காணி அமைச்சின் பட்ஜட் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்: தவம் - Sri Lanka Muslim

காணி அமைச்சின் பட்ஜட் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்: தவம்

Contributors

(எஸ்.எம்.அறூஸ்)

கிழக்கு மாகாணத்தில் நில அபகரிப்பு தொடர்பில் தீர்க்கமானதொரு முடிவு இதுவரை எட்டப்படாததால் கட்சி பேதங்களை மறந்து கிழக்கு மாகாண காணி அமைச்சிற்குரிய வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனை தடுத்தி நிறுத்துவதற்கு கிழக்கு மாகாண காணி அமைச்சர் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாகாண சபை உறுப்பினர்; ஏ.எல்.தவம் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

அவரது வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கிழக்கு மாகாண காணி அமைச்சர் காணி அபகரிப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு அவர் மௌனப்படுத்தப்பட்டுள்ளார். ஒரு தரப்பின் கட்டளைக்கு ஆட்பட்டு மாகாண காணி அமைச்சரின் இந்த செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

பொத்துவில் கராங்கோ, அக்கரைப்பற்று வட்டமடு, சம்மாந்துறை,புல்மோட்டை, கிண்ணியா குரங்குபாஞ்சான், மஞ்சந்தொடுவாய் என பல பிரதேசங்களில் நில அபகரிப்பு கிழக்கில்; இடம்பெற்று வருகின்றது.

நமது மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு சூரையாடப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதுவரை பல முன்னடுப்புக்களை நாம் மேற்கொண்டாலும் பலமிக்க சக்திகள் அதனை தடுத்து வருகின்ற ஒரு நிலைப்பாட்டினைக் காண்கின்றோம்.

நம்மிடம் மாகாண சபையில் பலமிருக்கின்ற நிலையில் கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்படுவோமாக இருந்தால் நமது கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வழி ஏற்படலாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிசாத்தின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து காணி அமைச்சின் வாக்கெடுப்பை தோல்லியடையச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

விரைவில் வரவுள்ள வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில் நமது ஒற்றுமைதான் எதிர்காலத்தில் தீர்க்கமானதொரு முடிவினை எடுப்பதற்கு உந்து சக்தியாக அமையலாம். அதனால் காணி அமைச்சின் வரவு- செலவுத்திட்ட வாக்கெடுப்பை தோல்வி அடையச் செய்வதற்கு சிறுபான்மையின உறுப்பினர்கள் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.

நீண்ட காலமாக நமது மக்கள் பயன்படுத்தியும், பயிர் செய்தும் வந்த காணிகளைக் கூட இன்று அபகரிப்பதற்கு பல சதிகள் அரங்கேற்றப்பட்டுள்ளது. நமது மக்களுக்கான இந்தப் போராட்டத்தில் கட்சி என்ற நிலைப்பாட்டில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாமல் ஒன்றுபட்ட முடிவே முக்கியமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.-TC

Web Design by Srilanka Muslims Web Team