கல்முனை ஸாஹிரா கல்லூரி நடைபவனி விவகாரத்தில் சாயந்தமருது பள்ளிவாசல் மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டதா? » Sri Lanka Muslim

கல்முனை ஸாஹிரா கல்லூரி நடைபவனி விவகாரத்தில் சாயந்தமருது பள்ளிவாசல் மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டதா?

sai

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

‘சொக்லட் வாங்கித் தந்தால்தான் ஸ்கூலுக்குப் போவேன்’ என்று பாலர் வகுப்பு பிள்ளைகள் பெற்றோரிடம் அடம் பிடிப்பது போல் நீங்களும் அடம்பிடியுங்கள்’ என சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு சிலர் தவறான ஆலோசனைகளை வழங்குகிறார்களா அல்லது பள்ளிவாசல் நிர்வாகத்தின் மீது தங்களது தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

எதிர்காலத்தில் சாய்ந்தமருதின் அனைத்து நலன்களையும் அரசியல் மயப்படுத்தி எதிர்கால சந்ததியையே மூளைச் சலவைக்கு உள்ளாக்கி தவறான வழியில் இட்டுச் செல்ல ஒரு சிலர் பள்ளிவாசல் நிர்வாகத்தைப் பிழையாக வழி நடத்த முயற்சிப்பதாகவே நான் சந்தேகிக்கிறேன். கல்முனை ஸாஹிரா கல்லூரி நடை பவனி விடயத்தில் இதனை என்னால் உணர முடிந்தது.

கல்முனை ஸாஹிராக் கல்லூரி என்பது கல்முனையின் மாணிக்கம். இந்த நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் இன்று கல்முனையை கல்வியலாளர் வாழும் மண்ணாக அடையாளப்படுத்தக் கூடியதான ஓர் இமயமலையாக கல்முனை ஸாஹிரா திகழ்கிறது. இந்தக் கல்லூரியின் மேம்பாட்டு நடவடிக்கைகள், செய்றிட்டங்களுக்கு கட்சி, அரசியல், பிரதேச வேறுபாடின்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

அங்கு கல்வி பயின்ற எங்களால்தான் கல்முனை ஸாஹிரா பெருமையடைகிறது என்பதனை விட கல்முனை ஸாஹிரா என்ற நாமத்தால்தான் எமது முழுச் சமூகமுமே இன்று பெருமையடைகிறது என்று கூறுவதே சிறப்பு.

ஒரு மாபெரிய கல்விச்சாலையின் ஏற்பாட்டில் நடைபெறும் கல்முனை ஸாஹிரா நடைபவனியில் கலந்து கொள்வதால் எமது ஊரின் கோரிக்கை மழுங்கடிக்கப்பட்டு விடுமோ என்று சிறிதளவு சிந்திப்பது கூட பெரிதளவான பிழையாகும்.

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 10 ஆம் திகதி சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. குறித்த கடிதமானது சிலரின் தவறான ஆலோசனைகள், நிர்ப்பந்தத்தினால்தான அவசர, அவசரமாக எழுதப்பட்டுள்ளது என்பது பள்ளிவாசலின் பிந்திய மாற்றுத் தீர்மானத்தின் ஊடாக அப்பட்டமாகத் தெளிவாகிறது.

கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபர் முஹம்மத் அவர்கள் தலைமையில் கடந்த 7 ஆம் திகதி ஒரு கூட்டம் கல்லூரியில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் இங்கு வரவில்லையா? என அதிபரை நோக்கி கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்துள்ள அதிபர், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் செயற்பாடற்ற ஒருவராக உள்ளார் என்று பதிலளித்துள்ளார்.

இதன் போது எழுந்த உதவிச் செயலாளர், இவ்வாறு தெரிவித்தார்…… ‘ அவரை வைத்து (பழைய மாணவர் சங்கச் செயலாளரை) எதனையும் செய்ய முடியாது. அவர் ஒத்துழைப்பதில்லை’ என தெரிவித்துள்ளார். இதனையடுத்து கல்முனை ஸாஹிரா நடைபவனியை நடத்துவது தொடர்பில் மீண்டும் மறுநாள் கூடி ஆராய்வோம் என தெரிவிக்கப்பட்டு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இவ்வாறனதொரு நிலையில் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கச் செயலாளரினால் ஒரு கூட்டம் நடத்தப்பட்டு கல்முனை ஸாஹிரா நடை பவனி தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. ஆனால் கல்முனை ஸாஹிராக் கல்லூரி அதிபரின் அனுமதி இல்லாமல் குறித்த கூட்டம் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டமை தவறெனச் சுட்டிக்காட்டப்பட்டு செயலாளர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். (இது வேறு விடயம்.)

இந்த நிலையிலேயே சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினால் கடந்த 10 ஆம் திகதி கல்முனை ஸாஹிரா நடைபவனி தொடர்பில் ஓர் கடிதம் வெளியிடப்பட்டது.

அதேவேளை, சில நபர்களால் கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபரும் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில், கடந்த 11 ஆம் திகதி இரவு பள்ளிவாசல் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் சிவில் அமைப்புகள் ஒன்று கூடி கல்முனை ஸாஹிரா நடைபவனி தொடர்பில் ஆராய்ந்துள்ளன. இந்தக் கூட்டத்தில் கல்முனை பள்ளிவாசலைச் சேர்ந்த சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது இந்த விடயம் தொடர்பில் மறு நாளான 12 ஆம் திகதி கூடி ஆராய்வோம் என சாய்ந்தமருது பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம். ஹனீபா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து 12 ஆம் திகதி குறித்த கூட்டம் நடைபெற்று கல்முனை ஸாஹிரா நடைபவனி தொடர்பில் ஆராயப்பட்டு, அதனை நடத்துவதற்கான அதரவு சமிக்ஞை வெளியிடப்பட்டது.

இங்குதான் மர்ம முடிச்சுகளைக் அவிழ்க்க வேண்டியுள்ளது. கல்முனை ஸாஹிராக் கல்லூரி அதிபர் தலைமையில் 7 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்துக்கும் 12 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்துக்குமிடைலான காலப் பகுதியில் வரும் திகதியான 10 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை பள்ளிவாசல் நிர்வாகம் ஏன் அவசர அவசரமாக வெளியிட வேண்டும்?

அவ்வாறானதொரு கடிதத்தை வெளியிடாமல் சற்றுப் பொறுமை காத்து 12 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் அனைவரது ஆலோசனையிலும் கருத்தொருமிப்பிலும் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் முடிவை அறிவித்திருக்கலாம்தானே? 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்தின் தீர்மானத்தையே 12 ஆம் திகதிய கூட்டத்தின் தீர்மானமும் உறுதிப்படுத்தியிருந்தால் அது வேறு விடயம். ஆனால், அவசரமாக வெளியிடப்பட்ட கடிதத்தின் தீர்மானத்துக்கும் 12 ஆம் திகதி எடுக்கப்பட்ட மாற்று தீர்மானத்துக்குமிடையில் காணப்படும் வித்தியாசமே இங்கு பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது.

இந்த விடயத்தில் பள்ளிவாசலின் கொள்கை தனித்துவமானதாகவும் ஒன்றானதாகவும் இருந்திருந்தால் இரண்டு தீர்மானங்களுக்கு ஒரு போதும் இடமில்லையே? 10 ஆம் திகதிக்கும் 12 அமு் திகதிக்குமிடையிலான குறுகிய இடைவெளிக்குள் இரண்டு மாற்றுத் தீர்மானங்கள் என்பது இடையில் ஏற்பட்ட தலையீடுகளைத் தானே வெளிசசம் போட்டுக் காட்டுகின்றன.

இதன் மூலம் நான் தெளிவு பெறுவது என்னவென்றால், கல்முனை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர்களின் நடைபவனிக்கு ஆதரவு வழங்காத வகையில் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு பிழையான தகவல்களை வழங்கி அவர்களை தவறான பாதையில் மூளைச் சலவை செய்ததன் விளைவே 10 ஆம் திகதியிடப்பட்ட சாய்ந்தமருது பள்ளிசாலின் கடிதம் என்பதே ஆகும்.

sai

Web Design by The Design Lanka