கிராமிய வீடமைப்பு திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு குறித்து பிரதமர் ஆலோசனை - இவ்வாண்டில் 14022 வீடுகள் நிர்மாணிக்க திட்டம், இதுவரை 1917 வீடுகள் நிர்மாணிப்பு - Sri Lanka Muslim

கிராமிய வீடமைப்பு திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு குறித்து பிரதமர் ஆலோசனை – இவ்வாண்டில் 14022 வீடுகள் நிர்மாணிக்க திட்டம், இதுவரை 1917 வீடுகள் நிர்மாணிப்பு

Contributors

கிராமிய வீடமைப்பு திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (2021.03.12) ஆலோசித்தார்.

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாடு இராஜாங்க அமைச்சின் விசேட முன்னேற்ற மீளாய்வில் கலந்துக் கொண்ட பிரதமர் இவ்விடயம் குறித்து அவதானம் செலுத்தினார்.

செத்சிறிபாயவில் உள்ள புத்தசாசனம், மத விவகாரம் மற்றும் கலை கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த விசேட முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இடம் பெற்றது.

அனைவருக்கும் வீடு மற்றும் நிலையான நிர்மாண வேலைத்திட்டம் என்ற தொனிப் பொருளுக்கு அமைய தமது இராஜாங்க அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெளிவுப்படுத்தினார்.

கிராமிய வீடமைப்புக்கு மேலதிகமாக நிர்மாணத்துறை மற்றும் கட்டிடத்துறையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் அவதானம் செலுத்தினார்.

உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம் என்ற வீடமைப்பு திட்டத்துக்கு அமைய 2020ஆம் ஆண்டில் 6745 கிராமிய வீடுகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அரசாங்கம் 5257 மில்லியன் நிதியை செலவிட்டுள்ளது.

இந்த கிராமிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் 2021ஆண்டில் 14022 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றிவ் 1917 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக மகா சங்கத்தினரது பெற்றோருக்கான மிஹிது வீடமைப்பு செயற்திட்டம் குறித்தும் பிரதமர் கவனம் செலுத்தினார்.

இதற்கமைய, அந்த செயற்திட்டத்தின் கீழ் 2000 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இவற்றில் 50 வீடுகளின் நிர்மாண பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பிரதமருக்கு தெரிவித்தனர்.

தேசிய வீடமைப்பு அதிகார சபை, ஓசன் விவ அபிவிருத்தி தனியார் நிறுவனம், நிர்மாணத்துறை அபிவிருத்தி அதிகார சபை, அரச தொழிற்சாலை அதிகார சபை, கட்டிட பொருட்கள் கூட்டுத்தாபனம், கட்டிட பொருட்கள் திணைக்களம், அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய இயந்திர நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆலோசித்தார்.

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, கட்டிட பொருட்கள் தொழிற்சாலை மேம்பாடு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, பிரதமரின் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, மேலதிக செயலாளர் பேராசிரியர் எம்.எம்.எஸ்.பி. யாலேகம, இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிங்க, மேலதிக செயலாளர் புஸ்பா எதிரிசிங்க, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரேனுக பெரேரா, அரச பொறியியலாளர் கூட்டுதாபனத்தின் தலைவர் ஆர். களுபாஹன, கட்டிட பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மகேந்திர விஜயசேகர ஆகியோரும், இராஜாங்க அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களின் பிரதானிகளம் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team