கவிஞர் வாழைத்தோட்டம் எம். வஸீர் தலைமையில் வலம்புரி கவிதா வட்டத்தின் 43 வது கவியரங்கம் » Sri Lanka Muslim

கவிஞர் வாழைத்தோட்டம் எம். வஸீர் தலைமையில் வலம்புரி கவிதா வட்டத்தின் 43 வது கவியரங்கம்

mm

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

வலம்புரி கவிதா வட்டத்தின் 43 வது கவியரங்கம் 3-11-2017 அன்று கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது. வகவத் தலைவர் என். நஜ்முல் ஹ{சைன் நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார்.

வரவேற்புரையை செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் நிகழ்த்த கவிஞர் ஈழகணேஷ் நன்றியுரை வழங்கினார். அண்மையில் மறைந்த கவிஞர் ரவூப் ஹசீர் அவர்களின் தாயார், இசைக்கோகிலம் நூர்ஜஹான் மர்சூக் அவர்களின் மருமகன் மிப்ராஸ் நாமிஸ், தமிழகத்தின் சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோர் நினைவு கூரப்பட்டனர். அவர்கள் குறித்த சிறு குறிப்புகளை கவிஞர் மேமன்கவி வழங்கினார்.

இதய வலி காரணமாக இலங்கையில் பிரத்தியேக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்குட்பட்டு தற்போது ஓய்வு பெற்றுவரும் துபாய் சங்கமம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் கலையன்பன் ரபீக் கூடிய விரைவில் பரிபூரண சுகம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை புரியுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கவிஞர் வாழைத்தோட்டம் எம். வசீர் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. மிகவும் கலகலப்பாக நடந்த கவியரங்கில் கவிஞர் எம். வஸீர்,
“ சிலை செதுக்கும் உளியாக இருந்த நானே
சிலை செதுக்கும் சிற்பியாய் ஆனேன் வகவத்தாலே”
என்று பாடி கவியரங்கை ஆரம்பித்தார்.;.

வெலிமட ஜஹாங்கீர்,
“ஒவ்வோர்” “விண்டோ”வழியாகவும்
ஒவ்வோர் ‘விடோ” பார்த்துக்கொண்டிருக்கின்றாள்:
தனக்கான மறுவாழ்வு கிடைக்காதா எனும் ஏக்கத்தோடு…..!” என பாடினார்
ஆஷிகா ராஹிலா ஹலாமின் கவிதை “இரண்டாம் தாரமாய் வாழ்கைப்படும் உலகில்…. இரண்டாம் தரமாய் நண்பனானது… பழைய சைக்கிள்…” என்று பாடியது
ரவூப் ஹசீர் மறைந்த தனது தாயாருக்காக பாடிய கவிதை வரிகள்

உம்மா !
நேத்திரத்தில் நீர்வடிய
நேற்றிரவும் நான் அழுதேன் – உங்கள்
பாத்திரத்தை கவிதையிலே
படைப்பதென்ன லேசா ! ?
பாத்திறன் என்னிடம் இருந்தாலும்
அதை வளர்த்ததில் உங்கள்
பாத்திரம் மிகவும் பெரிதும்மா ! ” என்று பாடி சபையோரை கண்கலங்க வைத்தார்.

ச.தனபாலன், “வசந்தத்தில் துளிர்விட்ட
இளந்தளிர் நான்
இலையுதிர் பருவம்
எதிர்காலத் திசைகாட்டி
காதின் ஓரம் முடி
கலர் மாறும்போது” எனும் கவிதை வரிகளில் கதை சொன்னார்.
கலேவெல ஷப்னா வெளிநாட்டுப் பணிப்பெண் பற்றி
“வகுப்பு மாணவியாய் பாடம் படிக்க வேண்டிய வயதில்,
அங்கே தொகுத்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறாள்..ஆசிரியர் கேள்விக்கு பதில் தர தெரிந்த அவள், அங்கே திரு திருவென முழிக்கிறாள் …அறியாத மொழியில் புரியாத கேள்விகளுக்கு ..!” என்று பாடி சிந்திக்க வைத்தார்.
எம். பிரேம்ராஜ், “அவள் பொன்னதிர் மேனியில்
புறப்படும் வெளிச்சத்தில்
பகலாய் மாறும் ராத்திரி”என்று சிருங்கார கவிதை பாடி சபையோரை சிரிக்கவைத்தார்.
தாஜ்மஹான், “மரணம் வரும் தருணம்
மனிதனுக்கு தெரிவதில்லை
தருணம் பார்த்து மரணம் வரும்
எத்தனை கரணம் போட்டாலும் ” என்று தத்துவக் கவிதை பாடினார்.

ஈழகணேஷ் “சாப்பிட காசில்லாதபோது
மெஸேஜில் நிறைந்தது
பீஸாவின் விலைகள்” என்று சிந்தனை கவிதை உகுத்தார்.

இளநெஞ்சன் முர்ஷிதீன்,
“தமிழினம் தலைநிமிர்ந்து வாழவேண்டும்
தமிழ் மொழி தழைத்தோங்க வேண்டும்
என்றெல்லாம் எண்ணி
முழு மூச்hய் பாடுபட்ட அமரர் கனகரத்தினத்திற்காய்
நான் கவி பாட வேண்டும்”
க. லோகநாதன், “ மழை கொட்டியது வீதியெல்லாம் நீர் முட்டியது
ஆட்டோவுக்குள் தூவானமும் தட்டியது ” என்று ஆட்டோ அனுபவம் கூறி வழைமைபோலவே வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்

கிண்ணியா அமீர் அலி, “விதியை மாற்ற முடியாதுதான் ஆனால் அது என் வீதியின் பாதையை மாற்றியிருக்கிறது. பெயர்த்தெரியப் பாடுகின்றபோதுதான் பெயர் தெரிய வருகின்றதோ ?” என்று தத்துவம் பாடினார்.
யாழ் அஸீம், “
மல்லிகையிடம் கேள்
மணவாசம் மறவாத
என் சுவாசத்தைக் கூறும்
இடிந்து கிடக்கும்
இந்த வீட்டைக் கேள்
என் இதயத்தின் துடிப்பின்
ஆயிரம் வலிகளைக் கூறும்” என்று பாடினார்.
சுதர்ஸனி பொன்னையா,
“காலம் கனியும் வரை
காத்திருக்க முடியவில்லை
எந்திர வேகம் சந்திரனைத் தொட்டாலும்
தயவுசெய்து தன்சாவு வரும்வரை
வீண் சாவை மறுக்க!
ஆயிரம் வலிகளைக் கூறும்!” தற்கொலைகளுக்கெதிராய் போர் கொடி தூக்கினார். அட்டாளச்சேனை ரிஸ்லி சம்சாட். “ மக்கத்து வீட்டைப் பார்க்கச் செல்லும் ஹாஜிகளே, பக்கத்து வீட்டையும் கொஞ்கம் பாருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் கவிஞர்கள் டொக்டர் நியாஸ், தேஜஸ்வினி பிரணவன், நுஹா நியாஸ் போன்றோரும் தம் கவிதை வரிகளால் கவியரங்கிற்கு சுவை சேர்த்தனர்.

அட்டாளச்சேனை எஸ்.எல்.மன்சூரின் இருநூல்களான ”கல்வியின் நோக்கும் போக்கும்” மற்றும் ”விலாசம் தேடும் விழுதுகள் -ரோஹிங்யா” ஆகிய நூல்கள் அட்டாளச்சேனை ரிஸ்லி சம்சாட் வகவத்திற்கு வழங்கி வைத்தார். மேலும், அட்டாளச்சேனை ரிஸ்லி சம்சாட் தனது கவிநை தொகுப்பான ” முகவரி’ யையும் வகவத்திற்கு வழங்கினார்.

mm mm.jpeg2

Web Design by The Design Lanka