கிய- நவீனத்துவம் பெற்ற நகரங்களுடன் நமது கல்முனை மாநகரை கூட்டிணைப்பு செய்து பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான நகர்வுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை சாய்ந்தமருதில் பீச் பார்க்கின் இரண்டாம் கட்ட வேலைகளை மூன்று மாத காலத்திற்குள் பூர்த்தி செய்வதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்த்துடன் சாய்ந்தமருது தோனாவை துப்பரவு செய்து நவீன் முறையில் அபிவிருத்தி செய்வதற்கும் அவசர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று முதல்வரை இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team