கிழக்கில் ஒரு பெருநாள் இரவு (கவிதை) » Sri Lanka Muslim

கிழக்கில் ஒரு பெருநாள் இரவு (கவிதை)

rid

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


பால் போத்தல் வாயுடன்
பைக்கில் ஏறி
வேலையில்லாமல்
வேகமாய் ஓடுவார்.
போணைப் பிடித்து,
ஹோர்ணை அடித்து
போகிற போக்கில்
புழுதி கிளம்பும்.

ஆட்டிறைச்சிக் கடையில்
ஆட்டம் தொடங்கும்
கூட்டம் நெருக்கி
‘காட்டா’வில் தொங்கும்.
(காட்டா -தராசு)
மட்டன் கடையில்
மாட்டி வெளிவந்தால்
மரக் கறிக் கடையில்
மறுஹா மாட்டுவார்

கோவா கேட்பவர்
கோபமாய்க் கேட்பார்
போஞ்சி கேட்டே
தேஞ்சி போவர்
நிறுத்து நிறுத்து
நிறுத்தாமல் நிறுத்து
வெறுத்துப் போகும்
வேலைப் பொடியனுக்கு.

டைலர் காலால்
பைலட்டாய் பறப்பார்.
சலூனில் கூட்டம்
பலூன் போல் ஊதும்.
வண்ணானின் கடையில்
என்னா நெருக்கடி
சாரண் அயர்ன் பண்ண
பூராணாய் நெளிவார்.

ஹதியாக் காச
கெதியாத் தா என
வெளியூர்க் கூட்டம்
வேகம் எடுக்கும்.
ஓடர் புரியாணிக்கு
ஓடித் திரியும்
புக் பண்ன மறந்த
பக்கிகள் கூட்டம்.

அம்பிளிபயரின்
அம்பட்டு சவுண்டிலும்
திக்ரு செய்ய
திக்கென்று இருக்கும்.
வாழ்த்துப் போட்டே
வட்ஸ் அப் அதிரும்
ஈத் முபாரக்கால்
இதயங்கள் மகிழும்.

பெரு நாள் இரவு
பிஸியான் இரவு
மறு நாள் உள்ள
மகிழ்வான விடயத்தை
நினைத்து நினைத்து
நிறைய வேலைகள்
அனைத்து உள்ளங்களுக்கும்
அன்பான ‘ஈத் முபாரக்’.

Web Design by The Design Lanka