கிழக்கு மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டனரா? » Sri Lanka Muslim

கிழக்கு மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டனரா?

risha

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ச.துறை மகன் முர்சித்


அண்மைக்காலமாக சில முஸ்லிம் கட்சிகளில் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் தலைமையில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும் அவர்களது பிரதிநிதிகளின் மக்கள் ஆணையை மீறிய செயற்பாடுகளும் கிழக்கில் புதிய மாற்றமொன்றிற்கான தேவைப்பாட்டை பெரிதும் உணர்த்தியிருந்தது. அந்த உணர்வு பெரும் அதிர்வலையாக மக்கள் மனங்களில் வியாபித்துக்கொண்டிருக்கிறது.

இம்மாற்றத்திற்கான அறைகூவலை பலரும் முன்வைத்திருந்தனர், புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் மக்கள் ஒரு தீட்சண்யமிக்க இலக்கையும் செயற்பாடுகளையும் உடைய சக்திமிக்க மாற்று அணியொன்றை எதிர்பார்த்திருந்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது தூரநோக்கானதும் திடமானதுமான செயற்பாடுகளினை நாடு முழுவதும் பரந்துபட்டு விஸ்தரிக்கத் துவங்கியுள்ள இவ்வேளை மக்களின் அங்கீகாரம் இவ்வணிக்கு கிடைத்துள்ளதை அண்மைக்கால மக்களின் நடவடிக்கைகள் தெளிவாகப் புடம்போட்டுக் காட்டுகின்றன.

கிழக்கில் அடிக்கல் விளம்பரத்திற்காக நிதியினை செலவு செய்து ஏமாற்றி. இதுவரை தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை தீர்க்காமல் மீண்டும் தேர்தல் கால சூறாவளிப் பயணங்களில் வியூகம், யுக்தி, சாணக்கியம், தந்திரம் போன்ற விதவிதமான கட்டுக்கதை மூட்டைகளுடன் கிழக்கில் வந்திறங்கி தங்களின் இயலாத்தன்மையை பூசி மெழுகி மக்களை மூளைச்சலவை செய்கின்ற சாணக்கிய சித்து வேலையை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். பேச வேண்டிய பொழுதுகளில் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தாத இவர்கள் வெற்று வெளிகளில் அமைக்கப்பட்ட தேர்தல் மேடைகளில் மட்டும் பேசி மூச்சிறைக்கின்றனர்.

தற்போது தங்கள் அனைத்து அஸ்திரங்களையம் பாவித்துச் சலித்துப் போன இவர்கள் மக்களைக் குழப்புவதற்காக தனிமனிதத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளனர், சமூகவலைத்தள கூலிப்பணியாளர்களைக் கொண்டு சவால் மிக்க மாற்று அணியினரைச் செல்வாக்கிழக்க வைக்கும் நகர்த்தல்களை மேற்கொள்ள முனைந்து வருகின்றனர்.

என்றாலும் அண்மைக்கால தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் வழங்கியுள்ள அங்கீகாரங்களை வைத்துப் பார்க்கும் போது கிழக்கு மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எனும் மாற்றுச் சக்தியின் தேவையை உணர்ந்துள்ளமையினை தெளிவாக அவதானிக்க முடிகின்றது.

சம்மாந்துறையின் தேர்தல் களம்..

பல தேர்தல்களில் சம்மாந்துறை மக்கள் விரும்பிய மக்களின் சேவகனான நௌசாட் அவர்கள் காலத்தின் தேவையுணரந்து அ.இ.ம.கா. இணைந்து தேர்தலில் போட்டியிருகின்றார். இவருடன் முன்னாள் பாராளுமன்ற வேட்பாளர் இஸ்மாயீல், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அமீர் போன்றோரும் பக்கபலமாய் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒற்றுமையான சக்திமிக்க இக்கூட்டணி சேவை நாட்டமுடைய ஒரு சிறந்த வேட்பாளர் குழுவுடன் இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவ்விடயத்தில் அச்சமுற்ற மாற்று அணியினர் நௌசாட்டின் தனிப்பட்ட செல்வாக்கிலும். வேட்பாளர் குழுவினரின் மக்கள் ஆதரவின் மீதும் அதிருப்தியை உண்டாக்கும் முயற்சிகளில் விமர்சித்து வருகின்றனர். ஆனால் மக்கள் விழிப்புடன் உள்ளனர்.

அ.இ.ம.கா இன் அபிவிருத்தித் திட்டத்தின்படி சம்மாந்துறையில் அமைக்க எதிர்பார்க்கப்பட்ட கைத்தொழில் பேட்டை உட்பட பல அபிவிருத்திச் செயற்திட்டங்கள் விஷமிகளின் குறுகிய அரசியல் நோக்கங்களினால் தடைப்பட்டிருந்தன. இந்தப் பின்னணியிலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்த மாற்றத்தை நிகழ்த்திக்காட்டும் ஆர்வத்திலும் மக்கள் எதிர்வருகின்ற தேர்தலை வினைத்திறனுடன் பயன்படுத்தக் காத்திருக்கின்றனர்.

இது வரையான சம்மாந்துறை பிரதேச சபையின் வரலாற்றில் பெறுமதியான சேவைகள் ஆற்றியுள்ள முன்னாள் தவிசாளர் நௌசாட் அவர்களை சம்மாந்துறை மக்கள் மீள தேர்தெடுக்க தயாராகியுள்ளமையை
கடந்த பொதுக்கூட்டத்தில் பெருமளவில் திரண்ட சம்மாந்துறை ஆதரவாளர்களைக் கொண்டு உணர்ந்து கொள்ள முடிகின்றது.

பிரதேசவாதம், இனவாதம் என்பவற்றால் கடந்தகாலங்களில் ஏற்பட்ட கசப்புணர்வுகளை அகற்றி ஒற்றுமையான ஒரு ஊரினை கட்டியெழுப்பும் தூரநோக்குள்ள ஆளுமைகள் இம்முறை போட்டியிடுகின்றமை அ.இ.மகா இன் வெற்றியை சாத்தியப்படுத்தும் என்று அவதானிகள் கருத்துச் தெரிவிக்கின்றனர்.

நிந்தவூர் மைய அரசியல்..

இங்கு காலாகாலமாக அசைக்கமுடியாத சக்தியாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் எனும் மரம் அக்கட்சியின் தலைமையாலயே யானையைக்கொண்டு பிடிங்கி வீசப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் முதுசமாக கருதப்படும் மு.காவின் முன்னாள் செயலாளர் நாயகத்தின் அதிகாரங்களை கண்மூடித்தனமாக பறித்தெடுத்து போலிவாக்குறுதிகளால் ஏமாற்றி தான்தோன்றித்தனமாக கட்சியை விட்டும் அதன் தலைமை வெளியேற்றியது நிந்தவூர் ஆதரவாளர்களிடம் மட்டுமல்லாமல் முழு சமூகத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் மீதும் அதன் தலைமை மீதுமிருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கட்சியை விட்டு வெளியேறிய நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவருடைய கடந்தகால சேவைகளாலும் அவர் ஹசன் அலிக்கு பக்கபலமாக செயற்படுவதாலும் அவர்மீது நிந்தவூர் மக்களின் நம்பிக்கை மேலோங்கி வருகின்றது.

பலமிக்க பிரதி அமைச்சர் ஒருவர் மு.காவின் பிரதிதியாக நிந்தவூரில் இருந்தாலும் மக்கள் குடும்ப அரசியலை வெறுத்து, தேசிய அரசியலைப்போலவே உள்ளூர் அரசியலிலும் மாற்றத்தை நோக்கி நகர்கின்றமையும் குறித்த பி.அமைச்சர் தலைமை மீதான குற்றச்சாட்டுகளை கண்டும் காணாமலும் இருப்பதும் ஒரே ஊரைச்சேர்ந்த முன்னாள் செயலாளர் நாயகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக வாய்மொழி திறக்காமல் தலைமைக்கு விசிறியாக இருப்பதும் நிந்தவூர்மக்கள் பிரதியமைச்சர் மீது அதிருப்திகொள்ளச்செய்துள்ளது அதன் பிரதிபலிப்பினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக கலந்துகொண்டு ஊர் மக்கள் வழங்கிய அங்கிகாரத்தினை வைத்து கணித்துக்கொள்ள முடியும்.

கல்முனை அரசியல் நிலவரம் ..

மு.காவின் ஆணிவேராக இருந்த கல்முனை மக்கள் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கமாக சாய்வதை மு.காவின் மூத்த போராளி ஜவாத் உள்ளிட்டவர்கள் அ.இ.ம.காவில் இணைந்து கொள்வதனூடாக பார்க்ககூடியதாகவுள்ளது.

சாய்ந்தமருது -கல்முனை பிரிப்பு விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் விலாங்குத்தனமாக நடந்துகொண்டமையால் சாய்ந்தமருது மக்களிடத்தில் மட்டுமல்லாமல் கல்முனை மக்களிடமும் முஸ்லிம் காங்கிரஸ் மீதும் அதன் தலைமை மீது வெறுப்பு மேலோங்கிக்கொண்டுள்ளது..

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு எதிராக சாடிவரும் மு.கா சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளை பெரிதும் காயப்படுத்தியுள்ளமை இக்கட்சியின் நிகழ்கால ஆதரவில் பலமான சரிவை எற்படத்தியுள்ளமையினை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இவ்வூர்களில் மட்டுமல்லாமல் பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, இறக்காமம் என அனைத்து ஊர்களிலும் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு பல காரணங்களால் சரிவை சந்தித்துக்கொண்டுள்ளது.

மொத்தமாக பார்க்கும்போது..

அம்பாறை மாவட்டத்தின் தேர்தல் பிரச்சார களநிலவரங்களைக் கொண்டு ஆராய்கின்ற போது, மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் இருக்கும் போது அவர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்கள் எவ்வாறு சனத்திரளாக சோபிக்குமோ அதுபோலவே சமகாலங்களில் கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களிலும் சனத்திரளால் சோபிக்கின்றன.

மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் மீது அன்றும் இன்றும் இளைஞர்கள் கொண்டுள்ள பற்றுதல் மற்றும் கவர்ச்சியைப்போலவே இன்று அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதான அபிமானம் அதிகரித்துச்செல்வதை சமூக வலைத்தளங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களினூடாக பார்க்கமுடிகிறது.

இதே போக்கில் அரசியல் நகர்வுகள் செல்லுமேயானால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் அம்பாரை மாவட்டம் உள்ளிட்ட முழு கிழக்கு இலங்கையில் துடைத்தெறியப்பட்டு மாற்று தலைமையாகவும் மாற்று கட்சியாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன்னையும் அவருடைய கட்சியையும் மக்கள் கொண்டாடுவர் என்பதில் ஐயமில்லை.

கிழக்கில் புது மாற்றம் – நமக்காய் ஒளிவீசும்
இன்ஷா அல்லாஹ்

Web Design by The Design Lanka