கல்முனை மாநகர மக்கள் பிரதேசத்தின் நிலையறிந்து நடக்க வேண்டும் : டாக்டர் அர்சத் காரியப்பர்..! - Sri Lanka Muslim

கல்முனை மாநகர மக்கள் பிரதேசத்தின் நிலையறிந்து நடக்க வேண்டும் : டாக்டர் அர்சத் காரியப்பர்..!

Contributors


நூருல் ஹுதா உமர்

நாட்டில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு அசௌகரியங்கள் உள்ளதனாலும் திண்மைக் கழிவகற்றலுக்கான மனித வலுவில் மூன்றில் ஒரு பங்கினர் மாத்திரமே இப்போது கல்முனை மாநகர சுகாதார பிரிவில் கடமையாற்றும் நிலையினாலும் திண்மக்கழிவகற்றலை சீராக செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளது. இதனால் திண்மக்கழிவுகளை குறைப்பதில் மக்கள் சற்று கவனம் செலுத்துமாறும், திண்மக்கழிவுகளை அகற்றும் போது நாட்டின் இப்போதைய நிலையை கவனத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளை பேணி நடக்குமாறும் கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே. கே. எம். அர்சத் காரியப்பர் மக்களை கேட்டுக்கொண்டார்.

கல்முனை மாநகர சபையினால் திண்மகழிவுகள் அகற்றப்படுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் இன்று (22) அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அங்கு தெரிவித்த அவர், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், ஆணையாளர் எம்.சி. அன்ஸார் போன்றோர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இப்போதைய அசாதாரண சூழ்நிலையில் பல்வேறு அசௌகரியங்களுடனையே திண்மக்கழிவற்றல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

எங்களின் ஊழியர்கள் திண்மக்கழிவற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவர்களுடனான இடைவெளிகளை பேணிக்கொள்ளுமாறும், சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறும் மக்களை கேட்டுக்கொள்வதுடன் பொது இடங்களில் திண்மக்கழிவுகளை வீச வேண்டாம். அவ்வாறு சமூக நலனில்லாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இவ்வாறானவர்கள் மூலம் பல்வேறு சிக்கல்களை கல்முனை மாநகர சுகாதார பிரிவு எதிர்கொண்டு வருகிறது. இந்த காலகட்ட நோய் நிலைகளை கவனத்தில் கொண்டு மக்கள் ஒத்துழைப்பு நல்க முன்வரவேண்டும் என்று மேலும் மக்களை கேட்டுக்கொண்டார்.

Web Design by Srilanka Muslims Web Team