காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கத் தடை கோரும் மனு! - நாளை மீண்டும் விசாரணை. - Sri Lanka Muslim

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கத் தடை கோரும் மனு! – நாளை மீண்டும் விசாரணை.

Contributors

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது’ என, கோரிய மனுவை பரிசீலிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

சென்னையைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற பேராசிரியர் சரஸ்வதி கோவிந்தராஜ் என்பவர், தாக்கல் செய்த பொதுநல மனு: ராணி மேரி கல்லூரியில், சமூக அறிவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். நானும், சுற்றுச்சூழல் ஆர்வலர் நம்மாழ்வார், சுதந்திர போராட்ட வீரரும், பூதான இயக்கத்தைச் சேர்ந்தவருமான, கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் ஆகியோர், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, கடந்த மாதம், 10ம் தேதி, மனு அனுப்பினோம்.

“இலங்கையில், நவம்பரில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது’ என, அதில் கூறியுள்ளோம். “தமிழர்களுக்கு எதிராக, இலங்கை அரசு செய்த கொடுமைகளுக்காக, காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கிறோம்’ என, கனடா அறிவித்துள்ளது. தமிழகத்திலும், பெரும்பாலான அரசியல் கட்சிகள், “இந்த மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது’ என, கோரியுள்ளனர். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலரும், இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். “மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்’ என, பிரதமருக்கு முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.

“இலங்கையில் நடைபெறும் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது’ என, நாங்களும் கோரியுள்ளோம். நாங்கள் அனுப்பிய மனுவை பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, “முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை, நாளைக்கு தள்ளிவைத்தது

Web Design by Srilanka Muslims Web Team