கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளில் கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையங்கள் ஒரு வாரத்தில் அமைக்கப்படும்..! - Sri Lanka Muslim

கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளில் கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையங்கள் ஒரு வாரத்தில் அமைக்கப்படும்..!

Contributors

எப்.முபாரக் 

கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளில் கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையங்கள் ஒரு வாரத்தில் அமைக்கப்படும் என திருகோணமலை மாவட்ட செயலாளர் உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளில் உடனடியாக  கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என மாவட்ட செயலாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கிய எழுத்துமூல கோரிக்கைக்கு பதில் அளிக்கும்போதே மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கிய எழுத்து மூல கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

தற்பொழுது நாடு முழுவதும் பரவிவரும் கொவிட் 19 தொற்றானது எமது மாவட்டம் திருகோணமலையிலும் மிகவேகமாக பரவிவருவதுடன் தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்வதனையும் அறிவீர்கள், தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலையில் கொவிட்  19க்கு சிகிச்சையளிக்கும் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அதனை சூழவுள்ள கந்தலாவ,வட்டுக்கச்சி, வான் எல ஆகிய பிரதேச வைத்தியசாலைகளை  இடைநிலை சிகிச்சை நிலையங்களாக (ITC ) மாற்றுவதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். மேலும் எமது மாவட்டத்தில் குச்சவெளி, ஈச்சிலம்பற்று ஆகியவற்றோடு கோமரங்கடவலையும் இடைநிலை சிகிச்சை நிலையங்களாக செயற்பட்டுவருகின்றன, 

அதேவேளை கோவிட்  19 வேகமாக பரவிவரும் கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்களில் இதுவரை இடைநிலை சிகிச்சை நிலையங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை என்பதனால் இவ்விரு பகுதிகளிலும் விரைவாக அந்நிலையங்களை அமைப்பது அத்தியாவசியமாகின்றது. அந்த வகையில் கிண்ணியா,  குறிஞ்சாக்கேணி மற்றும் மூதூர் சுகாதார  வைத்திய அதிகாரிகளும், கிண்ணியா மூதூர் பிரதேச செயலாளர்களும் அப்பகுதி சிவில் அமைப்பினருடன் கலந்துரையாடி பின்வரும் இடங்களை  சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு சிபாரிசு செய்துள்ளனர்

கிண்ணியாவில் T.B ஜாயா மகா வித்தியாலயம் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ளதினால் அதனை ஆண்களுக்கான ITC ஆகவும் அதேபோன்று சுமையா மகளிர் அரபிக் கல்லூரியினை பெண்களுக்கான ITC ஆகவும் மாற்றுவதற்கும், மூதூரில் நஜீப் A. மஜீத் வித்தியாலயத்தையும், கிளிவெட்டி வைத்தியசாலையினையும் ITC ஆக மாற்றுவதற்கும் உரிய தரப்பினருடன் விரைவாக கலந்துரையாடி துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, இதற்கு மேலதிகமாகவும் ITCகள் அமைப்பதற்கு இடவசதி தேவைப்பட்டால் குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள மத ஸ்தலங்களையும் வழங்குவதற்கு சிவில் பிரதிநிதிகள் தயாராக உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   இதன் பிரதிகள் மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி பணிப்பளார் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team