கவிஞர் ஏ. இக்பால் நினைவரங்கில் 42 வது வகவ கவியரங்கம் (5--10- 2017) » Sri Lanka Muslim

கவிஞர் ஏ. இக்பால் நினைவரங்கில் 42 வது வகவ கவியரங்கம் (5–10- 2017)

i

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

வலம்புரி கவிதா வட்டத்தின் 42 வது கவியரங்க நிகழ்வுகள் 5–10- 2017 அன்று அண்மையில் மறைந்த கவிஞர் ஏ. இக்பால் அரங்கில் இடம்பெற்றது. வகவத் தலைவர் நஜ்முல்ஹுசைன்நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கினார். பிரபலத் தமிழ், ஆங்கிலக் கவிஞர் தர்காநகர்ஸபா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

மறைந்த கலைஞர் கே. மோகன் குமார், தமிழகத்தின் எம். ஜி.சுரேஷ் ஆகியோர் நினைவு கூரப்பட்டனர். அவர்கள் பற்றிய சிறு குறிப்புகளைக் கவிஞர் மேமன்கவி வழங்கினார். வரவேற்புரையைச் செயலாளர் இளநெஞ்சன்முர்ஷிதீனும், நன்றியுரையைச் செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஈழகணேஷும் வழங்கினர்.

அதிதியாகக் கலந்து கொண்ட தர்காநகர் சபா அவர்கள் மறைந்த கவிஞர் ஏ. இக்பாலுக்கும் தனக்குமிருந்த தொடர்புகள் குறித்தும் கவிஞர் இக்பாலிடம் தான் கண்ட ஆளுமைகள் குறித்தும் சிறப்பாக உரையாற்றினார். மேலும் அவர் தனது உரையில்,

கவிஞர் ஏ. இக்பால், 11.12.1953 ஆண்டு அம்பாறை, அக்கரைப்பற்றில் பிறந்தவர். களுத்துறை, தர்காநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தார். இவர் அக்கரைப்பற்று ரோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்றார். ஆசிரியராகக் கல்விச் சேவையை ஆரம்பித்த இவர், தமிழ்ப் பாடநூல் ஆலோசனை சபை உறுப்பினராகவும், இஸ்லாமியப் பாடநூல் எழுத்தாளராகவும், ஆசிரியக் கலாசாலையில் வருகைதரு விரிவுரையாளராகவும், கல்வியியல் கல்லூரியில் தமிழ்போதனாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் மட்டக்களப்புத் தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளராகவும், முஸ்லிம் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும், தர்க்காநகர் பதிப்பு வட்டப் பதிப்பு உதவியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

லப்கி, அபூஜாவித், கீர்த்தி, கலா போன்ற புனைபெயர்களைக் கொண்ட இவர், தனது பதினாறாவது வயதில் எழுத்துத்துறைக்குள் பிரவேசித்து 1959 இல் புதன் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றுள்ளார்.

இலங்கைத் தேசியப் பத்திரிகைகளிலும், முக்கியமான சஞ்சிகைகளிலும் மாத்திரமின்றி எக்ஸில், முஸ்லிம் முரசு, பிறை, நடை, தீபம் முதலிய பிற நாட்டுச் சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன.

இவர் முஸ்லிம் கலைச்சுடர் மணிகள், மௌலானா ரூமியின் சிந்தனைகள், மறுமலர்ச்சித் தந்தை, பண்புயர் மனிதன் பாக்கீர்மாக்கார், கல்வி ஊற்றுக் கண்களில் ஒன்று, நம்ப முடியாத உண்மைகள், பிரசுரம் பெறாத கவிதைகள், ஏ. இக்பால் கவிதைகள் நூறு, இலக்கிய ஊற்று (13 கட்டுரைகளின் ஊற்று), மாயத் தோற்றம், வித்து, மெய்ம்மை, புதுமை முதலான நூல்களையும் கல்வி, இலக்கியம், மொழி, வரலாறு தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். 2002 இல் தமிழ் நாட்டில் இடம்பெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு நாட்டாரியல் தொடர்பான ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளார். இலக்கியத் துறைக்கும் அப்பால் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை வானொலி தமிழ் – முஸ்லிம் சேவைகளில் பங்களிப்பு செய்து வந்துள்ளார்.

இவர் ‘மறுமலர்ச்சித் தந்தை’ என்ற நூலுக்காகச் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றுள்ளார். இலக்கிய உலகில் இவரது ஆளுமையையும், இவர் ஆற்றிய சேவையையும் பாராட்டிக் கவிஞர், இலக்கியமணி, கலாபூசணம், இலக்கிய வாரிதி, இலக்கிய விற்பன்னர், தமிழ் மாமணி முதலான பட்டங்களை அரசு, தகுதிசார் தனியார் நிறுவனங்கள் வழங்கிக் கௌரவித்துள்ளன’ எனக் குறிப்பிட்டார்.

கவியரங்குக்குக் கவிதாயினி யோகராஜன்சுசீலா தலைமை தாங்கினார். கவிஞர்கள் கலையன்பன்ரபீக், எம். பிரேம்ராஜ், கே. லோகநாதன், பாணந்துறை நிஸ்வான், தாஜ்மஹான், சுபாஷினி பிரணவன், தேஜஸ்வினி பிரணவன், இளநெஞ்சன் முர்ஷிதீன், கிண்ணியா அமீர் அலி, வெலிமடை ஜஹாங்கீர், மஸீதாஅன்சார், கலேவெல ஷப்னா, பாயிசா ஹமீட், ஆஷிகாராஹிலாஹலாம், எஸ். ஏ.கரீம், நாச்சியாதீவுபர்வீன், எம். வஸீர், வெலிப்பன்னைஅத்தாஸ், எம். நவ்ஸர், கஸ்ஸாலிஅஷ்ஷம்ஸ், ஆதில் உணர்ச்சிப்பூக்கள், யெஹ்யாஅய்யாஷ் ஆகியோர் கவிதை பாடினர்.

சபையைக் காப்பிக்கோ ஜின்னாஹ்ஷரிபுத்தீன், அஷ்ரப்சிஹாப்தீன், ஒளி அரசி பிரதம ஆசிரியர் ஜனதன், கலையழகிவரதராணி, கலாவிஸ்வநாதன்,; எம். பாலகிருஷ்ணன், ரஷீத் எம். இம்தியாஸ், நூருல்அயின்நஜ்முல்ஹுசைன், எஸ். தனபாலன், எம்.எஸ்.எம்.ராசிக், இ.ஜெகானந்தன், எஸ்.எச்.எம்.இத்ரீஸ், எஸ்.எச்.எம்.சுபைர், உவைஸ்ஷரீப் போன்றோர் அலங்கரித்தனர்.

i i.jpeg2

Web Design by The Design Lanka