களுத்துறையில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக களமிறங்கியுள்ள அமைச்சர் ரோஹித? - Sri Lanka Muslim

களுத்துறையில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக களமிறங்கியுள்ள அமைச்சர் ரோஹித?

Contributors
author image

Editorial Team

அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன பொதுபல சேனாவுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதற்கென திட்டமிட்ட ரீதியில் களுத்துறை நகர மத்தியில் முஸ்லிம்களின் வர்த்தகர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக சட்டவிரோதக் கட்டிடங்கள் என்ற பெயரில் வர்த்தக நிலையங்களின் ஒரு பகுதியை இடித்துத் தள்ளுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை மூலம் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

மேலும் களுத்துறையில் உள்ள முஸ்லிம்களின் நடைபாதைக் கடைகளை முற்றாக அகற்றவும் அவரது தலையீட்டின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

 

இந்நிலையில் அப்பகுதி வர்த்தகர்கள் ஒன்றிணைந்து அமைச்சர் ராஜிதவிடம் இது தொடர்பில் முறையிட்டிருந்தனர்.

இதனையடுத்து பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவிடம் பேசிய அமைச்சர் ராஜித, பாதிப்புக்குள்ளாகவிருக்கும் வர்த்தகர்கள் தொடர்பில் எடுத்துக் கூறியுள்ளார்.

 

மேலும் நடை பாதை வர்த்தகர்களுக்கு புதிதாக வர்த்தகத் தொகுதியொன்றை அமைத்துக் கொடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோத்தபாய ராஜபக்ஷவும் அதற்கு இணங்கியுள்ளார். இதற்கான நிர்மாணப் பணிகளும் சில நாட்களில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் மீண்டும் இவ்விடயத்தில் தலையிட்டுள்ள அமைச்சர் ரோஹித, முஸ்லிம்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்தவித உதவிகளையும் பெறவிடப் போவதில்லை என்றும் சூளுரைத்துள்ளார்.

 

களுத்துறை நகர சபை எதிர்க்கட்சித் தலைவரான அவரது மருமகன் மற்றும் பொதுபல சேனாவுடன் இணைந்து முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகளை அவர் தீவிரப்படுத்தியுள்ளார்.

 

மேலும் அமைச்சர் ராஜித சேனாரத்தின தனது தொகுதிக்குள் அனுமதியின்றி, நுழைந்து முஸ்லிம்களுக்காக செயற்படுவதாகவும் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

 

இதனையடுத்து முஸ்லிம் வர்த்தகர்களுக்கென நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த புதிய வர்த்தகத் தொகுதியின் கட்டிட வேலைகள் முற்றாக கைவிடப்பட்டுள்ளன.(LW)

Web Design by Srilanka Muslims Web Team