கள்ளன் பொலிஸ் விளையாட்டில் ராஜபக்ச அரசு - வெறும் கண்துடைப்பு என்கிறார் துசாரா இந்துனில்..! - Sri Lanka Muslim

கள்ளன் பொலிஸ் விளையாட்டில் ராஜபக்ச அரசு – வெறும் கண்துடைப்பு என்கிறார் துசாரா இந்துனில்..!

Contributors

ராஜபக்ஷ அரசாங்கம் அத்தியவசியப் பொருட்கள் விடயத்தில் கள்ளன் பொலிஸ் விளையாட்டு விளையாடுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

தமக்குத் தேவையான விடயங்களை செய்து முடிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் அவசர காலச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசாரா இந்துனில் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ராஜபக்ஷ அரசாங்கம் கள்ளன் பொலிஸ் விளையாட்டில் ஈடுபட்டுவருகின்றது. இந்த விளையாட்டில் கள்ளனும், பொலிசும் நண்பர்கள் கூட்டம். இந்த விளையாட்டில் பொலிஸ் கள்ளவர்களைக் கைது செய்கின்றனர் ஆனால் தண்டனை தருகிறார்களா? இல்லை. அது விளையாட்டு.

அரசாங்கத்தின் வியாபார நண்பர்களுக்கு சீனிக்கான இறக்குமதி வரியினை அரசாங்கம் குறைத்து, தேவையான சீனியினை இறக்குமதி செய்யச் சொல்லிவிட்டு, தற்போது அதிக விலைக்கு சீனியினை விற்பனை செய்வதற்கான சந்தையினையும் திறந்து விட்டுள்ளது.

85 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சீனியினை அரசாங்கம் மக்களுக்கு நன்மை செய்வதாக காண்பித்து 130 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றது. வியாபாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் 45 ரூபா லாபம். இங்கு ஏமாற்றப்படுவது மக்கள் தான்.

தற்போது சீனியினை அரசாங்கம் விற்று லாபத்தினை தமது வியாபாரிகளுடன் பங்கிட்டுக் கொள்கின்றது. இந்த கள்ளன் பொலிஸ் விளையாட்டிற்கு அவசர காலச் சட்டம் அவசியமில்லை.

தமக்குத் தேவையான விடயங்களை செய்து முடிப்பதற்கு அரசாங்கம் அவசரம் அவசரமாக அவசர காலச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.

இன்று நாட்டில் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுகின்றார்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்படுகின்றார்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். வைத்தியர்கள் கைது செய்யப்படுகின்றார்கள்.

ஆக அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினர் கைது செய்யப்படும், விசாரிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய செயற்பாடுகளையே எதிர்க்கட்சியாகிய நாம் எதிர்க்கின்றோம் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team