கிழக்கு மாகாணத்திற்கு வெளியே உள்ள முஸ்லிம் மக்களின் சிந்தனைக்கு.. » Sri Lanka Muslim

கிழக்கு மாகாணத்திற்கு வெளியே உள்ள முஸ்லிம் மக்களின் சிந்தனைக்கு..

question

Contributors
author image

நன்றி - அனுப்புனர்


ஏ.எல்.ஜுனைதீன்,

கிழக்கு மாகாணம்


எமது இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே சிங்கள மக்களுக்கு மத்தியில் சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்கள் தமது எதிர்கால அரசியலை எவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சிந்தித்து ஒரு முடிவுக்கு வரல் வேண்டும்.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான அண்மைய கண்டிப் பிரதேச தாக்குதல் அங்குள்ள முஸ்லிம்களின் அரசியல் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது.

சிங்கள மன்னர் காலத்தில் பெளத்த மக்களால் மதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் திட்டத்தினாலும் புதிய சிறிய கட்சிகளின் தோற்றங்களினாலும் இன்று சந்தேகப்படும் மக்களாக மாறிவிட்டார்கள்.

கடந்த காலங்களில் பொரளைத் தேர்தல் தொகுதியிலிருந்து எம்.எச்.முஹம்மத், ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியிலிருந்து ஏ.ஸி.எஸ்.ஹமீத், பலாங்கொடைத் தேர்தல் தொகுதியிலிருந்து அபூசாலி, பேருவளை தேர்தல் தொகுதியிலிருந்து எம்.ஏ. பாக்கீர் மார்க்கார், புத்தளம் தேர்தல் தொகுதியிலிருந்து நைனா மரைக்கார் மற்றும் ஹலீம் இஸாக், ஏ.ஆர்.எம்.அப்துல் காதர், ஏ.எச்.எம்.பெளஸி போன்றோர் முஸ்லிம்களாக இருந்தும் சிங்கள மக்களின் வாக்குகளால்தான் நாடாளுமன்றம் சென்றார்கள்.

ஆனால், இன்று அப்படியான ஒரு மன நிலையில் சிங்கள மக்கள் இல்லாத சூழ்நிலையை புதிய சிறிய கட்சிகளின் தோற்றங்கள் உருவாக்கிவிட்டன. வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கமாக இனரீதியான பேச்சுக்களை சுநல அரசியல்வாதிகள் மேடைகளில் பேசியதினால் சகலரும் இனரீதியில் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.

கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் நிலைமை வேறு  கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழும் முஸ்லிம் மக்களின் நிலைமை வேறு
கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழும் முஸ்லிம் மக்கள் இந்நிலையிலிருந்து விடுபட சிந்தித்து சரியான முடிவுகளை எடுத்து செயல்படவேண்டியது அவசியமாகவுள்ளது.

தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலையைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே சிங்கள மக்களுக்கு மத்தியில் சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்கள் தங்கள் அரசியல் பிரதிநிதிகளாக முஸ்லிம் மக்களோடு அன்பு காட்டக்கூடிய, முஸ்லிம் மக்களுக்கு குரல் கொடுக்கக்கூடிய பெரும்பான்மை இன மக்களையே தெரிவு செய்யவேண்டியது அவசியமாகின்றது. இதன் மூலம் முஸ்லிம் மக்கள்மீது சிங்கள மக்கள் கொண்டுள்ள சந்தேகத்திற்குப் பரிகாரம் காணமுடியும்.

சிங்கள மக்களுக்கு மத்தியில் சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்கள் தங்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக பிரதேசங்கள் தோறும் அப்பிரதேச உலமாக்கள், கல்விமான்கள் அடங்கிய குழுக்களை உருவாக்கி அந்தக் குழுக்கள் மூலமாக சிங்கள, முஸ்லிம் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளிடம் தீர்வைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

இதனால், சிங்கள மக்கள் அங்குள்ள முஸ்லிம் மக்களையும் அரவனைத்துச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். முஸ்லிம் மக்கள் மீதுள்ள சந்தேகங்கள் ஓரளவு நீங்கி, பரஸ்பரம் ஒற்றுமையும் ஏற்படும்.

இதைவிடுத்து எமது கட்சி, எமது தலைவர் என்று முட்டாள்தனமாகச் சிந்தித்து சுயநல அரசியல்வாதிகளின் பேச்சுக்களை நம்பி கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்கள் செயல்படுவார்களேயானால் எதிர்காலத்தில் அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்களின் நிலைமை மேலும் மோசமடையலாம்.
இது குறித்து அப்பிரதேசங்களிலுள்ள உலமாக்கள், அறிஞர்கள் இன்னும் மேலாகச் சிந்தித்து சரியான முடிவுக்கு வரமுடியும்.

ஒரு சிலர் அமைச்சுப் பதவிகளைப் பெற வேண்டும், சொகுசாக தொடர்ந்து வாழவேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாணத்திற்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் பழியாகக்கூடாது.
கிழக்கு மாகாணத்திற்கு வெளியே உள்ள முஸ்லிம்களே!
சிந்தியுங்கள்!! செயல்படுங்கள்!!!

Web Design by The Design Lanka