காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு! - Sri Lanka Muslim

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு!

Contributors

-எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் –

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு!

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொ.ப. அஜித் பிரசன்னாவுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் நேற்று (17.12.2013) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி.எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் இந்த முறைப்பாட்டை ஆணைக்குழுவின் பணிப்பாளரிடம் கையளித்தார். அவரது பரிசீலனையின் பின் முறைப்பாடு விசாரணைக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி தேடுதல் நடாத்துவதற்கான சட்டரீதியான கட்டளைகள் எதுவுமில்லாது சிவில் உடையணிந்த நிலையில் மோப்ப நாயொன்றுடன் தனது வீட்டிற்கு வந்த காத்தான்குடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் தனது வீட்டிலிருந்து ஒரு பார்சல் கஞ்சாவைக் கைப்பற்றியதாகக் கூறி தன்னைக் கைது செய்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்ததோடு, தனக்கெதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் 198 கிராம் கஞ்சா தனது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் பொய்யான வழக்கொன்றைத் தாக்கல் செய்திருப்பதை ஆட்சேபித்தே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை அரசியல் காழ்ப்புணர்வுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களின் விபரமும் பணிப்பாளரின் கவனத்திற்காக கையளிக்கப்பட்டது.

இதன்போது, மனித உரிமைகள் ஆர்வலரான ருக்கி பெர்ணாண்டோ, (குஆஆ) சுதந்திர ஊடகவியலாளர் இயக்கத்தின் செயலாளர் திரு. சுனில் ஜெயசேகர மற்றும் சட்டத்தரணி உதயன் ஆகியோரும் பிரதம ஆசிரியருடன் ஆணைக்குழு அலுவலகத்திற்குச் சென்றிருந்தனர்.

பிரிதம ஆசிரியரின் முறைப்பாட்டினையும், இணைக்கப்பட்டிருந்த ஆதாரங்கள், ஆவணங்களையும் எவ்வித ஆட்சேபனையுமின்றி ஏற்றுக் கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர், முறைப்பாட்டாளரான பிரதம ஆசிரியரின் வயது, காத்தான்குடியிலிருந்து கொழும்பிற்கு வந்து செல்லும் பிரயாணத் தூரம், ஏனைய சிரமங்கள் போன்றவற்றையும் கருத்திற்கொண்டு இம்முறைப்பாட்டினை மட்டக்களப்பிலுள்ள தமது அலுவலகத்தின் மூலம் விசாரணை செய்வதற்கு விரும்புவதாகத் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த பிரதம ஆசிரியர், தாம் ஏற்கனவே மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரண்டு முறைப்பாடுகளைச் செய்துள்ள போதிலும் அவை தொடர்பில் அக்கறையுடனான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென்றும், அதிலொரு முறைப்பாடு கொழும்புத் தலைமையலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தனக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அது தொடர்பாகவும் எந்தவொரு தகவலும் தனக்கு தெரிவிக்கப்படவில்லையென்றும் தெரிவித்ததுடன், அதன் காரணமாகவே தான் கொழும்பிலுள்ள தலைமையலுவலகத்தை நாடியதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தனது அதிகாரிகளிடம் கொழும்பு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டாளரின் கோவை குறித்து விவரம் கோரினார்.

சற்று நேரத்தில் அக்கோவை அவரது மேசைக்கு கொண்டுவரப்பட்டது.

அதனையும் பார்வையிட்ட பணிப்பாளர், இது தொடர்பாகவும் தொடர்நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாம் மட்டக்களப்பு மனித உரிமைகள் அலுவலகப் பொறுப்பாளரைப் பணிப்பதாகவும் உறுதியளித்தார்.

இதனையடுத்து மட்டக்களப்பு அலுவலகத்தில் தனது முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள பிரதம ஆசிரியரும் இணக்கம் தெரிவித்தார்.

பிரதம ஆசிரியரால் கையளிக்கப்பட்ட முறைப்பாடு HRC/4962 /13 என்ற இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team