காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது இந்த அரசு செய்யும் வரலாற்றுத் தவறாகும் - இம்ரான் எம்.பி..! - Sri Lanka Muslim

காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது இந்த அரசு செய்யும் வரலாற்றுத் தவறாகும் – இம்ரான் எம்.பி..!

Contributors

தற்போது நடைமுறையிலுள்ள காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது இந்த அரசு செய்யும் வரலாற்றுத் தவறாகும். இந்தத் தவறை செய்ய வேண்டாம் என்று நான் இந்த அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

முஸ்லிம் விவாக, விகாரத்துச் சட்டம் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்த நாட்டில் அமுலில் உள்ளது. இதனை அடிப்படையாக வைத்தே காதி நீதி மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்த ஒல்லாந்தரோ ஆங்கிலேயரோ கூட இந்த விடயத்தில் கைவைக்கவில்லை.

எனினும், இந்த அரசு காதி நீதிமன்றங்களை ஒழிக்கும் பாரிய வரலாற்றுத் தவறைச் செய்ய முனைகின்றது. இது குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன். காதிநீதிமன்ற அமைப்புகளில் குறைபாடுகள் இருப்பின் அதனை திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர முற்றாக ஒழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது.

இது காலுக்கு அணிய வாங்கிய செருப்பு சிறியது என்பதற்காக செருப்பை மாற்றாமல் செருப்புக்கேற்ப காலை வெட்டுவது போன்ற செயலாகும். இது ஆரோக்கியமானதல்ல.

ஆண்டாண்டு காலமாக அமுலில் இருந்து வரும் இந்த காதி நீதிமன்ற முறையை ஒழிக்கப் போவதாக அரசு பகிரங்கமாக அறிவித்திருந்தும் முஸ்லிம் கட்சிகள் எவையும் இது குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.

முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தான் முஸ்லிம் கட்சிகளை உருவாக்கியதாகக் கூறுகின்றார்கள். முஸ்லிம்களின் வாக்குகளினாலேயே பாராளுமன்றத்திற்கும் வந்தார்கள். தேர்தல் காலங்களில் இந்த அரசுக்கு எதிராக மோசமான பிரச்சாரங்களை முன்வைத்த இவர்கள் இப்போது இந்த அரசாங்கத்தோடு ஒட்டியிருக்கின்றார்கள்.

காதிநீதிமன்றத்தை ஒழிக்கப் போவதாக அரசு தற்போது பகிரங்கமாக அறிவித்துள்ளது. இது முஸ்லிம்களது உரிமை இல்லையா? ஏன் இன்னும் மௌனமாக இருக்கின்றீர்கள் என்று நான் முஸ்லிம் கட்சிக்காரர்களைக் கேட்க விரும்புகின்றேன்.

இது விடயத்தில் முஸ்லிம் கட்சிகளின் நீண்ட மௌனம் முஸ்லிம் கட்சிகளின் சம்மதத்தோடு தான் இந்த விடயம் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. எனவே அரசின் இந்த வரலாற்றுத் தவறுக்கு துணை போகும் செயற்பாட்டிலிருந்து முஸ்லிம் கட்சிகள் விடுபட வேண்டும் அதனைப் பகிரங்கமாக மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team