கிந்தோட்டை விவகாரம் ; முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த சாகல ரத்நாயக்க » Sri Lanka Muslim

கிந்தோட்டை விவகாரம் ; முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த சாகல ரத்நாயக்க

gin

Contributors
author image

ஊடகப்பிரிவு

அ அஹமட் 
ஊடக செயலாளர் 
முஸ்லிம் முற்போக்கு முன்னனி 


கிந்தோட்டை விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய வினாவுக்கு சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க அளித்துள்ள பதிலானது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போன்றதாகும்.

நேற்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கிந்தோட்டை விவகாரம் தொடர்பில் கடுந் தொணியில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் வழங்கிய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, அங்கு பொலிஸாரும் முப்படையினரும் பொறுப்புடன் செயற்பட்டதாகவும் எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு மீளப்பெறப்படவில்லை என கூறியிருந்தார்.

கிந்தோட்டையில் முஸ்லிம்கள் மீதான இனவாதிகளின் தாக்குதல்களுக்கு பாதுகாப்பு படையினர் அனுமதி வழங்கியதையும் அவர்களே முன்னின்று செய்ததையும் அந்த பகுதி மக்கள் கண்ணுற்றதாக சாட்சியம் கூறுகின்றனர். பொலிஸ் மா அதிபர் கூட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பை நிலைநாட்ட தவறிவிட்டதாக ஏற்றுக்கொண்டுள்ளார். அரசுக்கு சார்பான முஜீபுர் ரஹ்மான் மற்றும் அஸாத்சாலி போன்றவர்கள் கூட கிந்தோட்டையில் பாதுகாப்பு மீளபெறப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இவ்வாறான நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலுள்ளவாறு பதிலளித்துள்ளதானது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயற்பாடாகும்.

இப்படி நாகூசால் பொய் சொல்வது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. சில மாதங்கள் முன்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளுத்கமைக்கு நீதி நிலை நாட்டப்பட்டுவிட்டதாக கூறி பலத்த கண்டனத்தை பெற்றிருந்தார். ஒருவர் தங்களது பிழைகளை ஏற்றுக்கொண்டால், அடுத்த முறை இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது அதனை தடுக்க முயல்வார்.

அவ்வாறில்லாது பொய்களை கொண்டு பூசி மெழுகுபவர்கள், இதன் பின்னர் ஏதாவது சம்பவங்கள் இடம்பெறும் போது வேடிக்கை தான் பார்ப்பார்கள். இவர்கள் தொடர்பில் முஸ்லிம்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

Web Design by The Design Lanka