காரைதீவு தவிசாளரின் இனவாத செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டத்தரணி அன்ஸில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பகிரங்க மடல்..! - Sri Lanka Muslim

காரைதீவு தவிசாளரின் இனவாத செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டத்தரணி அன்ஸில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பகிரங்க மடல்..!

Contributors

2021.07.31

கௌரவ. திரு. இராஜவரோதயம் சம்பந்தன் (பா.உ)
தலைவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
திருகோணமலை.

திரு. மாவை எஸ். சேனாதிராஜா
தலைவர் – தமிழரசுக் கட்சி
யாழ்ப்பாணம்.

நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்களை நிந்தனைக்குட்படுத்தும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிரிஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் அவர்களின் முகநூல் பகிர்வு தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளல்.

எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. றிஷாத் பதியுதீன் அவர்கள் தெரிவித்ததாக அவரது புகைப்படத்தினையும் இட்டு சுநபiழெடன சுபi என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்த, நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்களை நிந்தனைக்குப்படுத்தும் பதிவொன்றினை தங்களது கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிரிஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் என்பவர் தனது முசளைnயிடைடயi துநலயளசடை எனும் முகநூல் பக்கத்தில் பகிர்ந்த விடயம் தொடர்பில் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

உலக மக்களுக்கு வழிகாட்டியான எமது உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உலகில் முதல் சிறுவர் துஸ்பிரயோகம் செய்த ஒருவராக எமது கட்சியின் தலைவர் கூறியதாக பதிவேற்றப்பட்டிருந்த அந்த முகநூல் பதிவினை பகிர்ந்தவர் ஒரு மந்த புத்திக்காரரோ, உலக அறிவற்ற ஒருவரோ அல்ல. தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் ஒரு பிரதேசத்தின் தலைமகன். அப்பிரதேச சபையின் தவிசாளர்.

அநியாயமான முறையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பயங்கரவாக தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, ஊடகங்கள் எதற்கும் கருத்து வெளியிட சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருக்கின்ற தலைவர் கௌரவ றிஷாத் பதியுதீன் அவர்கள் கூறியதாக பதிவேற்றப்பட்டிருந்த தகவலை புத்தியுள்ள எவரும் பகிர்ந்திருக்க முடியாது.

ஆனால், பொறுப்பு வாய்ந்த பதவியிலிருக்கும் தங்களது கட்சியினை பிரிதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் இவ்வாறான பதிவினை சமூக ஊடகமொன்றில் பகிர்ந்தமை உலக முஸ்லிம்கள் அனைவரையும் கேவலப்படுத்தும், ஆத்திரத்துக்குள்ளாக்கும் விடயமாகும்.

இஸ்லாமிய அடிப்படையில் ஒவ்வொரு முஸ்லிமும் தனது தாய், தந்தை, மனைவி, மக்கள், சொத்து, சுகம் என இவ்வாறான அனைத்தையும் விட தன்னை படைத்த ஏக இறைவன்அழ்ழாஹ்வையும் அவனது இறுதி தூதர் நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்களையும் நேசிக்க வேண்டிய கட்டாய கடமையுள்ளவர்கள்.

அவ்வாறு முழு முஸ்லிம்களினதும் நேசத்துக்குரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தூற்றும் செய்தியினை தங்களது கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் மேற்கொண்டமை இரு சமூகங்களுக்கிடையிலும் பாரிய பிளவு ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்துவிடும் ஆபத்து இருப்பதை தங்களது கவனத்திற்கு முன்வைக்கிறேன்.

இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்க காத்திருக்கும் சக்திகளுக்கு தூபமிடுவதாகவே இவரது இச்செயற்பாடு காணப்படுவதோடு, அவ்வாறான சக்திகள்; இவ்விடயத்தில் செயற்பட ஆரம்பித்திருப்பதனையும் தங்களது கவனத்திற்கு முன்வைக்கிறேன்.

தான் அறியாமல் குறித்த தவறு நடந்தேறிவிட்டதாக தற்போது தவிசாளர் ஜெயசிறில் சமூக ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை தெரிவித்தாலும் அதனை யாரும் நம்பத் தயாரில்லை என்பதனையும், சமூக ஊடகங்கள் வாயிலாக அவர் மறுத்துப் பேசிய பாங்கு இன்னும் முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் வகையிலேயே காணப்பட்டதனையும் தங்களின் கவனத்திற்கு முன்வைக்க விரும்புகிறேன்.

எவ்வாறாயினும் நாட்டின் சட்ட ஏற்பாடுகளுக்கமைவாக அவர்மீது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் உள்ளத்தால் வருந்தி தவிசாளர் கிரிஷ்ணபிள்ளை ஜெயசிறில் முஸ்லீம்ளிடம் பொது மன்னிப்பு கோருவதோடு, இரு சமூகங்களும் சுமூகமாக சௌஜன்யத்தோடு வாழ்கின்ற பிரதேச சபையொன்றின் தவிசாளராக பதவி வகிப்பதற்கான தார்மீக உரிமையை அவர் இழந்துள்ள நிலையில் அவர் பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலிருந்து விலகி ராஜினாமா செய்ய வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

எனவே இவ்விடயத்தில் தங்களது கட்சி சார்பில் மேற்படி நபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருத்தமான தீர்மானத்தினை மேற்கொள்வீர்கள் என எதிர்பார்ப்பதோடு, அவ்வாறான தீர்மானத்தினை தாங்கள் மேற்கொள்கையில் தங்களின் கட்சி சார்பில் காரைதீவு பிரதேச சபை விடயத்தில் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்களோடு சார்ந்து செயற்பட முடியும் என்பதனையும் தங்களுக்கு அறியத்தருகின்றேன்.

நன்றி

சட்டத்தரணி. எம்.ஏ. அன்ஸில்
காணி, நீர்ப்பாசனம், பாதுகாப்பு மற்றும் முரண்பாட்டுத் தீர்வுகளுக்கான பணிப்பாளர்
அம்பாரை மாவட்ட செயற்குழுத் தலைவர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

பிரதி: கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Web Design by Srilanka Muslims Web Team