கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது புறக்கணிக்கப்படுவதாக ஜெமீல் தெரிவிக்கும் குற்றச்சாட்டை அடியோடு மறுக்கிறார் முதல்வர் ஏ.எம்.றகீப்..! - Sri Lanka Muslim

கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது புறக்கணிக்கப்படுவதாக ஜெமீல் தெரிவிக்கும் குற்றச்சாட்டை அடியோடு மறுக்கிறார் முதல்வர் ஏ.எம்.றகீப்..!

Contributors

மாநகர சபையில் ஊழல் இடம்பெறுமாயின் ஆதாரங்களுடன் நிரூபித்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கத் தயார் எனவும் பகிரங்க அறிவிப்பு..!

கல்முனை மாநகர சபையில், மாநகர ஆணையாளர் மற்றும் கணக்காளர் ஆகியோர் ஊழல், மோசடிகளில் ஈடுபடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், அதற்கான ஆதாரங்களை முன்வைத்து, நிரூபிப்பாரானால் அவ்வதிகாரிகளை சட்டத்தின் முன்னிறுத்தி அதற்கான தண்டனையை பெற்றுக்கொடுப்பதற்கு நான் தயாராகவுள்ளேன் என மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது பிரதேசம் புறக்கணிக்கப்படுவதாக அவர் தெரிவிக்கும் குற்றச்சாட்டையும் தான் அடியோடு மறுப்பதாக மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிப்பத்தாவது;

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், யூடியூப் சனல் பேட்டி ஒன்றில் கருத்து வெளியிடுகையில், கல்முனை மாநகர சபையில், மாநகர ஆணையாளரும் கணக்காளரும் ஊழல் செய்வதாகவும் கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருதுக்கு எவ்வித சேவைகளும் வழங்கப்படுவதில்லை என்றும் இப்புறக்கணிப்பினால்தான் சாய்ந்தமருது தனியான நகர சபைக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது எனவும் குறிப்பிட்டுட்டுள்ளார்.

கல்முனை மாநகர சபையில் ஊழல் இடம்பெறுமாயின் அதற்கான ஆதாரங்களோடு சகோதரர் ஜெமீல் அதனை நிரூபித்தால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு, அவர்களுக்கு எந்தத் தணடனையையும் பெற்றுக் கொடுப்பதற்கு முதல்வராகிய நான் வ இருக்கிறேன்.

என்னுடைய ஆட்சி நிர்வாகத்தில் கல்முனை மாநகர சபையின் செலவு உள்ளிட்ட அனைத்து நிதி சம்மந்தப்பட்ட விடயங்களும் கணனிமயப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு 10 ரூபாவையேனும் எவராலும் கையாடல் செய்ய முடியாதவாறே தற்போது எமது மாநகர சபையின் நிதிக்கட்டமைப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது.

ஆகையினால் ஆதாரமில்லாமல் எவரையும் அபாண்டமாக குற்றஞ்சாட்ட வேண்டாம் என சகோதரர் ஜெமீல் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், மாநகர சபையின் சேவை வழங்கலை பொறுத்தவரையில் ஏனைய ஊர்களைப் போன்றே, சாய்ந்தமருது பிரதேசத்திற்கும் உரிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த காலங்களை விட எனது ஆட்சி நிர்வாகத்தில் மாநகர சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற திண்மக்கழிவகற்றல் சேவையை சாய்ந்தமருது பிரதேசத்திலும் எவ்வித குறையுமில்லாமல், மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றோம். இச்சேவை தொடர்பில் இப்பிரதேச மக்கள் தமது திருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறே, தெரு விளக்கு பராமரிப்பு சேவையும் இப்பிரதேசத்தில் என்றுமில்லாதவாறு இரவு பகலாக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒரு முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் இரவு நேரத்தில் கூட உரிய இடத்திற்கு சென்று, திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவை தவிர இப்பிரதேசத்தில் வடிகான் பராமரிப்பு பணியையும் கிரமமாக மேற்கொண்டு வருகின்றோம். எதிர்வரும் மழை காலத்தை முன்னிட்டு இதனை இன்னும் துரிதமாக முன்னெடுத்து வருகின்றோம்.

அத்துடன் டெங்கு ஒழிப்பு மற்றும் கொரோனா கட்டுப்பாட்டுக்கான சுகாதாரத்துறையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநகர சபையினால் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

ஒரு மாநகர சபையினால் ஒரு பிரதேசத்திற்கு எந்தெந்த சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமோ அவை அனைத்தும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கும் எவ்வித குறைபாடுமின்றி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதை நான் ஆணித்தரமாக கூறி வைக்க விரும்புகின்றேன்.

உண்மை இவ்வாறிருக்க, கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது புறக்கணிக்கப்படுகிறது என்ற ஜெமீலின் குற்றச்சாட்டு குறித்து நான் மிகவும் வருத்தமடைகின்றேன். சாய்ந்தமருது நகர சபை கோரிக்கை என்பது நான் முதலவாரான பின்னர் உருவான கோஷமல்ல என்பதும் அது மிக நீண்ட காலமாக இருந்து வந்த கோஷம் என்பதும் எல்லோரும் அறிவார்கள்.

ஆகவே, சகோதரர் ஜெமீல் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் எவ்வித ஆதாரமுமற்றவை என்பதால் இவ்வாறு அபாண்டங்களை சுமத்தி, மக்களை குழப்பமடைய செய்ய வேண்டாம் என்று அவரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், எமது கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்கள் மீது சகோதரர் ஜெமீல் தெரிவிக்கும் கருத்துக்களும் ஏற்புடையதல்ல. எமது முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை வகிக்கக்கூடிய ஆற்றல், ஆளுமை, அனுபவம் எல்லாமே தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் வெகுவாக இருப்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

அவர் வேறு எவரினதும் கதையைக் கேட்டு இயங்குமளவுக்கு தைரியமில்லாத ஒரு தலைமையல்ல. ரவூப் ஹக்கீம் அவர்கள் தற்துணிவுள்ள, நல்ல சிந்தனையும் நுண்ணறிவும் தூரநோக்குமுடைய தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த ஒரு தலைவராவார் என்பதையும் சகோதரர் ஜெமீல் புரிந்து கொள்ள வேண்டும்- என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஊடகப் பிரிவு

Web Design by Srilanka Muslims Web Team