கவிஞர் ஏ.இக்பால் மௌத்தாகி விட்டார் » Sri Lanka Muslim

கவிஞர் ஏ.இக்பால் மௌத்தாகி விட்டார்

iqbal

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Siraj Mashoor 


கவிஞர் ஏ.இக்பால் மௌத்தாகி விட்டார் என்ற செய்தி மிகுந்த வலி தருகிறது. திகதி சரியாக ஞாபகமில்லை. ஓராண்டுக்குள் அவரது தர்கா நகர் இல்லத்திற்கு சென்றிருந்தேன்.

வீட்டில் தன்னந்தனியனாக இருந்தார். தளர்ந்து போன அவரைப் பார்க்கையில் கவலையாகவே இருந்தது. பல விடயங்களைப் பேசினோம். ஆனால், அவரிடம் பழைய உற்சாகத்தைக் காணவில்லை. ஆருயிர் மனைவியின் இழப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்.

அவரது ‘அயிம்பது வருட இலக்கிய ஆவணம்’ நூலையும் தந்தார். ஏ.இக்பாலின் வீடே ஒரு நூலகம் போன்றது. பெருந்தொகையான நூல்களை சேகரித்து வைத்திருக்கிறார். இந்த நூல்களுக்காகவே ஆய்வு மாணவர்கள் அவரது இல்லம் செல்வது வழக்கம்.
அவர் பிறந்தது அக்கரைப்பற்றில். எனது உம்மாப்பாவின் வழியில் தூரத்து சொந்தமும் கூட. அவர்களின் இளமைக் கால வீடு எங்களது வீட்டுக்கு அருகில்தான் இருந்ததாக உம்மா சொல்லுவா.

அவர் மணமுடித்தது தர்காநகரில். அதன் பின் அவரது வாழ்வு அங்கேயே கழிந்தது. எனது சாச்சா வதூத் அதே ஊரில்தான் திருமணம் செய்திருந்தார். தர்கா நகர் செல்லும்போது அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசுவதுண்டு.

2000 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ‘தமிழ் இனி’ மாநாட்டின் நாட்டாரியல் அரங்கில் நானும் அவரும் ஒரேமேடையில் இருந்தோம். அந்தப் புகைப்படத்தை லெமினேற் பண்ணி எனக்கு அனுப்பி வைத்தார்.

நல்ல கவிஞர். பல நூல்களின் ஆசிரியர். எதையும் நேர்படப் பேசுபவர். ஆய்வுத் தேடல் மிக்கவர். ஆசிரியர், விரிவுரையாளர். நூல்/ஆவண சேகரிப்பாளர். இளம் எழுத்தாளர்கள் பலருக்கு ஆதர்ச ஊக்கமாக இருந்தவர்… ஒரு காலகட்டத்தின் முக்கிய எழுத்தாளுமை அவர்.

இப்படி அவருக்கு பல பரிமாணங்கள் உண்டு.

என் மீது அன்பு கொண்டவர். அவரது பேச்சும் வீட்டு முற்றமும் நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது. தூரத்தில் இருப்பதால் அவரது ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்ளாதது வருத்தமே.
அல்லாஹ் அவருக்கு உயர்ந்த சுவனத்தை அருள்வானாக.

20604512_837094383119084_6959319219961609451_n 20638072_837109523117570_6022304312470368779_n

Web Design by The Design Lanka