காரைதீவில் நடுநிலையான ஊடகவியலாளர்களை அனுமதிக்காமல் ஜால்றா அடிப்பவருக்கே தவிசாளர் அனுமதி வழங்குகிறார்..! - Sri Lanka Muslim

காரைதீவில் நடுநிலையான ஊடகவியலாளர்களை அனுமதிக்காமல் ஜால்றா அடிப்பவருக்கே தவிசாளர் அனுமதி வழங்குகிறார்..!

Contributors

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கே. குமாரஸ்ரீ குற்றசாட்டு.

நூருல் ஹுதா உமர்

பிரதேச சபை வாகனத்தை எடுத்துக்கொண்டு பிரதேச சபை எரிபொருளை பயன்படுத்தி சொந்த வேலைகளுக்காக திராய்க்கேணி, வளத்தாப்பிட்டி, மல்வத்தை போன்ற பிரதேசங்களுக்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சென்றுள்ளார். அந்த வாகனத்தை ஓட்டிச்சென்ற சாரதிக்கு மேலதிக நேர கொடுப்பனவாக 13 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இது யாரின் வரிப்பணம்? மக்கள் எங்களை அனுப்பியது இதை பார்த்துக்கொண்டிருக்கவா? இவற்றை தட்டிக்கேட்டு கணக்காய்வு செய்தால் ஊழியர்களை எனக்கெதிராக திருப்பி விட்டு பணிப்பகிஷ்கரிப்பு செய்வது போன்ற விடயங்களை செய்ய தூண்டுகிறார். இப்படியான விடயங்களை சபை அமர்வுகளில் தட்டிக்கேட்டால் ஊடகங்கள் அதை மக்கள் மயப்படுத்தி விடும் என்ற பயத்தில் நடுநிலையான முக்கிய ஊடகவியலாளர்களை சபை அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை. தனக்கு ஜால்றா அடித்துக்கொண்டு தனக்கு துதிபாடும் ஒரு ஊடகவியலாளரை மட்டுமே சபை அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கிறார். இது எவ்வகையில் நியாயம் என்று கேட்கிறேன் என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கே. குமாரஸ்ரீ கேள்வியெழுப்பினார்.

அம்பாறை ஊடக அமையத்தில் நடைபெற்ற காரைதீவு பிரதேச சபை விவகாரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர், நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு முன்வைத்த வாக்குறுதிகளை அமைவாக எனது மாதாந்த கொடுப்பனவை மாணவர்களின் கல்வித் தேவைகளுக்காக ஊரில் உள்ள முக்கிய அமைப்புக்களினுடாக செலவு செய்து வருகிறேன். ஊர் மக்கள் பொது இடங்களில் குப்பை கொட்ட கூடாது என்பதை வலியுறுத்தி காரைதீவு- அம்பாறை, கல்முனை- அக்கரைப்பற்று வீதியில் பிரதேச சபை இலட்சனை பொறித்த அறிவித்தல்களை தொங்க விட்டுள்ளேன். பிரதேச சபை நிதியை மோசடி செய்து பதாதை வைப்போர் மத்தியில் என்னுடைய சொந்த செலவில் செய்த இந்த பணிகளையும் பிரதேச சபையில் உள்ள சில அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டோர் விமர்சித்து வருகிறார்கள். கடந்த பாதீட்டில் தவிசாளருக்கு 170 லீட்டர் எரிபொருளுக்கு சபை அனுமதி வழங்கப்பட்டது. அரசினால் வழங்கப்பட்ட சில சலுகைகளை காரணம் காட்டி அவருக்கு ஆதரவான உறுப்பினரை கொண்டு பிரேரணை முன்வைத்து அதை 500 லீட்டராக சபை அனுமதியை பெற்றுக்கொண்டார். இது யாரின் பணம் ? இந்த அநீதிகளை தட்டிக்கேட்டால் என்னை அவரின் ஜென்ம விரோதிகள் போன்று பார்க்கிறார்கள்.

நான் பதவி வகிக்க ஆரம்பித்த கடந்த 10 மாதங்களாகவே காரைதீவு பிரதேச சபையில் குழப்பங்கள் நிலவுவதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகிறார். கடந்த 39 வது சபை அமர்வில் தவிசாளரின் அறைக்கு ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான குளிரூட்டியை பொருத்த பிரேரணையை சபையில் முன்வைத்தார். அந்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டது என்று கூறுவதை விட அவரது ஆணவம் தோற்கடிக்கப்பட்டது என்று கூறுவதே பொருத்தமாக அமையும். அந்த பிரேரணையை நாங்கள் ஏற்று கொள்கிறோம். என்னுடைய உரையிலும் நான் அது தொடர்பில் ஆதரவாகவே தான் பேசினேன். எங்களின் ஆலோசனைகளையும் வலியுறுத்தல்களையும் ஏற்காமையாலையே தான் அதை எதிர்க்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

மக்களுக்கு சேவை வழங்க வேண்டிய நாங்கள் அநியாயமான செலவினங்களினால் எவ்வித சேவையையும் செய்யாமல் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அலுவலக தளபாடங்கள் கொள்வனவு செய்தல், மக்களுக்கான உதவிகள் செய்வதற்கு கூட முடியாத நிலையே இருக்கிறது. கடந்த காலங்களில் தனியார் கோபுரம் அமைத்த வழக்கில் வாதாட 15000 ரூபாய் வழங்கி சட்டத்தரணி நியமிக்கப்பட்டார். நியாயமான காரணங்களை முன்வைத்து எதிர்த்தோம். அதை ஆதரிக்க வேண்டி தவிசாளரினால் மேற்கொள்ளப்பட்ட ஒருவித முன்னெடுப்பை கொண்டு ஊர் பிரமுகர்களின் ஆலோசனைப்படி ஆதரவளிக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். ஊர் மக்களை மதித்து நான் செயற்படுகிறேன். இருந்தாலும் இவரின் ஊழல்களை தட்டிக் கேட்பதனால் என்னை விமர்சிப்பதை சிலர் தொழிலாக கொண்டுள்ளார்கள்.

ஊடகங்கள் என்பது மக்களின் தளம். அவர்களின் சேவை பாராட்டப்பட வேண்டியது. இங்கு நடக்கும் உண்மைகளை எழுதும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து ஊடக அடக்குமுறையை தலைக்கணத்துடன் காரைதீவு தவிசாளர் செய்துவருகிறார். இவருக்கு எதிர்காலத்தில் இதை விட பல முக்கிய பதவிகளை வகிக்க சந்தர்ப்பம் கிட்டினால் நிலை என்னாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இனவாதக்கரை படிந்த இவரைப்போன்ற ஒருவர் இரு சமூகங்கள் வாழும் சபைக்கு தலைமை தாங்குவது என்பது மிகவும் ஆபத்தானது. அண்மையில் உபதவிசாளருக்கு எதிராக பிரேரணை கொண்டுவருவதாக கூறிக்கொண்டு ஒரு சமூகத்தை இலக்குவைத்து ஒரு நடவடிக்கையை செய்தார். அதை தூரநோக்குடன் நாங்கள் எதிர்த்தோம். உண்மையின் பக்கம் நின்றதனால் எனக்கு எதிராக பழிச்சொற்களை முன்வைத்து வலுக்கட்டாயப்படுத்தி அந்த பிரேரணைக்கு எனது சம்மதத்தை பெற்றார்கள். அண்மையில் முஸ்லிங்களையும், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸையும் இலக்குவைத்து மிகப்பெரிய இனவாத கருத்தை அவர் முன்மொழிந்தார். இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிடாமை ஆச்சரியமளிக்கிறது.

எங்களின் தவிசாளர் ஒருநாள் கூட பாடசாலைக்கு சென்றதை நான் காணவில்லை அவர் எங்களிடம் தகுதி தராதரம் பற்றி பேசுகிறார். நான் நேரடியாக போட்டியிட்டிந்தால் இந்நேரம் தவிசாளர் கதிரையில் நான் அமர்ந்திருப்பேன். துண்டுசீட்டில் தவிசாளராக வந்தவரே அவர். அந்த சீட்டு மாறியிருந்தால் இந்நேரம் எங்களுடன் அமர்ந்துகொண்டு உரத்து கத்திக்கொண்டிருப்பார். எதிர்வரும் வரவுசெலவு திட்டத்தில் அவர் சிறந்த பாடம் ஒன்றை படிப்பார். இப்போது 07:05 என அவருடைய செல்வாக்கு சரிந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் அது 10: 02 ஆக மாறும். அப்போது அவர் ஆசனத்திலிருந்து கீழிறங்கவேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Web Design by Srilanka Muslims Web Team