காடழிப்பு இடம்பெறுவதாக தெரிவித்த யுவதிக்கு அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது : ஐக்கிய தேசிய கட்சி - Sri Lanka Muslim

காடழிப்பு இடம்பெறுவதாக தெரிவித்த யுவதிக்கு அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது : ஐக்கிய தேசிய கட்சி

Contributors

எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் ஊடகவியலாளர்களை அடக்குவதற்கு மீண்டும் வெள்ளை வேன் கலாசாரத்தை ஆரம்பித்திருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. அதனால் அரசாங்கத்தின் ஊடக அடக்குமுறைக்கு எதிராக வீதிக்கிறங்க ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கின்றது என கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

சிங்கராஜ வனாந்திரத்தில் வன அழிப்பு ஏற்படுவதாக குரல் கொடுத்த பாக்கியா அபேரத்ன என்ற யுவதிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரச அழுத்தங்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி பெண்கள் அமைப்பு நாடளாவிய ரீதியில் கையொப்பமிடும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வு இன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் ஊடகவியலாளர்களை அடக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் ஊடக சுதந்திரத்தை பாதுகாத்ததுடன் ஊடகவியலாளர்களுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கி இருந்தது. எமது காலத்தில் ஒரு ஊடகவியலாளருக்கேனும் தனது கடமையை மேற்கொள்ள பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நாங்கள் செயற்பட்டோம். என்றாலும் அந்த ஊடக சுதந்திரத்தினால் அதிக பாதிப்பு ஏற்பட்டதும் ஐக்கிய தேசிய கட்சிக்காகும். இருந்தபோதும் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொள்ள ஊடக சுதந்திரம் அவசியமாகும்.

அத்துடன் தற்போது நாட்டின் ஊடகவியலாளர்களின் நிலைமை என்ன? இரண்டு தினங்களுக்கு முன்பும் ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அவர் தற்போது தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்கு சென்று, அவரை மிகவும் மோசமான முறையில் அச்சுறுத்தி இருக்கின்றார்கள்.

அதனால் கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த வெள்ளை வேன் கலாசாரம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

அதேபோன்று நாட்டின் ஜனநாயக்தை குழிதோண்டி புதைத்து ஏகாதிபத்திய ஆட்சியையா அரசாங்கம் மேற்கொள்ளப்போகின்றது என கேட்க வேண்டியிருக்கின்றது என்றார்.

சிங்கராஜ வனாந்திரத்தில் காடழிப்பு இடம்பெறுவதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்போது, தனது மனதில் தோன்றிய கவலையை தெரிவித்த இளம் யுவதிக்கு எதிராக அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது.

தனது உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் நாட்டில் இல்லாமல் போயுள்ளது கவலையளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக வீதிக்கிறங்கி போராடவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team