காத்தான்குடியை சோகத்தில் ஆழ்த்திய சீமாவின் கொலை ; நடந்தது என்ன? - Sri Lanka Muslim

காத்தான்குடியை சோகத்தில் ஆழ்த்திய சீமாவின் கொலை ; நடந்தது என்ன?

Contributors
author image

எம்.எஸ்.எம். நூர்தீன்

கடந்த புதன்கிழமை (10.9.2014) அன்று மாலை 7 மணியிருக்கும்  காத்தான்குடி முழுவதும் பரபரப்பான செய்தியொன்று வேகமாக அடிபடுகின்றது.

 

காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த சிறுமியொருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியே அது. இந்தச் செய்தி அனைவரையும் சோகப்பேரலைக்குள் மூழ்கச் செய்தது.

 

 மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவு மட்டக்களப்பு காத்தான்குடி எல்லையிலுள்ள மஞ்சந்தொடுவாய் ஜின்னா வீதியிலேயே ஈவிரமக்கமற்ற இந்த அகோரமான கொடூரம் இடம் பெற்றுள்ளது.

 

இந்த வீதியில் வசிக்கும் மீராசாகிப் சகாப்தீன் என்பவரின் வீட்டோடு சேர்ந்து பலசரக்கு கடையொன்றுள்ளது. அவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த பிள்ளை பெண் பிள்ளை திருமணம் செய்து விட்டார். மற்றையவர் ஆண் பிள்ளை அவர் வெளிநாட்டில் தொழில் புரிகின்றார்.

 

09

 

மூன்றாவது மகள்  பெயர் பாத்திமா சீமா. வயது ஒன்பது. சகாப்தீனுக்கு இப்பிள்ளை இரண்டாவது பிள்ளை கிடைத்து 12 வருடங்களின் பின்னர்தான் இந்த மூன்றாவது பிள்ளை கிடைத்தது. மிக நீண்ட காலத்திற்கு பின்பு   இந்த மூன்றாவது பிள்ளை கிடைத்ததால் இந்த மூன்றாவது பிள்ளையான பாத்திமா சீமா மீது கடும் பாசம்.

 

பெற்றோர், சகோதரி சகோதரன் என அனைவரும் கடுமையான பாசம் வைத்திருந்தனர். இந்த மூன்றாவது பிள்ளைக்காக வீடு ஒன்றை கட்டுவதற்காகவே சகோதரர் வெளிநாடு சென்றுள்ளார்.

 

பாத்திமா சீமா காத்தான்குடி முதலாம் குறிச்சி ஸாவிய்யா மகளிர் வித்தியாலயத்தில் ஆண்டு மூன்றில் கல்வி கற்றுவந்தார். அதே குறிச்சி மீராபள்ளிவாயல் வீதியிலுள்ள இப்றாகிமிய்யா குர்ஆன் மதரசாவில் குர்ஆன் ஓதி இறுதியாண்டு பரீட்சைக்காக காத்திருக்கின்றார்.

 

06

சம்பவ தினத்துக்கு முன்னர் ஓரிரு தினங்களாக சீமாவுக்கு பல் வலியென்பதால் பாடசாலைக்கோ, அல்லது ரீயூசன் வகுப்புக்கோ, குர்ஆன் மதரசாவுக்கோ அன்று புதன்கிழமை செல்லவில்லை. பெற்றாருடன் இருந்து பகல் உணவு உட்கொண்ட சீமா தனது தந்தை சகாப்தீனுடன் செல்லமாக விளையாடிக் கொண்டிருந்தார்.

 

அன்று மாலை 4மணியிருக்கும் மழை பெய்து கொண்டிருந்தது. இந்த நேரம் சீமாவின் தந்தை சகாப்தீனின் பலசரக்கு கடையில் சகாப்தீனின் மாமியார் (சீமாவின் மூத்தம்மா) இருந்து கொண்டிருந்தார். சீமாவின் தந்தை சகாப்தீன் குட்டித்தூக்கமொன்றில் இருந்தார். சீமாவின் தாய் அஸர் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

 

அப்போது சீமாவின் வீட்டிலிருந்து ஓரிரு வீட்டுக்கு அப்பால் வசிக்கும் அயல் வீட்டாரின் சகோதரரான 35 வயதுடைய எம்.ஐ.றமழான் என்பவர் சீமாவின் வீட்டோடு இருக்கும் கடைக்கு பீடி வாங்குவதற்காக வந்து மூத்தம்மாவிடம் பீடியை வாங்கிக் கொண்டு மழை பெய்ததால் கடையின் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது  பாத்திமா சீமா தனது குடையை வைத்துக் கொண்டு பல சரக்கு கடைக்கு முன்னாள் விளையாடிக் கொண்டு நின்றார்.

 

தன்னை தனது சகோதரியின் வீட்டுக்கு சீமாவை குடையையுடன் கொண்டு போய் விடுமாறு றமழான் கேட்கவே கடைக்குள் இருந்த சீமாவின் மூத்தம்மா விளையாடிக் கொண்டிருந்த சீமாவை பார்த்து இவரை குடையைக் கொண்டு போய் விட்டு விட்டு வா என்று சொன்னவுடன் பாத்திமா சீமா எதுவுமறியாத அந்த பிஞ்சு மனசு குடை கொடுத்து தானும் அந்தக் குடைக்குள் சென்றது.

 

அகோரம் நடக்கப்போகின்றது என்பதை மூத்தம்மா சற்றும் அறிந்திருக்கவில்லை. உதவும் மனப்பாங்குடன் மூத்தம்மாவோ இந்த மழையில் நிற்கும் அயலவரின் சகோதரன் என்பதற்காக குடையுடன் பேத்தியை அனுப்புகின்றார்.

 

குடையுடன் றமழானை விடுவதற்காக சென்ற சீமா வீடு திரும்பவில்லை. நேரம் செல்ல  தொழுகையை முடித்த சீமாவின் தாய் சீமாவைத் தேட ஆரம்பிக்கின்றார்.

 

சீமா குடையுடன் சென்று றமழானை விட்டு விட்டு சீமா வழமையாக விளையாடும் அயல் வீட்டு பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கலாம் என நினைத்து சீமாவின் தாய் அங்கு சென்று சீமாவை கேட்கின்றார்.

 

ஆனால் சீமா வரவில்லை சீமாவின் தாய்க்கு பதற்றமாகின்றது எங்கு போனாள் சீமா? என்று அங்குமிங்கும் தேடினார். சீமாவைக் காணவில்லை.

 

குட்டித்தூக்கத்திலிருந்த கணவரை (சீமாவின் தந்தையை) அவசரமாக எழுப்பி சீமா குடையை கொண்டு றமழானை விட்டு விட்டு வரச்சென்றார் ஆனால் இன்னும் வீடு வரவில்லை உடனே போய் பாருங்கள் என்று சகாப்தீனை கேட்க கணவரும் பிள்ளையின் தந்தையுமான சகாப்தீன் தூக்கத்திலிருந்து எழும்பி அவசர அவசரமாக அங்குமிங்கும் தேடிச் செல்கின்றார். சீமா கிடைக்கவில்லை நிலை இன்னும் பதற்றமாகின்றது.

 

பின்னர் தந்தை சகாப்தீன் குடையுடன் அழைத்துச் சென்ற றமழானின் அயலவரின் வீட்டுக்கு சென்ற போது அந்த வீடு மூடிக்கிடக்கின்றது.

 

08

சீமாவை குடையுடன் அழைத்துச் சென்ற றமழானை அந்த வீட்டுக்கு முன்னர் சீமாவின் பெற்றோர் காண்கின்றனர்;. எங்களது மகள் சீமா எங்கே? எனக் கேட்கின்றனர். சீமா ஒரு நீலக் கலர் முச்சக்கர வண்டி சாரதியுடன் பேசிக் கொண்டு நின்றாள்.

 

அதில் போய் இருக்க கூடும் என றமழான் சீமாவின் பெற்றோரிடம் கூறி விட்டு  தலைமறைவாகி விடுகிறார்.

 

இப்போது நேரம் மாலை 5.30 மணியாகின்றது. சீமாவை காணவில்லை என்ற செய்தி முழு குடும்பத்திற்கும் பரிமாறப்படுகின்றது.

 

சீமாவின் தந்தை காத்தான்குடி பொலிசுக்கு சென்று இரண்டு போக்குவரத்து பொலிசாரையும் கூட்டி வந்து விடயத்தைக் கூறி சீமாவை குடையுடன் அழைத்துச் சென்ற அந்த வீட்டைக் காட்டிய போது அந்த இரண்டு பொலிசாரும் வீட்டை திறக்க முற்படவில்லை.

 

பின்னர் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெதகெதர ஸ்த்தலத்திற்கு விரைந்து குறித்த றமழானின் சகோதரியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பொலிசார் மற்றும் குடும்பத்தினர் பாத்திமா சீமாவை தேடுகின்றனர்.

 

அந்த வீட்டுக்குள்ளே இரண்டு கட்டில்கள் அதில் ஒரு கட்டிலுக்கு கீழே உரம் பை ஒன்றுக்குள் சீமா கட்டப்பட்டு கிடப்பதை கண்ட சீமாவின் சாச்சா அந்த பையை திறந்து பார்த்த போது அழகான சீமா இரத்தம் தோய்ந்த முகத்தோடு மயக்கமடைந்த நிலையில் காணப்படுகின்றார்.

 

சீமாவின் தாய் தந்தை குடும்பத்தினர் அழுது புலம்புகின்றனர். சீமாவின் உடம்பிலிருந்து இரத்தம் வருகின்றது. சீமாவின் வாய்க்குள் பிடவையை புகுத்தி கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சீமா உடனே காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சீமா உயிரிழந்து விட்டாள் என்ற செய்தியே வந்தது.

 

07
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி. வெதகெதர தலைமையில் பொலீசார் விசாரணையை துரிதப்படுத்துகின்றனர்.

 

எதுவுமறியாத சிறிய குழந்தை சீமாவை  ஈவிரக்கமின்றி பாலியல் துஸ்பிரயோகம் செய்து படுகொலை செய்து விட்டு தலைமறைவாகிய சந்தேக நபரான றமழானை தேடி காத்தான்குடி பொலிசார் வலை விரித்தனர்.

 

இதன் சந்தேக நபரான எம்.ஐ.றமழான் என்பவர் காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்டவர், இவர் பத்தியத்தலாவ பொலிஸ் பிரிவில் ஒரு சிங்கள பெண்ணை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுண்டு. இவர் ஹோட்டலில் டீ போடுபவர். இவரது தாய் தந்தை மற்றும் சகோதரர்கள் அனைவருமே காத்தான்குடியிலேயே வசிக்கின்றனர். இந்தக் கோரமான சம்பவம் இந்த சந்தேக நபரின் சகோதரியின் வீட்டிலேயே நடந்துள்ளது.

 

சம்பவ நேரம் றமழானின் சகோதரி றமழானுடைய பதியத்தலாவ வீட்டில் இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியே இந்த கொடூரம் நடந்துள்ளது.

 

துரிதமாக இயங்கிய காத்தான்குடி பொலிசார் சந்தேக நபரான றமழானை தேடி அவரது பதியத்தலாவ வீட்டுக்கு வியாழக்கிழமை அதிகாலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலிருந்து எஸ்.ஐ.சந்திரசேன எனும் பொலிஸ் அதிகாரியின் தலைமையில் சென்ற போது அங்கு சந்தேக நபர்  தூக்கத்திலிருக்கவே அங்கு வைத்து கைது செய்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

 

விசாரணையின் போது சந்தேக நபரான பாத்திமா சீமா எனும் சிறுமியை தான் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததையும், அதன் பின்னர் கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

 

சந்தேக நபரான மேற்படி றமழான் பொலிசாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தான் மஹியங்கனையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் டீ போடுபவராக தொழில் புரிந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேற்படி சந்தேக நபர் கடந்த 1998ம் ஆண்டு சிறுவன் ஒருவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும் அந்த குற்றத்திற்காக மூன்று மாதங்கள் சிறையில் இருந்ததாகவும் பொலிசாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதே பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளான பாத்திமா சீமாவின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து பொலனறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய நிபுணரினால் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

சிறுமியான பாத்திமா சீமா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரேத பரிசோதனையின் பின்னர் சிறுமியின் ஜனாசா காத்தான்குடிக்கு கொண்டு வரப்பட்டு பெருந்திரளான மக்கள் ஜனாசா தொழுகையை நிறைவேற்ற பாத்திமா சீமாவின் ஜனாசா வியாழக்கிழமை இஸாத்தொழுகையின் பின்னர் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாயல் மைய்யவாடியில் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

தான் பெற்றெடுக்கும் ஒவ்வொரு பிள்ளையும் பாதுகாப்பாக வளர்த்து அவர்களை சிறப்பாக வளர்த்து அவர்களை வாழவைக்க வேண்டும்; என்ற கனவும் ஆசையும் ஒவ்வொரு பெற்றோருக்குமுண்டு. இதையே பாத்திமா சீமாவின் பெற்றோரும் செய்தனர். ஆசையோடும் பாதுகாப்போடும் கனவுகளோடும் வளர்த்த சீமாவின் பெற்றோர் சகோதரர்கள் அழுது துடிக்கின்றனர்.

 

எனது மகள் சீமா கல்வியில் திறமையானவர், அவர் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்றாலும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதுவதற்கு இப்போதிருந்தே தயாராகினார். அதற்கான புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் காட்டினார். ஓதுவதிலும் அப்படித்தான்.

 

செல்லமாக வளர்த்தோம், பாதுகாப்புடன் வளர்த்தோம், தேவையில்லாமல் எங்கும் செல்வது கிடையாது. தாயின் கண்காணிப்பின் கீழே இருந்து வந்தார். ஆனால் இப்படி நடந்து விட்டதே என்று கூறி அழுகின்றார். இவ்வாறுதான் சீமாவின் தாயும் குடும்பத்தவரும் சீமாவை நினைத்து அழுது புலம்புகின்றனர்.

 

 சீமா அந்த வீட்டின் அந்த குடும்பத்தின் ஒரு செல்லப்பிள்ளையாக வளர்க்கப்பட்டவள்.

 

சீமாவுக்கு நடந்த இந்த கொடூரத்திற்கான தண்டனையை சந்தேக நபரான றமழானுக்கு மரண தண்டனையாக கொடுக்க வேண்டும், சட்டம் நீதி இவரை விடக் கூடாது. சந்தேக நபரின் சார்பில் சட்டத்தரணிகள் யாரும் நீதிமன்றில் ஆஜராக கூடாது என தெரிவித்து கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத்திற்கு முன்னாள் பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் வெள்ளிக்கிழமை (12.9.2014) அன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் காத்தான்குடியில் ஆர்ப்பாட்டங்கள் கன்டனப்பேரணிகள் என்பனவும் இடம் பெற்றன.

 

05

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்திற்கு சந்தேக நபர் சார்பாக நீதிமன்றில் சட்டத்தரணிகள் யாரும் ஆஜராக வேண்டாம் எனக்கோரி ஒரு மகஜரையும், மற்றுமொரு மகஜர் காத்தான்குடி பிரதேச செயலாளருக்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டம் செய்த பொதுமக்களினால் கையளிக்கப்பட்டுள்ளன.

 

இதே வேளை சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டு;ள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

 

படுகொலை செய்யப்பட்ட பாத்திமா சீமாவின் பிரேதப்பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபரை வியாழக்கிழமை பிற்பகல் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார். இந்த சந்தேக நபருக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

 

இதன் போது நீதிமன்றத்திற்கு முன்னாள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் நீதிமன்றத்தின் கச்சேரிப்பக்கமாக இருந்த நீதிமன்ற நுழை வாயிலில் கூடி நிற்க சந்தேக நபரை பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பொலிஸ் ஜீப் வாகனத்தில் நீதிமன்ற பிரதான நுழைவாயிலினூடாக மட்டக்களப்பு சிறைசச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

 

சந்தேக நபரை வெள்ளிக்கிழமையன்று டி.என்.ஏ.பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

 

சிறுவர்கள் மீது இவ்வாறு மேற் கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்களினால் சமூகத்தில் பெரும் அச்சம் நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது.

 

எதுவுமறியாத அப்பாவிச் சிறுமி இவ்வாறு மோசமாக பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி அனைவரையும் அச்சப்பட செய்துள்ளதுடன் பெரும் கவலையையும், வேதனையையும் காத்தான்குடி மட்டுமல்ல இந்த செய்தியை கேள்விப்படும் அனைவருக்கும் எற்படுத்தியுள்ளது.

 

இன்றைய காலத்தில் பிள்ளைகளை பராமரித்து, பாதுகாப்பது என்பது பெற்றோர்களுக்கு பெரும் சவாலான ஓர் காரியமாக மாறிவிட்டது. மேலும் இக்கால கட்டங்களிலேயே வளர்ந்து வரும் நவநாகரிக மோகத்தினால் பல்வேறு தீய சக்திகள் குடும்பத்தின் புனிதத் தன்மையினை பாதிப்படையச் செய்கின்றன.

04

பிள்ளைகளி;ன் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. உடல், உள ரீதியான துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை முளையோடு கிள்ளி எறிவதும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றாமல்  விடுவதும் இன்று சமூகத்தில் நடைபெறுகின்ற சாதாரண விடயமாகிவிட்டது.

 

இவ்வாறான குற்றங்களை புரிவோருக்கு எதிராக சட்டம் சரியான முறையில் அமுல் படுத்தப்படல் வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Web Design by Srilanka Muslims Web Team