காஷ்மீர் கல்வீச்சில் தமிழர் கொலை: ''எங்களது விருந்தினரைக் கொன்றுள்ளோம்''- ஒமர் அப்துல்லா » Sri Lanka Muslim

காஷ்மீர் கல்வீச்சில் தமிழர் கொலை: ”எங்களது விருந்தினரைக் கொன்றுள்ளோம்”- ஒமர் அப்துல்லா

stone

Contributors
author image

BBC

காஷ்மீரில் நடந்த கல்வீச்சு சம்பவம் ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில், “ஒரு சுற்றுலாப் பயணி சென்ற வாகனத்தின் மீது கல்வீசி கொன்றுள்ளோம், விருந்தினரைக் கொன்றுள்ளோம்” என ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த அவரது பெயர் ஆர்.திருமணி (22). நர்பல் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் ஏற்பட்ட கல்வீச்சில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டு சவுரா பகுதியில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டதாகவும் அங்கே சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் இறந்ததாகவும் போலீஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது.

அவர் குல்மார்க் என்ற இடத்தை சுற்றிப் பார்க்க ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது புட்காம் மாவட்டத்தில் அந்தப் பேருந்தின் மீது வீசப்பட்ட கல்லில் அவர் காயமடைந்ததாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்துவிட்டதாக இரவு 8 மணிக்கு அறிவிக்கப்பட்டது என்றும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

காவல் கண்காணிப்பாளர் வைத்தியா இந்த சம்பவத்தை உறுதி செய்ததாகக் கூறுகிறார் பிபிசி செய்தியாளர்.

ஒமர் அப்துல்லா செய்தி

சென்னையில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததற்கு ஆழமாக வருந்துவதாகவும், இந்த குண்டர்களை, அவர்களின் வழிமுறைகளை, கருத்தியலைத் தாம் ஆதரிக்கவில்லை என்றும் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றவர்கள் விரைவில் குணமடையவேண்டும் என்று மற்றொரு பதிவில் தெரிவித்துள்ள அவர், “ஜம்மு காஷ்மீர் அரசு தோற்றுப் போனது, முதல்வர் தோற்றுப் போனார், பாஜக-பிடிபி கூட்டணி தோற்றுப் போனது,” என்றும் பதிவிட்டுள்ளார்.

Web Design by The Design Lanka