கல்முனை மாநகர சபை ஊழியர்கள் 29 பேருக்கு கொரோனா தொற்று : கழிவகற்றலுக்கு மக்களின் ஒத்துழைப்பை கோருகிறார் கல்முனை முதல்வர் ஏ.எம். றக்கீப்..! - Sri Lanka Muslim

கல்முனை மாநகர சபை ஊழியர்கள் 29 பேருக்கு கொரோனா தொற்று : கழிவகற்றலுக்கு மக்களின் ஒத்துழைப்பை கோருகிறார் கல்முனை முதல்வர் ஏ.எம். றக்கீப்..!

Contributors

நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர சபை ஊழியர்கள் 29 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் மக்களுக்கு வழங்கும் சேவையில் சில தொய்வு நிலைகள் உள்ளது. மக்களும் இந்த காலகட்டத்தின் சூழ்நிலையை பொருந்திக்கொண்டு சில விட்டுக்கொடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 150 பேர் தேவையான ஆளணியில் 104 பேர் மட்டுமே கல்முனை மாநகர சபையில் ஊழியர்களாக உள்ளார்கள் அதில் 52 பேர் ஒப்பந்த அடிப்படையிலும் மீதி 52 பேர் நிரந்தரமான ஊழியர்களாகவும் உள்ளனர் என கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தெரிவித்தார்.

கல்முனை முதல்வர் அலுவலகத்தில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர் ஆகியோர் இணைந்து கலந்துகொண்டு இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் உள்ள 11 ஊழியர்களும் , சவளக்கடை பிரதேசத்தில் உள்ள 05 ஊழியர்களும் அடங்களாக மொத்தம் 29 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு அசௌகரியங்கள் பொதுமக்களுக்கும், கல்முனை மாநகர சபைக்கும் உள்ளது. கல்முனை மாநகர 120000 மக்களும் கல்முனை மாநகர பிரதேசங்களுக்கு தினமும் வந்து செல்லும் 30000 மக்களும் அடங்களாக மொத்தம் ஒன்றரை லட்சம் மக்களும் சேர்ந்து சராசரியாக 120 தொன் திண்மக்கழிவுகள் தினமும் வெளியாகிறது. இதனை முறையாக முகாமைத்துவம் செய்ய இந்த நாட்டில் இப்போது உள்ள கொரோனா சூழ்நிலையில் பல இடர்பாடுகள் உள்ளது.

மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் கல்முனை மாநகர சபையானது கடந்த மாதங்களில் ஏற்பட்ட கடையடைப்புக்கள், வர்த்தக நிலையங்களின் நிலைகள் தொடர்பில் வரிப்பணம் அறவிட முடியாமல் போனது. இதனால் வெளியில் கடன் வாங்கியே ஊழியர்களின் 32 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தை வழங்கும் நிலை இப்போது உள்ளது. இந்த மாநகர மக்களின் சுகாதார நடவடிக்கைகளை ஒழுங்காக மேற்கொள்ள கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர் தலைமையிலான சுகாதார குழு சிறப்பாக இயங்குகிறது. இருந்தாலும் மக்களின் சுகாதார நிலைகளில் நாங்கள் எப்போதும் விழிப்பாக இருக்கிறோம். மக்களின் உயிர் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதனாலும் கொரோனா தொற்று மற்றும் பல காரணங்களினால் சில தொய்வு நிலைகள் உள்ளது. இதனை வெற்றிகரமாக கடந்து வர மக்கள் சில விட்டுக்கொடுப்புடன் கூடிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team